செப்ரெம்பர் 28 வெள்ளிக்கிழமை

வணக்கம்!
கடந்த ஒரு பேப்பர் சில நாள் பிந்தி உங்களுக்கு கிடைச்சிருக்கும். இந்த முறை ஒரு கிழமை பிந்திக் கிடைக்கப்போகுது. அதுக்காக முதல் உங்கட காலிலை விழுந்து மன்னிப்புக் கேட்கிறோம். என்னடா இப்பிடி அக்கறையில்லாமல் பேப்பரை அடிக்கிறாங்கள் அல்லது அடிக்கிறாளுகள் எண்டு நீங்கள் அலுத்துக் கொள்ளிறது விளங்குது. போனமுறை பேப்பர் வடிவமைக்கிறதிலை ஏற்பட்ட தாமதத்தாலை இந்த நிலையேற்பட்டிட்டுது. இருந்தாலும் போன பேப்பரை பார்த்திட்டு பலபேர் எங்களுக்கு இப்பத்தான் உங்கட பேப்பர் வாசிக்கக்கிற மாதிரி இருக்குது எண்டு பாராட்டிச்சினம்.

விசயம் என்னண்டா லண்டன் பதிப்பிலை வணிக்கக் குரல் எண்ட இணைப்பை சேர்த்திருந்தம் அந்த நேரம் பாத்து நோதன் றொக் எண்ட வீடு வாங்க கடன் வழங்கிற நிறுவனம் சரிஞ்சு போக, சனம் எங்களுக்கு அடிச்சு தம்பியவை நீங்கள் Sub Prime Mortgage பற்றி எழுதினதாலை எங்களுக்கு இந்த பிர்ச்சினையள் விளங்கக் கூடியதாய் இருப்பதாய் பாராட்டிச்சினம். தொடர்ந்து மாதத்தின் முதலாவது பேப்பரில் வணிகக்குரல் இணைப்பாக லண்டன் பதிப்புடன் வரும். கனேடிய பதிப்பிலையும் இப்படிச் செய்ய முயற்சிக்கிறம்.

வழமையா மாதத்தின் முதலாவது, மூன்றாவது வெள்ளிக்கிழமைகளிலை வாற ஒரு பேப்பர் நொவம்;பர் மாதம்வரை மாதத்தின் இரண்டாவது, நாலாவது வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும் என்பதை அறியத்தருகிறம். இதன்படி அடுத்த பேப்பர் ஒக்ரோபர் 12ம்திகதியும் பின்னர் ஒக்ரோபர் 26ம் திகதியும் வெளிவரும். என்னடா போட்டுக் குழப்புறாங்களே எண்டு புலம்பாமல் ஒரு கிழமை பிந்தி வருகிறது எண்டு நினைவிலை வையுங்கோ! இது ஒண்டும் சனி மாறிற மாதிரியில்லை . .டிசம்பரிலையிருந்து பழைய மாதிரி வரும்.

இந்த பேப்பரில் “விரியம்” என்ற புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு இளைஞர் குழுவின் இந்த முயற்சி அடுத்துவரும் பேப்பர்களில் இன்னமும் விரியும். இந்தப் பகுதி தொடர்பாகவும் உங்கட கருத்துக்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கோ! செய்யிற ஆக்கள் கொஞ்சம் புதுசு. ஆனாபடியாலை கண்டபடி திட்டிப் போடதேங்கோ. விட்டுட்டு போயிடுவாங்கள்.

ஒரு பேப்பர் ஒரு சமூகப்பத்திரிகைதான் இருந்தாலும் உங்கட குடும்பப்பிரச்சினையளை பேப்பரிலை போடுங்கோ எண்டு கேட்கிறது எங்களுக்கு நியாயமாய்படேல்லை. வேணுமெண்டா ஆச்சியிட்டை அடவைஸ் கேளுங்கோ. ஒருதரும் தன்ரை புத்திமதியளை கேட்கிறேல்லை எண்டு மனிசி கோவிச்சுக்கொண்டு போயிட்டுது. தேடிக் கண்டுபிடிச்சு கூட்டிக்கொண்டு வாறம்.

மறந்திடாதிங்கோ அடுத்த பேப்பர் ஒக்ரோபர் 12ம் திகதி வரும்.
மீண்டும் சந்திப்பம் ..