கருணா மீண்டும் ஓடிவிட்டதாக செய்திகள் வருகின்றன. கருணா அடிக்கடி ஓடுவதால் எங்களுடைய ஊடகங்களுக்கும் சலிப்பு வந்து விட்டது. கருணா இம் முறை ஓடியதைப் பற்றி யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு சிறிய செய்தியாக மட்டுமே வெளியிட்டிருந்தார்கள். மக்களும் பெரிதாக அதுபற்றி அக்கறை செலுத்தவில்லை.
இம் முறை கருணாவை "கருணா குழுவில்" இருந்தே இடைநீக்கம் செய்து விட்டதாக சொல்லப்படுவதுதான் கருணாவின் ஓட்டத்தில் உள்ள ஒரு புதிய விடயம். இது பற்றி பலவாறு கூறுப்படுகிறது. கருணா உண்மையிலேயே நீக்கப்பட்டுவிட்டதாக ஒரு தரப்பினரும், சர்வதேசத்தை அமைதிப்படுத்துவதற்கு நடக்கும் ஒரு நாடகம் என்று தரப்பினரும் கருத்துக் கூறுகிறார்கள்.
கருணாவை ஆதரித்து எழுதுகின்ற ஓரிரு தமிழ் இணையத்தள ஊடகங்களும் கருணாவின் நீக்கம் பற்றி "கள்ள மௌனம்" சாதிக்கின்றனர். நிதி மோசடி செய்வதில் கைதேர்ந்த கருணாவிடம் இருந்தே பல இலட்சம் பணத்தை மோசடி செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்படும் ஒருவர் நடத்துகின்ற பிள்ளையான் குழுவிற்கு ஆதரவான ஆங்கில இணையத்தளமும் கருணாவின் நீக்கம் பற்றி எதுவும் எழுதவில்லை.
சிறிலங்காவில் இருந்து வெளிவரும் "டெய்லிமிரர்" ஆங்கிலப் பத்திரிகையே கருணாவின் நீக்கம் பற்றி அடிக்கடி செய்திகளை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் கருணா ஓடியதும், பின்பு கருணா நீக்கப்பட்டது உண்மை என்று சொல்கின்ற தரப்பு அதைப் பற்றி வேறு சில தகவல்களையும் சொல்கிறார்கள்.
தற்போதைய நிலையில் கருணாவை பல ஆபத்துக்கள் சு10ழ்ந்துள்ளன. கருணாவால் யாரையுமே நம்ப முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. கருணாவை புலிகள் தேடுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதைவிட அண்மைக்காலமாக கருணா குழுவில் இருந்து பிரிந்த பிள்ளையான் குழு கருணாவை கொல்வதற்கு சந்தர்ப்பம் பார்த்தபடி இருந்தது.
அத்துடன் சிறிலங்கா படைத் தரப்பும் கருணாவை புறம்தள்ள ஆரம்பித்தது. இராணுவ ரீதியாக கருணா குழுவால் பெரும் பலன்கள் கிட்டும் என்று நம்பிய சிறிலங்காப் படைத் தரப்பு கடைசியில் ஏமாந்து போய்விட்டது. கிழக்கின் பெரும்பகுதியை கைப்பற்றுவதற்கு சிறிலங்காப் படைகளுக்கு கருணா குழுவின் உதவி பெரியளவில் தேவைப்படவில்லை.
ஓரிரு சண்டைகளில் மட்டும் பிள்ளையான் தலைமையிலான கருணா குழு உறுப்பினர்கள் சிறிலங்காப் படைகளுக்கு உதவியாகச் செயற்பட்டிருந்தார்கள். ஆனால் கிழக்கை கைப்பற்றுவதற்கு கருணா குழுவின் துணை அவசியமற்ற ஒன்று என்பதை சிறிலங்காப் படைகள் உணர்ந்து கொண்டார்கள். ஆயினும் கிழக்கின் சில பகுதிகளில் கருணா குழு நிலைகொண்டு, விடுதலைப் புலிகளின் ஊடுரவல்களை தடுப்பதற்கு உதவுவார்கள் என்று சிறிலங்காப் படைத் தரப்பு நம்பியது
ஆனால் சிறிலங்காப் படைகள் கிழக்கின் பெரும்பகுதியை கைப்பற்றிய பின்பும் கருணா குழுவால் சிறிலங்காப் படைகளுக்கு எந்த ஒரு பிரயோசனமும் இல்லாமல் போய்விட்டது. விடுதலைப் புலிகளின் ஊடுருவல்களை தடுப்பதற்கு பதிலாக கருணா குழு மக்களிடம் பணம் பறிக்கும் வேலைகளிலேயே ஈடுபட்டது. அத்துடன் தங்களுக்குள் மோதவும் செய்தது.
