தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களுடைய வீரச்சாவு உலகத் தமிழர்களின் மனங்களில் பெரும் வலியினை உருவாக்கி விட்டது. அனுராதபுர வான்தளத்தினை விடுதலைப் புலிகள் தகர்த்து அழித்த வெற்றிச் செய்தியினால், பெரும் உவகையோடு இருந்த தமிழ் மக்கள் இடிந்து போய் இருக்கிறார்கள்.
அனுராதபுர வான் தள அழிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அதற்காக தமது இன்னுயிர்களை ஈந்தளித்த கரும்புலிகளின் வீரச் சாவும், அக் கரும்புலிகளின் புகழுடல்களை அவமானப் படுத்த முனைந்த சிங்கள அரசின் ஈனச் செயலும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்கனவே சோகத்தை படரச் செய்திருந்தது. இந்த நேரத்தில் பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்கள் வீரச் சாவடைந்தார் என்ற செய்தி எல்லோரையும் ஒரு முறை உலுப்பி விட்டது.
பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின் வீரச் சாவு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் இழப்பே ஆயினும், அது தமிழர்களின் விடுதலைப் போரட்டத்தினை முடக்கிவிடப்போவதில்லை. எத்தனையோ தளபதிகளையும், அரசியற் பொறுப்பாளர்களையும் இழந்தும் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு நடை போடுகிறது.
ஆனால் தமிழ்செல்வனை சிறிலங்கா அரசு குறிவைத்து படுகொலை செய்ததானது, தமிழர்களின் நெஞ்சங்களில் ஒரு ரணத்தை ஏற்படுத்தி விட்டது. தங்களுடைய வீட்டில் ஒருவரை இழந்து விட்டது போன்ற ஒரு உணர்வை அனைத்து தமிழர்களிடமும் காணக் கூடியதாக இருக்கிறது.
பிரிகேடியர் தமிழ்செல்வனை சிறிலங்கா அரசு குறிவைத்த தாக்கியுள்ளது. தாக்கப்பட்ட இடம் பல வெளிநாட்டு ராஜதந்திரிகளும், தூதுவர்களும், கண்காணிப்புக் குழுவினரும், தொண்டு நிறுவனங்களும் வந்து செல்கின்ற இடம். அந்த இடம் ஒன்றும் இரகசியமான இடம் அல்ல.
சிறிலங்கா அரசு திட்டுமிட்டு பிரிகேடியர் தமிழ்செல்வனை இலக்கு வைத்து படுகொலைத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதற்கு விடுதலைப் புலிகள் தரப் போகும் பதிலடி என்ன என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
விடுதலைப் புலிகள் பழிக்குப் பழியாகப் பெரும் பாய்ச்சலை நடத்தப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்த அதே நேரத்தில், தமது அரசியற்துறைக்கு புதிய பொறுப்பாளரை நியமித்து, சில செய்திகளை விடுதலைப் புலிகள் சொல்லியுள்ளார்கள். சிறிலங்கா அரசின் எந்த ஒரு அடாவடித்தனமான நடவடிக்கையும் தங்களது நிகழ்ச்சி நிரலில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்பது அந்தச் செய்திகளில் முக்கியமானது.
விடுதலைப் புலிகளின் காவற்துறைக்கு பொறுப்பான பா.நடேசன் அவர்கள் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் தூதுவர்களுடன் நடத்திய சந்திப்புக்கள் அனைத்திலும் பங்குபற்றியவர். அத்தடன் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தை ஒன்றிலும் பங்கு பற்றியவர். இதற்கு முன்பும் சிங்கள அரசுகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் பின்னரங்குகளில் தன்னுடைய பங்களிப்புகளை வழங்கியிருந்தவர்.
இவ்வாறு சர்வதேச சமூகத்திற்கு பரிச்சியமான, பேச்சுவார்த்தைகளில் அனுபவம் கொண்ட பா.நடேசனை அரசியற்துறைப் பொறுப்பாளராக உடனடியாக நியமித்ததன் மூலம் நியாயமான பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபடுவதற்கு விடுதலைப் புலிகள் எப்பொழுதும் தயாராகவே உள்ளார்கள் என்ற செய்தி விடுதலைப் புலிகளால் சொல்லப்பட்டுள்ளது.
பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்கள் விதைக்கப்பட்ட ஒரிரு நாளிலேயே விடுதலைப் புலிகளுக்கும் கண்காணிப்புக் குழுவினருக்கும் சந்திப்பு நடந்ததது இந்த இடத்தில் சுட்டிக்காட்டத் தக்கது.
