பண்டாரவன்னியன் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு - கிட்டத்தட்ட நானூறு
ஆண்டுகளுக்குப் பிறகு - வன்னி நிலப்பரப்பானது தமிழர்களின் ஆளுகைக்குள்,
கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இருந்து வருகின்றது.
ஆனாலும் வன்னியை ஒரு நாடாக தமிழர்கள் கூட கூறுவது குறைவாகவே உள்ளது. இது ஏன்?
நானூறு ஆண்டுகளுக்குள் உலக நடைமுறையும் மிகப் பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளதுவே
இதற்கான காரணமாகும். அதாவது, இன்றைய உலக ஒழுங்கில் ஒரு நாடு, நாடாகக்
கொள்ளப்படுவதற்கு அது மற்றைய நாடுகளினால் அங்கீகரிக்கப்படுவது அவசியமாகிறது.
தமிழீழத்தைப் போன்ற மேலும் பல நாடுகள் அல்லது தேசிய இனங்கள், அந்நிய
ஆக்கிரமிப்பால் சிதைவடைந்து, மீண்டும் ஒரு நாடாக முயன்றபோதும், உலகநாடுகளின்
ஆதரவு அல்லது அங்கீகாரம் இல்லாதமையால், இன்றும் வேறு நாடுகளின் ஆட்சியின் கீழ்
இருக்கின்றன. இவற்றுக்கு எண்ணிலடங்காத உதாரணங்கள் உள்ளன. எனினும் சில நாடுகள்
தமது முயற்சியினாலும் பலத்தாலும் நடைமுறை ரீதியில் ஒரு அரசை அமைத்துள்ளன.
அவ்வாறான முழுமையான அங்கீகாரம் கிடைக்கப்பெறாத, ஆனால் நடைமுறையில் ஒரு தனி
அரசாங்கத்தை கொண்ட நாடுகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்: அப்காசியா, பூட்டான்,
இஸ்ரேல், பாலஸ்தீனம், நகோனோ கரபா (Nagorno-Karabakh), தாய்வான், சராவி ஜனநாயக
அரபுக் குடியரசு (Sahrawi Arab Democratic Republic), சோமாலிலாண்ட்(Somaliland),
தெற்கு ஒசேற்றியா (South Ossetia), டிரான்ஸ்நிஸ்ரியா (Transnistria), வட
சைப்பிரஸ் (Northern Cyprus) ஆகியவை.
இனிவரும் காலங்களில் மேற்சொன்ன ஒவ்வொரு நாடுகளைப் பற்றியும் சிறு குறிப்புக்களை
தரவுள்ளோம்.
*அப்காசிய நடைமுறை அரசு*
ஜோர்ஜியாவின் வட பகுதியில் ரஸ்யாவை வட எல்லையாகக் கொண்ட பிரதேசமாக அப்காசியா
விளங்குகின்றது. கிட்டத்தட்ட 8000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட இந்தப்
பிரதேசத்தின் சனத்தொகை 250,000 ஆகும். தமிழீழத்தை விட அளவிலும் சனத்தொகையிலும்
மிகச் சிறியதாக இந்தப் பிரதேசம் இருக்கிறது. எனினும் நான்கு மில்லியன்
சனத்தொகையை கொண்ட ஜோர்ஜியாவின் இராணுவத்தை வென்று 1993ம் ஆண்டில் தனியரசினை
நிறுவிக்கொண்டனர். அண்டை நாடான ரஸ்யாவின் ஆதரவும் துணையும் இருந்ததே இவர்களின்
இராணுவ வெற்றிக்கான காரணமாகும்.
