என் ஞாபகப்பதிவிலிருந்து....

by:
- சுதந்திரா -

அடிக்கடி வந்து குற்றிய நுளம்பின் கடியைத் தவிர்த்துத் தூங்கி விழித்த போது நேரம் 2
மணியென்றது மணிக்கூடு. அனேகர் எழுந்திருந்தனர். அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட
வேண்டும் எனும் ஆவல் எல்லோர் முகங்களிலும் அந்தச் சிமினி விளக்கின் ஒளியிலும்
தெரிந்தது.....


நேரம் 4 மணியாகிவிட்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் இயற்கைக் கடன்களை முடிக்கவென
எழுந்து போய்க்கொண்டிருந்தனர். ஒருவர் நாங்கள் படுத்திருந்த இடத்தை பாதுகாத்திருந்த
தகரத்துக்கு பின்னே நின்று கடமை புரிந்ததன் விளைவு பலரது கோபம் அவர்மீது விழ அவர்
ஒளிந்த ஒளிப்பு அந்த விடியலில் சிரிப்பாயிருந்தது.


அந்தத்தேனீர்க் கடையில் நீண்டிருந்த வரிசையில் நானும் சுதான்ரியும் காத்து நின்றோம்.
பாரும் இந்த நிலமையளை ? ஒரு நாளிலை முடியிற பயணங்கள் எத்தினை கரைச்சலுக்கை
நடக்குது.....?


பொழுது புலர்ந்து நேரம் 6.40 எல்லோரும் தங்கள் கடமைகள் முடித்து ஒவ்வொரு
கொட்டகைக்குள்ளும் வரிசையாய் நின்றனர். தமிழீழ காவல்துறையின் அனுமதி பெறுவதற்கான
நேரமது. அந்த வரிசையில் நானும் சுதான்ரியும்....பெடியளிட்டையிருந்து போகிலாம் ஆனா
அவங்களிட்டையிருந்து உள்ளுக்கை போறதுதானே பிரச்சனையே. அங்கு நின்ற பலரது அங்கலாய்ப்பு
அது.....அந்த அங்கலாய்ப்புக்கு மத்தியிலும் நகைச்சுவைப் பேச்சுகளும் , சிரிப்புகளுமாய்
கழிந்து கொண்டிருந்த அந்த நிமிடங்கள்.....அந்தக் காத்திருப்பின் கனத்திலும் பலரை
மனம் விட்டுச் சிரிக்க வைத்தது. துயர்வந்து அள்ளிப்போகிடினும் அஞ்சாது துணிந்து நின்று
இன்றுவரை வன்னிமண்ணைத் தங்கள் கைகளிலே சுமந்து நிற்கும் இந்த மக்களின் முகங்களில்
துயர் சுமந்த வடுவே மறந்து சிரித்த காட்சி நினைவிலிருந்து அகலாத ஞாபகம்.....


அங்கு எங்களது கொட்டகையில் இருந்த ஒரு அம்மாவின் ஓயாத கதையில் அனேகர் அவர்பக்கம்
தங்கள் பார்வைகளைக் கொடுத்து லயித்து நிற்க அந்த அம்மா கேட்டா தேத்தண்ணி
ஊத்துங்கோ பிள்ளையள் ஒரே களைப்பாயிருக்கு....என சீனிமுடிஞ்சுபோச்சு இந்த நேரம் பாத்து
தேத்தண்ணி கேக்கிறியள் என்றாள் அருகிருந்த ஒருத்தி. அவள் கேட்ட விதம் எல்லோரையும்
சிரிக்க வைக்க சுவையான உரையாடல்களும் , ஆமிவந்தபோது ஓடிய ஓட்டமும் , ஓயாத அலையெழுந்து
வன்னி வெல்லப்பட்ட போது அவர்களடைந்த ஆனந்தத்தின் நினைவுபற்றியெல்லாம் நிறைய
விடயங்கள் அலசப்பட்டு அரசியலிருந்து பல விடயங்கள் அந்த நிமிடங்களில் பகிரப்பட்டுக்
கொண்டிருந்தது.


