வெள்ளி 7 செப்ரெம்பர் 2007

வணக்கம்!

என்னதான் இருந்தாலும் உங்களை நேரில் சந்திக்கிறது மாதிரி வராது. நேருக்கு நேர் இன்ரறக்ரிவ் ஆக உங்களது பூராயங்களை கேட்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. போன ஞாயிற்றுக்கிழமை பரிஸ் லாசப்பலில் தெருவோரத்தில் வைத்திருந்த ஒருபேப்பர் பதாகைக்கு அருகில் எங்களை சந்தித்து உங்கள் கருத்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. லைலாவைத்தான் காணேல்லை. ஆக்களுக்கு முகங்கொடுக்க பயந்திட்டாவோ அல்லது உருமாற்றியபடி வந்தாவோ தெரியேல்லை. நீங்கள் ஒரு பேப்பரில் வைத்திருக்கும் அபிமானம் எங்களை யோசிக்க வைக்கிறது. (எப்பிடி உங்கட எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிறது எண்டுதான்)

அடிக்கடி சொல்லிற விசயந்தான் .. திரும்பவும் நினைப்பூட்டுகிறோம்…. உங்கட ஆக்கங்கள் ஆசிரியர் குழவினால் பரிசீலிக்கப்பட்டு தேவையேற்படின் அவை சுருக்கப்பட்டு,  அல்லது திருததப்பட்ட பின்னரே பதிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படும். இது சரிப்பட்டு வராது எண்டிற ஆக்கள் உங்கட ஆக்கங்களை அனுப்பவேண்டாம் என தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்.

லண்டனில் புதிதாக சில தமிழ் பத்திரிகைகள் வெளிவரத்தொடங்கியுள்ளன. இவற்றின் பதிப்பாளர்களுக்கு வணக்கம்கூறி வரவேற்றுக்கொள்கிறோம். யாம் பெற்ற துன்பம் இந்த வையகமும் பெறவேண்டாமோ?

எமது இணையத்தளம் பரீட்சார்த்தமாக கடந்த இரண்டு மாதமாக இயங்குகிறது. நாள்தோறும் அதனை பாரவையிடுபவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. பேப்பரில் இடவசதியின்றி பிரசுரிக்க முடியாதவற்றை (படங்கள் உட்பட) அங்கு பிரசுரிக்க இருக்கிறம்.

வடஅமெரிக்கா- ஐரோப்பா அடங்கலாக உங்கள் பகுதிகளில் நடந்த அல்லது நடைபெற இருக்கிற சமூக நிகழ்வுகள் பற்றி அறியத் தாருங்கோ. அவற்றை பிரசுரிக்கவும் சமூகத்திற்கான ஊடகமாகச் முழமையாகச் செயற்படவும் ஒருபேப்பர் எப்போதுமே தயாராக இருக்கிறது. 

நாங்கள் பேப்பரை எல்லா இடமும் வைக்கிறதும், ஆனால் அதை ஒரு இடமும் காணேல்லை அடிக்கிறதை நிப்பாட்டிப் போட்டியளோ எண்டு நீங்கள் கேட்கிறதும் தொடர்ந்து கொண்டிருக்கிறதாலை. எங்கை எங்கை பேப்பரை வைக்கிறனாங்கள் எண்ட விபரத்தை வெளிப்படுத்திறம். அங்கை போய் எடுங்கோ. அல்லது சந்தாரராய் சேர்ந்து கொள்ளுங்கோ.


ரீன்ஸ் பேப்பரிலை எழுதிற தர்மிளா தனது புதிய கட்டுரைமூலம் என்னவோ ஒட்டு மொத்த தமிழரை மானத்தையும் வாங்கீட்டதாய் குற்றம் சாட்டிற ஆக்களின்ர கவனத்துக்கு. உங்களுக்கு அவவின்ர கருத்து பிடிக்கேல்லை எண்டா உங்கட கருத்தை எழுதி அனுப்புங்கோ. அதைவிட்டுட்டு அந்த கட்டுரையை நிப்பாட்டும் படி சொல்லிறதிலை நியாயம் இருக்கிறதாய் எங்களுக்கு தெரியேல்லை.

மீண்டும் சந்திப்பம்