சரியான பாதையில் ஜே.வி.பி

இன்றைக்குச் சிறிலங்காவிலே இனவாதம் கக்குகின்ற கட்சிகள் என்றதுமே எம் நினைவில் வருவது ஜாதிக ஹெல உறுமயவும் ஜனதா விமுக்தி பெரமுன என்கின்ற ஜே.வி.பியும் தான்.

ஆனால் இலங்கையின் அரசியலையும் ஜெ.வி.பி.யின் கடந்த காலத்தையும் பின்நோக்கிப் பார்த்தால் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகச் சரியான பாதையிலே செல்லுகின்ற அரசியல் கட்சியாகவே ஜெ.வி.பியைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

முதலாவதாக மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜெ.வி.பியினர் ஜனநாயகத்திலே பாராளுமன்ற அரசியலிலோ எப்போதுமே நம்பிக்கை கொண்டவர்களல்ல.

ஒரு மருத்துவ பீட மாணவனாக ரஸ்யாவிலே கல்வி கற்றுக் கொண்டிருந்த றோஹண விஜேவீரா அவர்கள் மாக்சியத் தத்துவங்களால் கவரப்பட்டவராய் இருந்தார். கியுபப் புரட்சி அவரைப் பெரிதும் கவர்;ந்திருந்தது. குறிப்பாக புரட்சியாளர் சேகுவேராவின் வழியை அவர் பெரிதும் விரும்பினார்.

அவர் ரஸ்ய அரசு தொடர்பான விமர்சனங்களை முன்வைத்த காரணத்தால் தன்னுடைய கல்வியைத் ரஸ்யாவில் தொடரமுடியாமல் போனது. இதைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் நாட்டம் காட்டத் தொடங்கிய விஜேவீரா இலங்கையின் ஜனநாயக ஆட்சி முறையால் ஏழை மக்கள் எந்தப் பலனையும் பெறப் போவதில்லை, ஆயுதப் புரட்சி மூலமே மக்கள் விடிவு பெறலாம் என்ற பிரச்சாரத்தை இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக பின்தங்கிய கிராமப் பகுதிகளில் இரகசியமாக முன்னெடுத்தார்.

இதன் அடுத்த கட்டமாக 1971ம் ஆண்டிலே சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியைத் தூக்கியெறிவதற்காக ஒரு ஆயுதப் புரட்சிக்கு ஏற்பாடு செய்தார். சரியான திட்டமிடலில்லாத காரணத்தால் சிறிமாவோ அரசாங்கத்தால் அந்தப் புரட்சி ஒடுக்கப்பட்டது. கொடுங் கரங் கொண்டு ஒடுக்கப்பட்ட இந்தப் புரட்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். றோஹண விஜேவீரா உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்;டு வெளியில் வந்த விஜேவீராவின் மனதில் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்றும் எண்ணம் கருகிவிடவில்லை.

ஆனால் பெரும்பாலான உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் சுனந்த தேசப்பிரிய , விக்டர் ஐவன் உள்ளிட்ட பலர் கருத்து முரண்பாடுகளினால் வெளியேறிய நிலையிலும் உடனடியாக இன்னொரு புரட்சியை நடத்த முடியாதென்பதை உணர்ந்து காலங் கனியும் வரை ஜனநாயக அரசியல் என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டு காலங்தள்ள முடிவு செய்தார்.

தமது அரசால் கடடவிழ்த்து விடப்பட்ட 83ம் ஆண்டுக் கலவரத்திலிருந்து தமது முகத்தை சர்வதேச அரங்கில் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்தப் பழியை ஜே.வி.பி மற்றும் இடது சாரிக் கட்சிகளின் தலையில் போட்டு அவற்றைத் தடை செய்யும் கைங்காரியத்தை ஜே.ஆர்.

இந்த நிலையில் இரண்டாவது புரட்சியை தான் எதிர்பார்தததற்கு முன்னதாகவே ஆரம்பிக்க வேண்டிய நிலை ஜெ.வி.பிக்கு இருந்தது.

