பொருண்மியத்தை ஆயுதமாக்குவோம்!

“தமிழ் மக்களின் அபிலாசைகளை தான் அறிந்திருந்தும் சிங்கள மக்களின் வாக்குக்களே தனக்கு முக்கியமானவை. எனவே அவர்களுக்கு ஏற்புடைய தீர்வொன்றைப்பற்றி மட்டுமே தன்னால் சிந்திக்க முடியும்” எனவும் “சமஸ்டி முறைமை என்பது சிங்கள மக்களுக்கு கெட்ட வார்த்தை போலிருப்பதால் அதுபற்றி தான் அக்கறைப்படவில்லை” எனவும் திரு. மகிந்த இராஜபக்ச இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.  இது போன்ற கருத்துக்களை முன்பிருந்த சிங்களத்தலைவர்களும்; பூடகமாகத் தெரிவித்து வந்திருக்கிறார்கள். ஆனால் சிங்கள மக்களின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படையாகத் அறிவித்திருக்கும் மகிந்த பாராட்டுக்குரியவர். 2005ம் ஆண்டில், அவர்பதவியேற்ற சிலகாலத்தில், அவரை ஒரு யதார்த்தவாதி என திரு. பிரபாகரன் அவர்கள் தனது மாவீரர்தின உரையில் குறிப்பிட்டமை இங்கு பொருத்தமாகவே உள்ளது.

தமிழர்களின் அரசியல் உரிமைகள் என வருமிடத்தில், சிங்கள மக்கள் இன்னமும் விட்டுக்கொடுக்காத மனப்பாங்கில் இருக்கிறார்கள் என்பது மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மத்தியில் தமிழர்களின் போராட்டம் பற்றிய நியாயத்தை விளக்குவதற்கு பரப்புரை செய்யப் புறப்பட்டவர்களும் காலத்தை விரயமாக்கினார்களே தவிர வேறெந்தப் பலனையும் காணவில்லை. வல்லாதிக்க நாடுகளினதும் அவர்களது அரசு-சாரா நிறுவனங்களினதும் உபதேசங்களும் சிங்கள மனோபாவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

யுத்தத்தால் சிறிலங்காவின் பொருளாதாரம் தளர்வடைகின்றபோது சிங்கள மக்களின் மனநிலையில் சற்று மாற்றம் தெரிவதும் பின்னர் சமாதானகாலத்தில் பொருளாதாரம் தேறும்போது மீள பழைய நிலைக்குச் செல்வதும் கடந்தகால அனுபவங்கள். இதன் அடிப்படையில் அவர்கள் மீது பொருளாதார நெருக்குவாரத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களது யுத்த வெறி தணிக்கப்படலாம். அல்லது யுத்தம் புரிவதற்கான அவர்களது ஏதுநிலையை அகற்றலாம் என்ற கருத்து தமிழர் மட்டத்தில் முனைப்புப் பெற்று வருகிறது.

ஏற்கனவே சிறிலங்காவின் பொருளாதாரம் தளர்ச்சி அடைந்து வருகின்ற நிலையில் நாட்டின் நிதிநிலையைச் சீர்செய்ய வெளிநாட்டு வைப்பகங்களில் கடன் பெற்றுக் கொள்ளும் நிலைக்கு சிறிலங்கா அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறிலங்காவுக்கு வருவாயை ஏற்படுத்திக் கொடுக்கிற எல்லாவிதமான நடவடிக்கைகளையும் புலம் பெயர்ந்த தமிழர்கள் உடன் நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

தமிழர் தரப்பை பலப்படுத்துவதில் காட்டும் அக்கறைபோன்று சிங்களத் தரப்பை பலவீனப்படுத்துவதிலும் அறிவுபூர்வமாகச் சிந்தித்து செயற்படுவோம்.