புதிய உலக ஒழுங்கோடு அனுசரித்து தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பயணிக்கும் வரை பேச்சுவார்த்தைகள் தவிர்க்க முடியாதவை. போரும் நடக்கும், பேச்சுவார்த்தையும் நடக்கும் என்பதுதான் இன்றைய யதார்த்தம். தொடர்ந்து சில காலத்திற்கு பேச்சுவார்த்தையும் போருமாக தமிழர்களின் போராட்டம் நகர்வது தவிர்க்க முடியாதது.
பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதை வெளிபடுத்துகின்ற அதே நேரம், விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசு தமிழர் மீது திணித்துள்ள போரையும் எதிர்கொண்டு வருகின்றார்கள். சிறிலங்கா அரசை முடக்குகின்ற அனைத்த நகர்வுகளையும் விடுதலைப் புலிகள் செய்து வருகின்றார்கள்.
அனுராதபுர வான்தளத் தாக்குதல் போன்று பல திட்டங்களையும், ஏற்பாடுகளையும் விடுதலைப் புலிகள் செய்து வருகின்றார்கள். சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை முறியடிக்கும் ஏற்பாடுகள் வன்னியில் பெரும் எடுப்பில் நடந்து வருகின்றன.
விடுதலைப் புலிகள் நீண்ட காலத் தயாரிப்புக்களை செய்வது குறுகிய நேரத்தில் பெரிய வெற்றிகளைப் பெறுவதற்குத்தான். நீண்ட காலமாக திட்டமிடப்பட்ட நடைபெற்ற "ஓயாத அலைகள் 3" நடடிக்கையில் விடுதலைப் புலிகள் வன்னிப் பெரு நிலப்பரப்பை 3 நாட்களில் விடுவித்தார்கள். நீண்ட காலம் வேவு பார்த்து பல புலனாய்வுத் தகவல்களைத் திரட்டி, பல மாதங்கள் பயிற்சி எடுத்து நடத்திய "எல்லாளன்" நடவடிக்கையில் சில மணித்தியாலங்களில் சிங்கள தேசம் பேரழிவைச் சந்தித்தது.
விடுதலைப் புலிகள் என்றுமே மௌனமாகவோ, அமைதியாகவோ, ஓய்வாகவோ இருந்தது இல்லை. அது எதிரிக்கும் தெரியும். ஆனால் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை குழப்பி, அவர்களை தற்காப்பு நிலையில் வைத்திருப்பதற்காக சிறிலங்காப் படைகள் செய்து வரும் முயற்சிகள் சிறிலங்காப் படைகளுக்குத்தான் பெரும் அழிவினைக் கொடுத்து வருகின்றன. கடந்த சில வாரங்களுக்குள் மன்னாரிலும் முகமாலையிலும் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிகள் சிறிலங்காப் படைகளுக்கு பெருத்த இழப்பினைக் கொடுத்தன.
மன்னாரில் 200 வரையிலான படையினர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். முகாமாலையில் 150 வரையிலான படையினர் காயமடைந்தும் கொல்லப்பட்டும் உள்ளனர். இவைகள் கடந்த நான்கு வாரத்திற்குள் நடந்த சம்பவங்கள். அனுராதபுர வான்தளம் அழிக்கப்பட்டதும், குறுகிய காலத்திற்குள் 350 வரையிலான படையினர் களமுனையை விட்டு அகற்றப்பட்டதும் சிறிலங்கா படையினரை ஆட்டம் காண வைத்துள்ளது.
கடந்த பல மாதங்களாக மன்னார் வவுனியா எல்லையில் சிறிலங்காப் படையினர் ஒரு சென்றிமீற்றர் கூட முன்னகர முடியாது முடங்கிப் போயுள்ளனர். பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சிகள் சிறிலங்காப் படையினருக்கு பெரும் இழப்பினையே கொடுக்கின்றன. சண்டைக் களத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாத நிலையில் சிறிலங்கா அரசு உள்ளது.
அத்துடன் தமிழீழம் தவிர்ந்த மற்றைய சிங்களப் பகுதிகளுக்குள்ளும் விடுதலைப் புலிகள் ஊடுருவி வருவது சிறிலங்கா அரசுக்கு பெருத்த தலையிடியாக மாறி உள்ளது. மகிந்தவின் தொகுதியான அம்பாந்தோட்டைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துச் செல்வதாக செய்திகள் வருகின்றன. அம்பாந்தோட்டையின் பல பகுதிகளில் மாலை ஆறு மணியானதும் ஊர் அடங்கிவிடுகின்ற ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
மாவீரர் வாரம் நெருங்குவது சிறிலங்கா அரசுக்கு மேலும் பதட்டத்தினைக் கொடுத்துள்ளது. விடுதலைப் புலிகளின் பெரும் தாக்குதல் எங்கே, எப்பொழுது, மாவீரர் தினத்திற்கு முன்பா, அல்லது பின்பா போன்ற கேள்விகள் மகிந்த ராஜபக்ஸவின் தூக்கத்தினை கெடுப்பவையாக உள்ளன.
