கால் பதிக்குமா மேற்குலகம்?

ஐ.நா.வின் மனிதவுரிமைகள் ஆணையளார் லு}யிஸ் ஆர்பரின் இலங்கைப் பயணம் பற்றிய செய்திகளும், ஆய்வுகளும் கடந்த இரண்டு வாரங்களாக ஊடகங்களை நிறைத்திருந்தன. கனடா குபெக் மாநிலத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி சிறிலங்கா அரசுக்கும் சிங்கள் கடும்போக்காளர்களுக்கும் சிம்மசொப்பனமாகத் தெரிந்தார். அவரது பயணத்துக்கு பின்னர் தீவில் மனித உரிமை விடயத்தில மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் சிறிலங்கா அரசுக்கு இவ்விடயத்தில் ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்த நான்கு பிரமுகர்கள் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்கள். மேற்குலகை திருப்திப்படுத்துவதற்காக சிறிலங்கா அரசுடனான தமது உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒரு குறுகிய, அதுவும் சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி திட்டத்திற்கேற்ப மேற்கொள்ளப்பட்ட பயணத்தில், ஆர்பர் அங்கு நடைபெறுகிற மனிதவுரிமை மீறல்களைப்பற்றி பெரிதாக அறிந்து கொண்டிருக்க முடியாது. இருப்பினும் அவரது பயணமும், அதுவெளிப்படுத்துகின்ற செய்தியும் சிங்கள அரசியல் தலைமையை கலக்கமடையச் செய்துள்ளது.

இலங்கைத்தீவிற்கு ஐ.நா.வின் மனிதவுரிமை கண்காணிப்பாளர் குழுவை அனுப்பவேண்டும் என்ற மேற்குலக மனிதவுரிமை நிறுவனங்களின் கோரிக்கையை, ஐ.நா. மற்றும், ஐரோப்பிய ஓன்றியம் போன்றவை சாதகமாகப் பார்ப்பது சிங்கள ஆட்சியாளர்கள் எதிர்பார்க்காத ஒன்று. அவர்களது அப்பட்டமான மனிதவுரிமை மீறல்கள் பற்றி அனைத்துலகமும் நன்கு அறிந்து வைத்திருப்பதால், “மடியில் கனமில்லாதபோது வழியில் பயம் எதற்கு?” என சிங்கள ஆட்சியாளர்களைப் பார்த்து யாரும் கேட்கப்போவதில்லை. இவற்றிற்கு விளக்கமளிப்பது போன்று “சிறிலங்கா எவரினதும் நெருக்குவாரத்தை விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஐநாவிற்கான சிறிலங்காவின் நிரந்தரப்பிரதிநிதியும் சிங்கள தேசியவாதியுமான தயான் ஜயதிலக்க.

தற்போது நடைபெற்றுவரும் யுத்தத்தை தடுத்து நிறுத்த முடியாத யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவினர் போல் மனிதவுரிமை கண்காணிப்புக்குழுவும் செயற்திறனற்ற ஒரு அமைப்பாக இருந்துவிட்டுப் போகலாம். இவற்றின் மூலம் தமிழ்மக்கள் படும் அவலங்கள் நீங்கும் என்றும் கூறிவிடமுடியாது. ஆனால் ஐ.நாவின் பாதுகாப்புச்சபைக்கு போர்குற்றங்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்;பிக்கக்கூடிய தகமை வாய்ந்த இக்கண்காணிப்புக்குழுவை இலங்கைத்தீவில் நிலைகொள்ளச் செய்வதன் மூலம் தனக்கேற்படக்கூடிய அபாயத்தை சிறிலங்கா அரசு உணர்ந்துள்ளது.

சிறிலங்கா அரசின் மனிதவுரிமை மீறல்கள் என்பது இனி மேற்குலக அரசுகளுக்கு தமது நலன்கள் தொடர்பாக சிறிலங்காவுடனான பேரப் பொருளாக இருக்கப்போகின்றது என்பது தான் உண்மை.