கருணா அணி, பிள்ளையான் அணி என்று இரண்டாகப் பிரிந்து கருணா குழுவினர் தங்களுக்குள மோதிக் கொண்டார்கள். சிறிலங்காப் படைத் தரப்பு இரு தரப்பையும் சந்திக்க வைத்து சமாதானம் செய்து வைக்க முயன்றது. ஆனால் ஒற்றுமையாக இருப்பதாக சொன்ன கருணாவும் பிள்ளையானும் மனதுக்குள் ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை.
அரசியல் மற்றும் கள நிலவரம் மாறுகின்ற போது "கருணா" என்கின்ற பெயரின் தேவை மீண்டும் எற்படலாம் என்று கருதிய சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் கருணாவை பாதுகாப்பாக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். கருணா பிரித்தானியாவிற்கு சென்றுள்ளதாகவே பலர் நம்புகிறார்கள்.
கருணா வெளிநாடு செல்லும் பொழுது, தன்னுடைய இடத்திற்கு தனக்கு விசுவாசமான இனியபாரதியை நியமித்து விட்டு சென்றிருந்தார். ஆனால் தற்பொழுது பிள்ளையான் தரப்பு இனியபாரதியை நீக்கிவிட்டு பிள்ளையானை தலைவர் பதவியில் நியமித்திருக்கிறது. கருணாவிற்கு ஆதரவானவர்களை வேட்டையாடுகின்ற வேலையை பிள்ளையான் தரப்பு ரகசியமாக செய்து வருகிறது. கருணாவின் ஆதரவாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் இந்த இடத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். கருணா குழுவினை இயக்குவது கருணாவோ, பிள்ளையானோ அல்ல. அந்தக் குழுவை சிறிலங்காப் புலனாய்வுத் துறையே நடத்தி வருகிறது. ஆகவே கருணா என்பவர் மீண்டும் தேவை என்று நினைக்கின்ற போது, கருணா மீண்டும் வரத்தான் போகிறார். அதே போன்று தேவையில்லை என்ற நிலை மீண்டும் வருகின்ற போது, கருணா மீண்டும் ஓடத்தான் போகிறார்.
தற்பொழுது கிழக்கின் பல இடங்களில் விடுதலைப் புலிகள் மீண்டும் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள். முக்கியமாக அம்பாறையின் பல பகுதிகளில் விடுதலைப் புலிகள் மீண்டும் பலம் பெற்று வருகின்றார்கள். கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக வெளியேற்றி விட்டோம் என்று கொண்டாட்டங்களை நடத்திய சிறிலங்காப் படைத் தரப்பு, தற்பொழுது மெதுமெதுவாக விடுதலைப் புலிகள் கிழக்கில் தாக்குதல் நடத்துவதை ஒத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது.
கிழக்கில் விடுதலைப் புலிகள் விதைத்துவிட்டுப் போன கண்ணிவெடிகளிலேயே படையினர் சிக்குவதாக சொல்லிவந்தவர்கள், தற்பொழுது கிளைமோர் தாக்குதல்கள் நடப்பதாகவும் ஒத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால் கிளைமோர் தாக்குதல் மட்டும் கிழக்கில் நடக்கவில்லை. விடுதலைப் புலிகள் சிறிலங்காப் படையினர் மீது தொடர்ச்சியான அதிரடித் தாக்குதல்களை நடத்தி வருகின்றார்கள். விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதல்களுக்கு அஞ்சி சிறிலங்காப் படையினர் கிழக்கின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் தொடங்கி இருக்கின்றனர்.