1980 களின் இறுதிப் பகுதியில் கிட்டத்தட்ட சிங்களப் பிரதேசத்தை ஒரு காகிதத் துண்டின் மூலம் கட்டுப்படுத்தும் அளவிற்கு அவர்கள் பலம் பெற்றிருந்தார்கள். ஆனால் உள்வீட்டுப் பிரச்சினைகள் காரணமாக அந்தப் போராட்டமும் நசுக்கப்பட்டதுடன் விஜேவீரா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். சிலர் நாட்டை விட்டுத் தப்பியோடினர்.

இந்த நிலையில் பழைய குருவி கதவைத் திறவடி பாணியில் மீண்டும் ஜனநாயகம் பேச வேண்டிய நிலை அவர்களுக்கு எற்பட்டது. அதனால் ஜனநாயக அரசியலில் கால் வைத்திருந்தாலும் அடுத்த புரட்சிக்கான காலம் கனியும் வரை காத்திருக்கும் ஒரு அமைப்பாகவே ஜெ.வி.பி இருக்கிறது.

இலங்கையின் போர்ச் சூழல் தமது திட்டத்ததை நிறைவேற்றுவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது, தொடர்ந்து இருக்கும் என்பதை நன்கு உணர்ந்து வைத்திருப்பதால் யுத்தம் நீடிக்க வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடம் யுத்த மனநிலை முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது.

அத்துடன் முதலிரு சந்தர்ப்பங்களைப் போலன்றி இம்முறை ஒரு குறிப்பிடத்தக்க மக்கள் செல்வாக்கைப் குறிப்பாக நகரப் பகுதிகளில் பெற்றுவிட வேண்டுமென்பதிலும் குறியாக இருக்கின்றனர்.

சிங்கள மக்களிடம் அரசியல் ரீதியாகக் குறுகிய காலத்தில் செல்வாக்குப் பெறுவதற்கான வழி இனவாத சிங்களக் கோசமே என்பதை அனைவரும் அறிந்ததே. பண்டாரநாயக்காவின் தனிச் சிங்களச் சட்டம் என்ற கோசம் கட்சியைத் தொடங்கி சில காலத்திலேயே அரசுக் கடடிலில் அமரும் அளவிற்கு அவர்களை உயர்த்தியதும் அனைவரும் அறிந்ததே.
எனவே ஜெ.வி.பியும் இனவாதத்தையே தன்னுடைய அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வருகிறது. ஆதன் மூலம் கறிப்பிடத்தக்க மக்களின் செல்வாக்கையும் பெற்றிருக்கிறது.

அது மட்டுமன்றி சிறிலங்கா அரசாங்கம் போர்ச் சூழல் காரணமாக அவசர அவசரமாக பினபுலத்தை நோக்காது பலரையும் இராணுவத்தில் சேரத்து வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல ஜே.வி.பியினர் இன்றைக்கு சிறிலங்கா இராணுவத்திற்கள் நுழைந்து விட்டனர்.

அத்துடன் 80களின் இறுதிப்பகுதியில் பெருமளவு ஆயுதங்களைக் கொண்டிருந்த இவர்களின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட போதிலும் பெருமளவிலே ஆயுதங்கள் கைப்பற்றப்படவில்லை.

அந்த ஆயுதங்கள் எங்கே என்ற கேள்வியும் அவற்றை அரசிடம் கையளிக்காமல் எதற்காக வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வியும் நியாயமானதே. ஆனால் பதவிக் கதிரையில் அமர்ந்திருப்பதற்கு இவர்களின் ஆதரவு தேவையாயிருப்பதால் சிங்கள அரசாங்கங்கள் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை.

இவை எல்லாவற்றையும் கவனிக்கின்ற போது இம்முறை ஜனநாயகப் போர்வையில் ஆட்சியைக் கைப்பற்றிப் பின் தமது திட்டத்தை நிறைவேற்றுவது அல்லது முன்னரைப் போலல்லாது இராணுவம். அரச நிர்வாகம், தொழிற்சங்கங்கள் என்பவற்றுக்குள் பெருமளவில் ஊடுருவி சரியான திட்டமிடலுடன் ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவது என்ற இரட்டைத் திட்டத்துடன் சரியான பாதையில் ஜெ.வி.பி செயலாற்றிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.