விடுதலைப் புலிகள் ஒரு பெரும் தாக்குதலை நடத்துவார்கள் என்று சிறிலங்கா அரசு அஞ்சுவதில் நியாயம் இருக்கிறது. சிறிலங்கா அரசிற்கு சாதகமாக இருப்பதாக கருதப்படுகின்ற இராணுவச் சமநிலையை உறுதியான முறையில் தமக்கு சாதகமாக மாற்ற வேண்டிய தேவை விடுதலைப் புலிகளுக்கு இருக்கிறது. அதை விடுதலைப் புலிகள் நிச்சயம் செய்வார்கள்.
இவ்வாறு போர் நடவடிக்கைகள் ஒரு புறம் நடந்தாலும், மறுபுறம் பேச்சுவார்த்தைக்கான கதவுகளையும் விடுதலைப் புலிகள் திறந்தே வைத்திருக்கிறார்கள். சிறிலங்கா அரசுடன் தற்பொழுது வெளிப்படையான நேரடியான பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லையாயினும், சர்வதேச சமூகத்தோடு விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை தொடர்ந்த நடக்கத்தான் செய்கிறது. உடனடியாகவே அரசியற்துறைப் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் "பேச்சுவார்த்தை" என்பதும் ஒரு போராட்ட வடிவம்தான். போராட்டம் என்பது போர் மட்டும் அல்ல. போரின் மூலம் தமிழீழ தேசத்தின் மீதான இறைமையை வலுப்படுத்தியபடியும், பேச்சுவார்த்தைகளின் மூலம் அதற்கான அங்கீகாரத்தை வேண்டியபடியும் தமிழீழப் போராட்டம் நகரும். பின்னடைவுகளை இடையிடையே சந்தித்தாலும் தமிழர்களின் போராட்டம் தக்கவைக்கப்பட்டு, மீண்டும் அது முன்னகரும்.
பிரிகேடியர் தமிழ்செல்வன் மீதான படுகொலைக்கு பதில் என்ன என்று உரையாற்றிய விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள் கூறியுள்ள விடயம் இதில் கவனிக்கத்தக்கது.
"ஒரு சில படையினரோ அல்லது ஓராயிரம் படையினரோ ஒரு சில அரசியல் தலைவர்களோ ஒரு சில வல்லாதிக்க சக்திகளோ தமிழ்ச்செல்வனின் உயிருக்கு ஈடாக முடியாது. தமிழீழம் என்ற உயர்ந்த கனவு தமிழீழத்திதற்காக தமது உயிர்களை ஈர்ந்த மாவீரர்களின் கனவை ஈடுசெய்ய உழைப்பதே தமிழ்ச்செல்வனின் உயிருக்கான விலை. இனிவரும் எத்தனை ஆண்டு காலத்தின் பின்பும் தமிழர்களை அடக்கி வைத்திருந்தாலும் சுதந்திரத்திற்கான குரலை ஒலித்துக்கொண்டே இருப்பார்கள். ஓய விடமாட்டார்கள் என்ற உறுதியை எடுத்துக்கொள்வது தான் தமிழ்ச்செல்வனின் உயிருக்கான விலையாக இருக்கும். இந்த உறுதியுடன் பயணிப்பதே தமிழ்ச்செல்வனுக்கு செலுத்தும் உயர்ந்த வீரவணக்கமாக இருக்கும்."
பல விடயங்களை உள்ளடக்கியதாக பொட்டு அம்மான் அவர்களுடைய இந்தக் கருத்து அமைந்துள்ளது. இந்த உரையிலே போர் முழக்கத்தை விட, தமிழ் மக்களை நோக்கிய அறைகூவலே காணப் படுகிறது. சுதந்திரத்திற்கான குரலை ஓய விடாது ஒலிக்கும்படி தமிழ் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தமிழ் மக்களின் அரசியற் கடமை இங்கே நினைவுபடுத்தப்படுகிறது.
தமிழீழப் "போராட்டம்" பற்றிய உறுதியான செய்தியை தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை சொல்ல உள்ள இந்த வேளையில், சஞ்சலங்களை விடுத்து தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உலகத் தமிழர்கள் உறுதியோடும் நம்பிக்கையோடும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
Recent comments
2 weeks 6 days ago
7 weeks 5 days ago
8 weeks 22 hours ago
10 weeks 5 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
22 weeks 5 days ago
22 weeks 5 days ago
22 weeks 6 days ago