Pizza தின்ன பிரித்தானியாவுக்கு வந்த கருணா ..

by:
எழுபரிதி

தணிந்துபோயிருந்த கருணா விவகாரம், அவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் சுடு பிடித்துள்து. முன்னர் கருணாவை கிழக்கின் விடிவெள்ளியாகப் பார்த்த ஊடகப் பண்டிதர்களெல்லாம், இப்போது அது திடிரென பட்டுப்போனதைப் பற்றிப் பேசுகிறார்கள். அதற்கு காரணமானவர்களைப் பற்றியும் எழுதுகிறார்கள். கருணாவை, சிறிது காலத்துக்கு மட்டும் தோன்றி சந்தடியில்லாமல் மறைந்து போகும் வால்வெள்ளி போல் பார்த்த பெரும்பான்மையான தமிழ்மக்ளைப் பற்றி யாரும்  கவனத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. அவர்களது ஆதரவில்லாமல் எத்தனை நாளைக்குத்தான் கருணா தன் கூத்தினை நடாத்த முடியம்?

திரு.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட நொவெம்பர் 2ம் திகதி காலை, லண்டனில் பிரித்தானிய உள்துறை பணியகத்தின் விசேடபிரிவும் (Border and Immigration Agency)  மாநகர காவல்துறையும் இணைந்த நடவடிக்கையில் லண்டனில் மிகவும் வசதி படைத்தவர்கள் வாழும் பகுதிகளில் ஒன்றான கெனசிங்ரன் பகுதியில் வைத்து கருணா கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் அவர் போலி கடவுச்சீட்டினை பாவித்து பிரித்தானியாவிற்குள் உள் நுளைந்தமை குடிவரவு விதிகளை மீறுவதால் தடுத்து வைக்கப்ட்டிருப்பதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. இதனைத்தவிர வேறுதகவல்களை பிரித்தானிய அதிகாரிகளிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இருப்பினும் ஊகத்தின் அடிப்படையில் சில தமிழ் ஊடகங்களும் கொழும்பு ஆங்கில, சிங்கள ஊடகங்களும் இக்கைது தொடர்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இக்கைது பற்றிய செய்தியை முந்திக் கொண்டு வெளியிட்டது கொழும்பிலிருந்து வெளியாகும் டெயிலி மிரர் பத்திரிகையின் இணையத்தளம். ஆதனை தொடர்ந்து சண்டே லீடர், அதன் சகோதரப்பத்திரிகையான மோர்னிங் லீடர் போன்ற பத்திரிகைகள் மேலதிக தகவல்களை பிரசுரித்தன.

என்ன, பிரித்தானிய உள்துறை அமைச்சினைச் சேர்ந்த ஊடகப்பிரிவினர் சிறிலங்கா ஊடகஙகளுக்குதான் செய்தி வழங்குகிறார்களா? என்று ஆச்சரியப்பட வேண்டாம். இச்செய்திகளின் மூலம் ஆக இருப்பவர்கள் லண்டனில் உள்ள சிறிலங்கா து}தராலய அதிகாரிகளும், சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகளும்தான் என்பதுதான் உண்மை. எனவே இச்செய்திகளைச் சொல்பவர்கள் ஒன்றில் கதைவிடுகிறார்கள் அல்லது மேற்கண்ட அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என எடுத்துக் கொள்ளலாம். இந்த சந்தர்ப்பத்தை பாவித்து “கருணாவுக்கு இடம் கொடுத்தான்”. “கருணாவுக்கு மோற்கேஜ்  (mortgage) எடுத்துக் கொடுத்தார்” என தங்கள் தனிப்பட்ட எதிரிகளை பழிவாங்க சில ஊடகங்கள் முனைந்து வருகின்றன என்பது வேறுகதை.

2004ம் ஆண்டு மாரச் மாதத்தில் கருணா விடுதலைப்புலிகளின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி து}க்கியதிலிருந்து, அவருக்கு கொழும்பு ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களான அசோசியேட்டட் பிரெசிலிருந்து பிபிசி வரை முக்கியத்துவம் வழங்கின. பிபிசி தமிழோசையோ சற்று அதிகமாக நெருங்கி கருணாவின் உத்யோகபூர்வமற்ற பிரச்சார ஊடகமாக செயற்பட்டது.

சிறிலங்கா புலனாய்வுப்பிரிவு, இந்தியாவின் றோ. மறறும் வெளிநாட்டு உளவுப்பரிவினைச் சேர்ந்த ஒற்றர்களும் அவரை மொய்த்தனர். டிபிஎஸ் ஜெயராஜ், Hindustan Times ன் P.K. பாலச்சந்திரன், இந்து ராம் போன்றோர் கருணாவில் ஈழத்தமிழர்களுக்கான புதிய தலைமையை கண்டனர். (இதைவிட சந்திரனில் சாய் பாபாவை பார்த்தவர்கள் மேல் எனக் கொள்ளலாம்.)