தமிழீழகாவல்துறையிடமிருந்து அனுமதி பெற்று விளக்கு வைச்சகுளம் பகுதிக்குப் போவதற்கான
வாகனத்தில் ஏறுகிறோம். கே.கே.எஸ் விதியில் பலாலி வீதியில் பயணம் செய்த அந்த
நாட்களின் நினைவுகள் வந்து போனது.


முன்னைய அந்தப் பயணங்களின் போது உள்ளே காற்றுப்புக முடியாது இருப்பவர்களே திணறப்
பின்னுக்கு போங்கோ பின்னுக்குப் போங்கோவென சனத்தை அடையும் அந்த வாகன
உரிமையாளர்கள் கத்தும் கத்தில்லாமல் ஒரு வாகனத்தில் கொள்ளக் கூடியவர்களை மட்டுமே
ஏற்றியபடி பயணிக்கவிருந்தன. இந்தச் சாரதிகளும் சனங்களும் ஒழுங்கான போக்குவரத்துச்
சட்டத்தை ஏற்று பயணிக்கக் கற்றுக் கொண்டுள்ளதும் மலரவிருக்கும் சுதந்திர தேசத்தின்
ஒழுங்குகள் எத்தகைய சீர் பெறும் என்பதைக் கூறியது.


வெளிநாடுகள் போல் அளவுக்கு அதிகமானோரை ஏற்றவிடாது வாகன ஒழுங்கு விதிகள் அருமையாகக்
கடைப்பிடிக்கப்படும் இந்தச் சட்டத்தை உருவாக்கி அருமையான கட்டுப்பாட்டையும்
கடைப்பிடிக்க வழியமைத்துத் தந்துள்ள எங்கள் தேசியத்தலைவனை எங்கள் தேசத்தவர்
ஒவ்வொருவரும் என்றென்றும் நினைவு சுமப்போம்.


அக்கா போறீங்களா ? களைக்கக் களைக்க வந்து கேட்ட அந்த இளைஞனை யாரென நினைவுபடுத்து
முன்னம் அவனே தன்னை அடையாளப்படுத்தி வைத்தான். ஓ....வன்னியை தரிசிக்க நான் இவனது
வாகனத்திலல்லவா போனகிழமை வன்னிக்குப் போனேன். ஓம் போப்போறன். சரியக்கா
அடுத்தமுறை வரேக்கை சந்திப்பமக்கா....சொல்லிவிட்டுப் போனான் அவன்.


அதிகம் ஆட்டம் , அசைவு , குலுக்கல் , பிரட்டல் இல்லாதிருந்த விளக்கு வைச்சகுளமிருந்து
வவுனியா நகரம் வரையான அந்தக்கண்டிவீதியில் நீண்டிருந்த வரிசையில் நானும் ,
சுதான்ரியும் அந்தப்பத்தரை மணி இளவெயில் சூட்டிலிருந்து எம்மைக் காத்துக்கொள்ள
சுதான்ரி தனது குடையை விரித்து எனக்கும் பிடித்தா. ஊர்ந்து கொண்டிருந்த வரிசை
வேகமெடுத்தது. அருகிருந்த அழிபட்ட மரங்களுக்கு நடுவேயும் , அதற்கப்பாலும் நின்றிருந்தது
சிங்களப்படையும் , அதன் அதிகாரமும்....


நெஞ்சு கனக்கிறது நினைவெல்லாம் முல்லை மண்ணிலும் , அந்த முதிசமண்ணில் என்
சொந்தமாகிய அனைத்து உறவுகளையும் ஞாபகத்தில் பதிவாக்கியபடி போகிறேன் தாய்மடியே
போகிறேன் உன் வாசம் சுமந்தபடி போகிறேன். மீண்டும் வருவேன் தாய்மடியே உன் மடியில்
வாழ்வதற்கு.