இலங்கைத்தீவில் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு என்பது ஒரு உள்நாட்டு விவகாரம் என இன்னமும் யாராவது கூறிக்கொண்டிருப்பார்களேயானால் அவர்களையிட்டு நாம் சிரத்தை கொள்ளத் தேவையில்லை. இருப்பினும் தங்களது வசதி கருதி சில நாடுகள் இன்னமும் இப்படிக்கூறி தங்களது பொறுப்புக்களை தட்டிக்கழித்துக்கொண்டு மறுபுறம் சிறலங்கா அரசுடன் உறவுகளைப் பேணி தமது வர்த்தக, பிராந்திய நலன்களை பேணிவருகின்றன.
இப்பிரச்சனையானது சர்வதேச அரங்கில் விவாதிக்கப்படும் விவகாரமாக இருக்கின்றபோதும், பொருளாதார இராணுவ மேலாதிக்கத்தைக் கொண்டுள்ள வல்லாதிக்க நாடுகள் சரியான அணுகுமுறையை கொண்டிருக்கவில்லை என்பதே இப்போதுள்ள சோகம். இங்கு அவை யார் பக்கம் சார்ந்து செயற்படவேண்டும் என்பதல்ல, அவை மனிதவுரிமைகள், யுத்தவிதிகள் என சர்வதேச விதிமுறைகளின்படி நடந்துகொள்ள வேணடும் என்பதே ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இக்கருத்து நிலையை ஒட்டியதாகவே தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களது மாவீரர்தின உரை அமைந்ததில் வியப்பெதுவுமில்லை. ஆண்டுக்கொருமுறை அவர் வழங்கும் இந்த கொள்கைவிளக்க உரையானது இம்முறை சர்வதேச சமூகத்தை, குறிப்பாக மேற்கத்தைய வல்லாதிக்க நாடுகளை நோக்கியதாக இருந்தது. அவர் அதிரடியான அறிவிப்பு எதனையும் செய்யவில்லை. மாறாக அரசியல் முதிர்ச்சியுடன் இராசதந்திர நடைமுறைகளை பின்பற்றுவதாகக் காணப்பட்ட அவரது உரையானது, உருவாகும் தேசத்திற்கு அங்கீகாரத்தை வேண்டி நிற்பதாக இருந்தது.
ஒருதலைப்பட்சமான தனிநாட்டு பிரகடனத்தை அவர் வெளியிடுவார் அல்லது சிறிலங்கா அரசுடன் செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகும் அறிவிப்பை வெளிவிடுவார் என எதிர்பார்த்தவர்களுக்கு வேண்டுமானால் தலைவரது உரை ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம். ஆனால் அவரது உரையில் ஆழப்பொதிந்திருக்கும் கருத்துக்களை உலகத்தமிழினம் உள்வாங்கிக் கொள்ளுமானால், விரைந்து செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசு மீதோ, சிங்களத்தலைவர்கள் மீதோ தலைவர் கவனம் செலுத்தவில்லை. அதற்கான அவசியமும் இப்போது இல்லை. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் உள்ள நியாயத்தன்மையை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருக்கிறது. சிறிலங்கா அரசை புறந்தள்ளிவிட்டு சர்வதேச சமூகத்தின் முன் வந்துள்ளமையானது தமிழீழ போராட்டம் இறுதிக்கட்டநிலைக்கு சென்றுவிட்டது என்பதை உணர்த்துவதாகவே உள்ளது.
இங்கு அரசியல் நேர்மையுடன் சர்வதேச சமூகம் செயற்படும் எனின் இலங்கை தீவில். இரண்டு தேசங்களாக நிரந்தர அமைதி தோன்றுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம்.
Recent comments
13 hours 6 min ago
1 day 20 hours ago
2 days 19 hours ago
3 days 20 hours ago
4 days 20 hours ago
5 days 21 hours ago
1 week 20 hours ago
1 week 2 days ago
1 week 3 days ago
1 week 4 days ago