சர்வதேச அங்கீகாரம் இல்லாதிருந்த போதிலும் ரஸ்யாவின் ஆதரவு இருப்பதால்
அங்கீகாரம் இல்லாத அப்காசிய தனியரசை நடைமுறைப்படுத்த முடிகின்றது. ரஸ்யாவின்
நாணயமான ரூபிளே இங்கும் புழக்கத்திலுள்ளது. தமிழீழத்தைப் பொறுத்தவரை
பொருளாதாரத்தில் இந்தியாவை நம்பியிருக்க வாய்ப்புக்கள் குறைவாயுள்ள பட்சத்தில்
பொருளாதாரத்தில் தன்னிறைவை காணவேண்டியவர்களாக உள்ளனர். எனினும் சிறிலங்காவின்
பொருளாதாரத்தை முடக்குவதை நோக்கமாக கொண்டுள்ள நிலையில், சிறிலங்காவின் ரூபாயையே
தொடர்ந்தும் புழக்கத்தில் கொண்டிருப்பது தற்போது ஒரு முரணாகவே (conflict of
interest) நோக்கப்படக்கூடியது. விரைவில் தமிழர் தமது எதிர்கால நலன்களுக்கு
சாதகமான ஒரு நாணயத்தை புழக்கத்திற்கு கொண்டுவருவது அவசியமாகும். தமிழர்
பாவிக்கக் கூடிய நாணயமாக இந்திய ரூபாய், கனேடிய வெள்ளி, அமெரிக்க வெள்ளி, யூரோ
ஆகியவற்றிலொன்றை கருதலாம். இந்திய நாணயத்தையே நாமும் பாவிப்பதனால், எமக்கும்
இந்தியாவிற்கும் இடையே உள்ள உறவுகள் மேலும் பலமடைந்து அபிவிருத்தியடைய நிறைய
வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் வாழும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தமிழர்கள்
வழங்கக் கூடிய அன்னிய செலாவணியை கருதும்போது இந்திய ரூபாயை பாவிப்பதால் இந்தியா
அடையக்கூடிய நன்மைகளை யாரும் மறுப்பதற்கில்லை என்பதால், இது இரு தரப்பும்
நன்மையடையக்கூடிய (mutually benefidial) ஒரு திட்டமாகும். கனடா மற்றும்
ஐரோப்பாவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளும்போது கனேடிய
வெள்ளி மற்றும் யூரோவும், அமெரிக்க வெள்ளியின் வலிமை மற்றும் எல்லா நாடுகளாலும்
பாவிக்கப்படுகிற தன்மையை கருதும் போது அமெரிக்க டொலரும் பொருத்தமானவையாக
தென்படுகின்றன (potential candidates.) மேலும் தமிழீழத்தின் தற்போதைய பொருளாதார
நிலையை கருதும்போது இந்த நாணயங்கள் உள்ளூர் புழக்கத்திற்கு பலம் கூடியது
என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது அப்காசிய தனியரசானது உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படுவதற்கான சாத்தியம்
மிகக் குறைவாகவேயுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட'
சர்வதேச நலன்களுக்கு' இசைவாக இதன் உருவாக்கம் இல்லை. மேலதிகமாக ரஸ்யாவின்
ஆதரவில் அரசமைத்துள்ளது என்ற அரசியல் கறுப்புப் புள்ளியையும் கொண்டிருக்கிறது.
ஆனால் இதேபோல தமிழீழத்தின் உருவாக்கத்தை மூர்க்கத்தனமாக எதிர்ப்பதற்கு
மேற்குலகிற்கும் சரி எமது அண்டை நாடான இந்தயாவிற்கும் சரி எந்த விதமான தேவையும்
இருப்பதாகத் தெரியவில்லை. மேற்குலகு மற்றும் இந்தியாவின் நிலைப்பாடுகள் தமது
சில அனுகூலங்களை மட்டும் மையப்படுத்தியதாக மட்டுமே இருக்கும். எதிர்காலத்தில்
அந்த அனுகூலங்கள் தமக்குச் சாதகமாக உறுதி செய்யப்படும்போது அவை தமது
அங்கீகாரத்தை வழங்குவதற்கான சாத்தியங்களே தென்படுகின்றது. அந்த வகையில்
பார்க்கும்போது அப்காசியாவைப் போல தனியரசை அமைத்த பின்னர் அங்கீகாரத்திற்காக
திணறவேண்டிய நிலை தமிழீழத் தனியரசுக்கு ஏற்படுவதற்கான சாத்தியமென்பது மிகவும்
குறைவாகவேயுள்ளது.
இதுவரை கால உலக வரலாற்றில், ஒருநாடு நிலையான குறித்த எல்லை வரையறைகளுடன்
இருந்ததில்லை. உலக ஒழுங்குக்கேற்ப தனித்துவமான பிரதேசங்கள் தனி நாடுகளாக
உருவாவதும் பல நாடுகள் தமது அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்காக சேர்ந்து
ஒருமித்த அலகாக இயங்குவதும் தொடர்ந்து நடைபெறும். தமிழீழம் தன்னிறைவான தனிநாடாக
உருவாவதும் அது தொடர்ந்து நிலைத்து நிற்பதும் தமிழர்களின் அரசியல், பொருளாதார,
மற்றும் இராணுவ வலிமையிலேயே தங்கியுள்ளது. அந்த வலிமையை உறுதி செய்வது
புலம்பெயர்ந்த தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
Recent comments
2 weeks 6 days ago
7 weeks 5 days ago
8 weeks 22 hours ago
10 weeks 5 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
22 weeks 5 days ago
22 weeks 5 days ago
22 weeks 6 days ago