பிரஞ்சுக் கைதுகள் வெளிப்படுத்தும் செய்தி

ஏப்பிரல் முதலாம் திகதி பிரான்ஸில் தமிழ் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் பதினேழு பேர் அந்நாட்டு விசேட காவல்துறையினால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு உள்ளார்கள். தமிழ் மக்களிடம் வற்புறுத்தி பணம் சேகரித்தார்கள் என்ற சந்தேகத்தில் இக்கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக இச்சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடு;த்துச் செய்தி வெளியிட்ட பிரஞ்சு ஊடகங்கள் அறிவித்தன. ஆதாரமற்ற் இக்குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்ப்பதுபோல் முகம் காட்டாத ஒரு நபரின் வாக்கு மூலம் இச்செய்தியறிக்கைகளில் ஒளிபரப்பப்பட்டன. ‘தலையாட்டி’ களுக்கும் சோரம்போனவர்களுக்கு பஞ்சமில்லாத எமது இனத்திலிருந்து இப்படியானவர்களை கண்டு பிடிப்பதில் இந்த ஊடகங்களுக்கு சிரமம் இருந்திருக்காது.


இந்தச் செய்தியைக் காத்திருந்ததுபோல், சிறிலங்கா ஊடகங்களும், புலத்தில் தனது இனத்தின் வேதனையில் இன்பம் காணும் வக்கிரமானவர்களால் நடாத்தப்படும் தமிழ் ஊடகங்களும் தமிழ் மக்களை பீதிகொள்ளச் செய்யும் வகையில் பொய்ப்பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளன.  ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் நடைபெற்றிருக்கின்றன. இருப்பினும் சிறிலங்காவைப் போலன்றி, சனநாயக விழுமியங்களை பாதுகாத்து வரும் பிரான்ஸ் போன்ற நாடுகள், மனிதவரிமைகள் விடயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாதவரை, இதில் அச்சம்கொள்ள எதுவுமில்லை. கைதான செயற்பாட்டாளர்களுக்கான தார்மீக ஆதரவை தொடர்ந்து வழங்குவோம். 

தமிழ் அமைப்புக்களும் அதன் செயற்பாட்டாளர்களும் தாம் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு இசைவாகவே நடந்து வருகிறார்கள். அவர்கள் மக்களை அச்சுறுத்துவதோ, வன்முறையை பிரயோகிப்பதோ கிடையாது. ஆனால் புலம்பெயர்ந்த மக்களின் ஆதரவுத்தளம் என்பது தமிழர் விடுதலைப்போராட்டத்திற்கு ஆற்றுகின்ற பங்கு, சிறிலங்காவுக்கு மட்டுமல்ல இன்று இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் உறுத்தலான விடயமாக இருக்கிறது. இந்நிலையில்  தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்திற்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் மத்தியிலுள்ள ஆதரவுத்தளத்தினை ஆட்டங்காணச் செய்வதற்காக இதுபோன்ற முயற்சிகள மேற்கொள்ளப்படுகின்றன. இந்நடவடிக்கைகள் மற்றய நாடுகளிலும் தொடர்ந்தால் ஆச்சரியப்படுபவதற்கில்லை.

புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் தாம்வாழும் நாடுகளில் தமது அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தவேண்டிய தருணம் வந்துவிட்டது. இதனை ஓருங்கமைக்க வேண்டிய பணி எம்மத்தியில் உள்ள கல்வியாளர்கள், சட்ட விற்பன்னர்கள், அரசியல்வாதிகள் உட்பட்ட அனைவரினதும் ஆகும்.

இப்புதிய சவாலையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்வோம்.