கிழக்கில் விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதல்களை மறைத்து வந்த சிறிலங்காப் படைத் தரப்பு, கடைசியில் கிழக்கையும் தாண்டி அம்பாந்தோட்டையில் உள்ள யால தேசிய வனப் பகுதியில் விடுதலைப் புலிகள் கடந்த திங்கட்கிழமை (15.10.07) அன்று நடத்திய அதிரடித் தாக்குதலை நடத்திய போது சில உண்மைகளை ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
அம்பாந்தோட்டை மாவட்டம் தமிழீழத்திற்குள் அடங்கவில்லை. அது சிறிலங்காவிற்குள் அடங்குகின்றது. அம்பாந்தோட்டையில்தான் சிறிலங்காவின் தேசியவனங்களில் ஒன்றாகிய யால காட்டுப் பகுதி இருக்கிறது. பல சுற்றுலாப் பயணிகள் ஆண்டு தோறும் இங்கு வந்து செல்கின்றனர். இந்த யால பகுதியில் உள்ள தல்கஸ்மங்கட என்னும் இடத்தில் அமைந்திருந்த சிறிலங்காப் படைகளின் முகாம் மீதே விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த இடம் தமிழீழத்தின் எல்லையில் இருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் சிறிலங்காவிற்குள் அமைந்திருக்கிறது.
இந்தத் தாக்குதலில் 6 படையினர் கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசு கூறுகிறது. 8 பேர் காணமல் போயுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடந்து அடுத்தநாள் கொல்லப்பட்ட படையினரின் உடலங்களை ஏற்றி வந்த சிறிலங்காப் படையினரின் ஊர்த்தி ஒன்றும் அமுக்கவெடியில் சிக்கியது. அதிலும் ஒரு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைத் தரப்பு கூறுகிறது.
அம்பாறையில் இருந்து அம்பாந்தோட்டை வரை நீண்டிருக்கும் காட்டுப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் நிலைகொண்டுள்ள செய்தி சிறிலங்கா அரசுக்கு பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் கொடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி விட்டு சில மணி நேரம் அப் பகுதியில் தரித்து நின்றுவிட்டு சாவகாசமாக சென்றுள்ளதானது, விடுதலைப் புலிகள் அப் பகுதிகளில் தம்மை நிலைநிறுத்தி உள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது.
குடும்பிமலையில் இருந்து தப்பி ஓடிய விடுதலைப் புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக சொல்லி சிறிலங்காப் படைத்தரப்பு இத் தாக்குதலின் தீவிரத்தை குறைக்க முயன்றது. கடலால் வந்த புலிகளே தாக்குதல் நடத்தியதாக சொல்லலாமா என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. தற்பொழுது யால காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை செய்ய உள்ளதாக சிறிலங்காப் படைத் தரப்பு அறிவித்துள்ளது. யால தேசிய வனப் பகுதியையும் மூடியுள்ளது.
அம்பiறையில் இருந்து அம்பாந்தோட்டை வரை நீண்டிருக்கும் காடுகள் வன்னி நிலப்பரப்பில் உள்ள காடுகளை ஒத்தவை. அத்துடன் மேலதிகமாக சிறு சிறு குன்றுகளையும் கொண்டிருப்பவை. இப் பகுதிகளுக்குள் சில பகுதிகளில் சிறிய தேடுதல் நடவடிக்கைகளை செய்ய முடியும். ஆனால் ஒரு பெரும் படைநடவடிக்கை செய்வது சாத்தியம் அற்ற ஒன்று. அப்படிச் செய்தால், மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் பல படை முகாம்களை மூட வேண்டி வரும்.
ஒரு வருட படை நடவடிக்கை மூலம் கிழக்கை ஆக்கிரமித்த சிறிலங்காப் படைகள் விடுதலைப் புலிகள் வன்னி நோக்கி வடக்காக நகர்ந்திருப்பார்கள் என்றுதான் நம்பியது. ஆனால் விடுதலைப் புலிகள் தெற்கு நோக்கியும் நகர்ந்து அங்கு நிலைகொண்டிருப்பது, விடுதலைப் புலிகளின் வல்லமைக்கு மற்றும் ஒரு சான்று.
வடக்கில் மன்னாரில் சிறிலங்காப் படைகள் மாதக் கணக்காக ஒரு அங்குலம் கூட நகர முடியாது முடக்கப்பட்டிருப்பதும், கிழக்கில் விடுதலைப் புலிகள் பெற்று வரும் பலமும் விரைவில் களநிலவரங்களில் பல உறுதியான மாற்றங்களை கொண்டு வரும்.
Recent comments
2 weeks 6 days ago
7 weeks 5 days ago
8 weeks 21 hours ago
10 weeks 5 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
22 weeks 5 days ago
22 weeks 5 days ago
22 weeks 6 days ago