தமிழ்நாட்டிடமிருந்தான எதிர்பார்ப்பு

இலங்கைத்தீவில் தேசிய இனங்களுக்கிடையிலான பிரச்சனைக்கு இராணுவ வழிமுறையில் தீர்வு காண்பது என்பதில் சிங்கள தேசம் உறுதியாக இருப்பது இப்போது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. இவ்விடயத்தில் இன்னமும் யாருக்காவது சந்தேகமிருந்தால் அதனை நிவர்த்தி செய்வதுபோல் அமைந்திருந்தது இம்மாதம் சிறிலங்கா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டம்.  தெற்காசியாவிலேயே தமது நாட்டின் வரவுசெலவுத்திட்டத்தில் அதிக பங்கினை இராணுவ செலவினங்களுக்காக ஒதுக்கும் நாடாக சிறிலங்கா மாறியுள்ளது. அமைதியைப் போதிக்கும் பௌத்தமத்தத்தை அரசியல் சாசனம் மூலம் பாதுகாக்கும் சிறிலங்காவில் கல்விக்கு செலவிடும் தொகையைவிட இராணுவத்துக்கு செலவிடுவது அதிகமாக இருக்கிறது.

இராணுவதீர்வில் சிறிலங்கா தேசம் நம்பிக்கை வைத்துச் செயற்படுவதற்கு அந்நாட்டுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் இராணுவ உதவிகளே முதன்மைக் காரணியாக அமைகிறது. ஒருபுறம் சிறிலங்காவில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்களைக் கண்டிப்பதும் மறுபுறம் நவீன யுத்த தளபாடங்களை வழங்குவதும் தொடர்ந்து கொண்டு வருகின்றது. இதில் ஒன்றுகொன்று பகைமை பாராட்டும் நாடுகளான பாக்கிஸ்தானும், இந்தியாவும் சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளை
வழங்குவதில் ஒருமித்த கருத்துடன் செயற்படுவது சற்று விநோதமாகவுள்ளது. தொடர்ந்து இராணுவ உதவிகளை வழங்கிவரும் அமெரிக்காவைப்போல் அதனுடன் முரண்பட்டுவரும் ஈரானும் இப்போது சிறிலங்காவிற்கு  உதவ முன்வந்துள்ளது.

ஒரு இனத்தின் எழுச்சியை இக்காரணிகள் எதுவும் தடுத்துவிட முடியாது என்பதில் ஈழத்தமிழ் மக்கள் உறுதியாக உள்ளபோதும், ஏற்படுகின்ற சில பின்னடைவுகளுக்கு இச்சக்திகளே பின்புலத்தில் நிற்கின்ற என்பது அவர்களுக்கு வருத்தத்தைத் தருகிறது. இந்த இறுக்கமான சூழ்நிலையை மிக அவதானமாகக் கையாண்டு வரும் தமிழர் தலைமை அடுத்து என்ன செய்யப்போகின்றது என்பதை இன்னும் பத்துத் தினங்களில் மாவீரர் தினச்செய்தி மூலம் அறிவிக்கும்.

தனித்து தனது உரிமைப்போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கிற ஈழத்தமிழர்கள் அயலில் உள்ள தமிழ்நாட்டு மக்;களிடமும் அவர்களது தலைவர்களிடமும் தார்மீக ஆதரவினை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.

திரு. தமிழ்ச்செல்வன் அவர்கள் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் வெளிப்பட்ட உணர்வலைகள் தமிழீழ மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்திருந்தது. இந்த ஆதரவுத்தளமானது வெறும் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இல்லாமல் கட்சி, கொள்கை, வேறுபாடின்றி, இன உணர்வுடன், தொலைநோக்குடன் அமையப் பெறும் எனின்,  அது ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்பதை தமிழகத்தலைவர்கள கவனத்தில் எடுக்கவேண்டும்.