வித்தியாசமான அரங்கேற்றம் ..

by:
கூத்தபிரான்

Maanasi Balendra's vocal Arangettram

செப்ரெம்பர் 22ம்திகதி பெக் தியேட்டரில் நிகழ்ந்த கர்நாடக இசை அரங்கேற்றம் பற்றி எழுத முனைகிறேன். நான் தொழில் முறை கலைத்திறனாய்வாளன் அல்ல, மிக பாமரத்தனமான கலை ஆர்வலன். எனவே ‘சுப்புடு’ க்களைப்போல சுற்றி வளைத்து பிய்த்துக் குதற முடியாது. நான் கண்டு உணர்ந்ததை அப்படியே கூறி விடுகிறேன்.

அன்று தனது இசையை – வாய்ப்பாட்டிசையை அரங்கேற்றியவர் மானசி பாலேந்திரா. நிகழ்ச்சி யாழ்ப்பாணத்து சைவமரபுப்படி கணபதி, கலைவாணி பூசைகளுடன் தொடங்கியது. மானசியின் அன்னை ஆனந்தராணி அடக்கமாக அனைவரையும் வரவேற்று நிகழ்வைத் தொகுப்பாளருடன் கையளித்தார். ஏற்கனவே தங்கள் பெயர்களை இசை உலகில் பொறித்திருக்கும் வாத்தியக் கலைஞர்கள் சூழ்ந்திருக்க மானசி கம்பீரமாக – அடக்கமாக அமர்ந்திருக்கிறார். குரு, இசைவலர் ரேணுகா சிறியானந்தா அருகமர்ந்து மாணவி மானசியை ஆற்றுப்படுத்துகிறார்.

கணீரென்ற – கலக்கமற்ற குரலில் மானசி பாட ஆரம்பிக்கிறார். ராகங்கள் தாளங்கள் எல்லாம் ஆற்றொழுக்காக கைவர சபையை வசப்படுத்துகிறார. சுருக்கமாக நேரடியாகச் சொல்கிறேன். மிக நன்றாக இருந்தது. தடுமாற்றமே இல்லாமல் வர்ணத்தில் தொடங்கி தில்லானா ஊடக திருப்புகழ் வரை சீர்மையாக நிறைவாக தனது முதலாவது கர்நாடக இசை நிகழ்ச்சியை மானசி எமக்கு வழங்கினார்.

‘காத்திருப்பு’ மனோகரன் மனுவற்பிளளையின் மகத்தான மறுபக்கத்தை அவரது சிறப்பு விருந்தினர் உரையூடாக அறிய முடிந்தது. மானசியை அருகிருந்து அவதானித்த வரலாற்றை கூறியிருந்தார்.

முதன்மை விருந்தினராக வந்திருந்தவர் பன்னாட்டு இசைமரபுகளைப் பயின்றவர் கிழக்கு – மேற்கு இசையில் சித்து விளையாடுபவர். நெடுந்தீவு சிற்றூரிலிருந்து புறப்பட்டு ஹொலிவூட்டின் இசைக் கொடுமுடி தொட்டவர். அன்றைக்கு பாடாமல் பேசினார். மோகன ராகத்தை மானசி எவ்வாறு லாவகமாகக் கையாண்டதை மட்டும் அவர் பேசவில்லை. மானசியை நம் மண்ணுக்கு, ஊரில் உள்ள அவள் தங்கை தம்பிகளுக்கு உதவ அழைத்தார். ஒளிர் மேடையில் நின்று இன்று இருண்டு கிடக்கும் நம் மண்ணுக்கு ஒளியேற்ற இந்தக்கலைஞன் ஒரு இளங்கலைஞரை அழைத்தது என் மனதைத் தொட்டது. இது பலரை நினைவுலகுக்குக் கொண்டு வந்திருக்கும்.

ஒரு நல்ல நிகழ்ச்சியை – அரங்கேற்றத்தை எபப்படித் திட்டமிட்டு அளந்து வழங்க வேண்டும் என்பதற்கு மானசியின் அரங்கேற்றம் ஒரு உரைகல்.

- ஒரு பேப்பர் சமூக செய்திப் பிரிவு