ஆனால் கருணாவும் அவரது ஆயுதக்கோஸ்ரியும், தமிழ் ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள் எனக் கொன்று குவித்தனர்.. பணத்திற்காக ஆட்களை கடத்தினர், சிறுவர்களை கடத்தி தம்படையில் சேர்த்தனர். எல்லாவற்றிற்கும் மோசமாக தமிழர் புனரவாழ்வுக்கழக பணியாளர்களான பெண்கள் இருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொன்றனர்.

இருபது வருடங்களுக்கு மேலாக ஒரு விடுதலை இயக்கத்திலிருந்தவர் இப்படிச்செய்வாரா? என யாரும் ஐயமுறலாம். நிலமை கருணாவின் கட்டுகடங்காமல் போய்விட்டது இதில் கருணாதான் என்ன செய்வார்? அவரை ஆட்டுவித்தவர்கள் பக்கம் ஆடாவிட்டால் இத்தனைக்கும் அவர் புதைக்கப்பட்ட இடத்தில் புற்கள் முளைத்திருக்கும்..

யாரையுமே நம்ப முடியாமல் நாதியற்று போனவராய் கருணா பிரித்தானியாவிற்குள் நுழைந்திருக்கிறார். ஆனால் அவரது உள்நுழைவு உருவாக்கப் போகும் குழப்பங்கள் இலங்கைத்தீவின் அரசியல் விவகாரங்களில் திருப்பத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

கருணா குடிவரவுக் குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் அவர் விரைவில் சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படும் சாத்தியங்கள் இருப்பதாக பிரித்தானிய உள்துறை பணியக அதிகாரிகளை மேற்கோள் காட்டி “த கார்டியன்” பத்திரிகை கருத்து வெளியிட்டுள்ளது. மறுபுறம் கருணா புரிந்த போர்குற்றங்களுக்காக அவரை பிரித்தானியாவில் நிதி விசாரணைக்கு உட்படுத்துமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள கோரிக்கை விடுத்துள்ளன.

ஏற்கனவே கருணாவின் மனைவி வித்தியாவதிக்கும் அவரது மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்தானியாவில் தற்காலிக வதிவிடவுரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில்;, தற்போது கருணா அகதி அந்தஸ்து கோரியுள்ளமையினால், உடனடியாக நாடு கடத்தப்படவதிலிருந்து அவர் தப்பித்துக் கொள்ளலாம்.

சிறிலங்கா அரச இராசதந்திரிகளுக்கான கடவுச்சீட்டில் பிரித்தானிய து}தரகம் வழங்கிய முறையான அனுமதியுடன் வந்தவர் என்ற வகையில் அவர் தனக்கு விடுதலைப்புலிகளினது அல்லது பிள்iயான், டக்ளஸ் குழு போன்றவற்றின் அச்சுறுத்தல் உள்ளதாக முறையிட முடியாது. மாறாக சிறிலங்கா அரசே தன்னை போட்டுத்தள்ளி விடும் என்பதனை தன்பக்க நியாமாகவும் அவர் முன்வைக்கலாம்.

கருணா புரிந்த போர்க்குற்றங்களுக்காக அவர் பிரித்தானியாவில் நீதி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டால் அது இலங்கை அரசியல் விவகாரத்தில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதாக இருக்கும். ஐநாவின் மனிதவுரிமை கண்காணிப்புக் குழுவை இலங்கைத்தீவில் செயற்பட விடுவதில் சிறிலங்கா அரசு காணும் ஆபத்தான சு10ழ்நிலையை அது தோற்றுவிக்கும்.


நீதி விசாரணை என ஆரம்பித்தால் கருணா விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த போது செய்த குற்றங்களும் எடுக்கப்படலாம் என்ற கருத்து நிலவினாலும். இதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை. தனக்கு எதுவும் தெரியாது தலைமை சொன்னதைச் நிறைவேற்றினேன் என கருணா கூறினால் அது இப்போதிருக்கும் சட்டவிதிகளுக்கு ஏற்புடையாக இருக்காது. இது இளநிலைப் போராளி ஒருவருக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஒரு மூத்த தளபதி என்ற வகையில் அவரது நடவடிக்கைகளுக்கு அவரே பொறுப்பாளியாக இருப்பார்.

இருப்பினும் கருணாவிடயத்தில், பிரித்தானிய அரசு பெரும் திருப்பத்தை எடுக்கக்கூடிய முடிவு எதனையும் எடுக்கும் என நான் நம்பவில்லை. நீணட விசாரணைகளின் பின்னர், பெரும்பாலும் சிறிலங்கா அரசுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்து கருணாவின் சம்மதத்துடன் குடுமபத்துடன் அவர் சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்படலாம். அங்கு தனக்கிருக்கும் ஆபத்தை உணர்ந்து கருணா இதற்கு உடன்படாது விட்டால் பிரித்தானிய நீதித்துறை மற்றுமொரு வித்தியசமான வழக்கைச் சந்திக்கும்.