பிரதேசவாதம் தமிழருடைய பூர்வீகச் சொத்துப் பாருங்கோ. சங்ககாலத்திலேயே ஐந்திணை ஒழுக்கம் என்கிற நிலங்களுக்கேற்ற அகப் புற வாழ்க்கையைப் புலவர்கள் பாடத்தொடங்கிற்றாங்க. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலையென்கிற ஐவகை நிலத்திலையும் வாழ்ந்த மக்களுடைய காதல் வாழ்க்கையும் போர், சமூகத் தொடர்புகள் தொடர்பான புறவாழ்க்கையும் அந்தந்தப் பிரதேசத்துக்கேற்றாற்போல வேறுபட்டிருநததை அவதானித்த புலவர்கள் அவ்வாழ்க்கை முறைமைகளை நில வழிப்பட்ட ஐந்திணை ஒழுக்கங்களாகப் பிரித்துப் பிரதேசவாதம் புரியத் தொடங்கிற்றாங்க. குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்த இந்த ஐவகை நில மக்களும் பின்னர் சேர சோழ பாண்டியப் பேரரசுகளுக்குக்கீழ் திரும்பவும் பிரதேச ரீதியாகப் பிரிந்து ஒருவரையொருவர் அழிக்கிற கைங்கரியத்தைச் செய்ததால தமிழன் ஆதிகாலந்தொட்டே தன்னினந்தின்னியாகத்தான் இருந்திரிக்கிறான். அதோட காட்டிக்கொடுப்புகழும் தொடர்ந்திரிக்குது.
சோழ, பாண்டியப் பேரரசுகளுடைய கொடுமைகளைத் தாங்கமுடியாது மலைப்பிரதேசங்களில ஒதுங்கி வாழ்ந்த குறிஞ்சி நிலமக்கள் பிற்காலத்தில தங்கட தாய்மொழியான தமிழின் தூய்மையை மறந்து கொச்சையாகப் பேசத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல்; இந்தப் பிரிவினைப்போரால ஆதிக்கம் பெற்று ஊடறுத்த வடமொழியையும் பாவிக்கத்தொடங்கினதால கேரளம் எண்டிற சேரநாட்டினுடைய மொழி தமிழிலிருந்து வேறுபட்டு மலைப்பிரதேச மக்கள் பேசும் மலையாளமாய் மாறிப்போயிற்றுது. மலையாளத்துக்குக் கொச்சைத்தமிழ் எண்டிற ஒருபேரும் உண்டு. இப்பிடிக் கொச்சைத்தமிழ் பேசுவோர் வாழும் கப்பற்துறையைக் கொச்சித்துறைமுகம் என்றும் வழங்கினார்கள். கொச்சித் துறைமுகத்தைக் கொற்கையெண்றும் அந்தத் துறைமுகப் பிரதேசம் முத்துச்சலாபத்pற்கும் முத்துவாணிபத்திற்கும் பெயர்போனதென்றும் பழைய வரலாறுகள் கூறுகின்றன.
இந்தியாவுக்கு வெள்ளைக்காரர்கள் ஏலம், கராம்பு, கறுவா, மிளகு, யானைத்தந்தம், முத்து போன்ற காடுபடு, கடல்படு திரவியங்களை வாங்கவந்தபோது இந்தக் கொற்கைத் துறைமுகத்தைப் பெரிதும் பாவித்தாகள். அப்போது அவர்கள் அமெரிக்காவிலிருந்து கொலம்பஸ் கொண்டு வந்த தாவரவியல் ரீதியாக சொலனேசியே எண்டிற ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மிளகாயையும் உருளைக்கிழங்கையும், புகையிலையையும், தக்காளியையும், கத்தரியையும், அவற்றைவிட, நாம் தற்போது பூசினிக்காய் என்று கூறும் பரங்கிக்காயையும் கீழைத்தேயங்களில் அறிமுகப்படுத்தினார்கள்.
உண்மையில் மேற்கூறப்பட்ட தாவரவகைகளுக்கு உரிய பூர்வீகச்சொற்கள் எதுவும் நம்மிடமில்லாததற்குக் காரணம் அவை மேலைநாட்டினரால் நமக்கு அறிமுப்படுத்தப்பட்டமைதான். மிளகாய்க்கு ஆங்கிலேயரிடமும் ஒழுங்கானவோர் சொல்லில்லை. மிளகைக்குறிக்கும் பெப்பர் என்னும் சொல்லை அல்லது தென்னமரிக்க நாடான சிலி என்னும் சொல்லையே அவர்களும் மிளகாய்க்காகப் பாவிக்கின்றனர். நாமும் அவர்களைப்போல் அதை மிளகாய் என்கிறோம்.
மட்டக்களப்பை;ப் பொறுத்தவரை மிளகாயென்று கூறும் வழக்கம் குறைவாகவுள்ளது. அங்கே அதனைக் கொச்சிக்காய் அதாவது கொச்சித் துறைமுகத்திலிருந்து இறக்குமதியாக்கப்பட்ட காய் என்ற பொருள்பட மக்கள் அழைக்கிறார்கள். இந்தக் கொச்சிக்காய் வர்த்தகம் மட்டக்களப்பில் முதன்முதலில் அறிமுகமானபோது சில தனவந்தர்கள் அந்த இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டனரென்றும். அத்தகைய வர்த்தகர்களில் ஒருவர் பெயர் கொச்சிக்காய்க் காசிநாதர் என்றும் அவரின் வழிவந்த சந்ததியினரே தாங்களென்றும் எனது தாயார் ஒருமுறை கூறக் கேட்டிருக்கிறேன். இற்றைக்கு ஒரு நானூறு, ஐநூறு ஆண்டுகளுக்குமுன் அங்கே பெருந்தனக்காரர்கள் கொச்சிக்காய் வியாபாரம் செய்திருக்கிறார்கள். அக்காலத்தில்த்தான் மட்டக்களப்புப் பிரதேசத்தில் கறிக்கு மிளகாய்பபொடி தூவும் பழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன்னரெல்லாம் கண்டியோடு வர்த்தகம் செய்து அங்கிருந்து வாங்கிக்கொண்டு வந்த மிளகையே கறிசமைக்கப் பாவித்திருக்கிறார்கள்.
மட்டக்களப்பு மக்களின் உணவுப் பழக்கம் வடபகுதி மக்களோடு ஒப்பிடுகையில் பல வேறுபாடுகளையுடையது. பொதுவாக பிட்டு, இடியப்பம் போன்ற மாப்பண்டங்களுக்கு அவர்கள் கோதுமை மாவைப் பாவிப்பதில்லை. ஒடியற்கூழ் காய்ச்ச அங்கு அனேகருக்குத் தெரியாது. ஏனென்றால் பனைவளம் அதிகமில்லை. மட்டக்களப்புப் பிரதேசத்திலேயே களுவாஞ்சிகுடிக் கிராமப் பிரதேசம் மட்டும்தான் பனைவளமுடைய பிரதேசமாகும். பனங்கிழங்கு சீசனில் அவ்வூர் பஸ்தரிப்பு நிலையத்தில் அவித்து வெளித்தோலை உரித்த பனங்கிழங்குகளை கட்டுக்கட்டாய்க் கட்டி அவ்வளியால் வாகனங்களில் கல்முனை, அம்பாரை, மட்டக்களப்புப் போன்ற பிரதேசங்களை நோக்கிப் பிரயாணம் செய்யும்; பிரயாணிகளுக்கு விற்பனை செய்வர். அதைவிட வேறு பிரதேசங்களில் பனை உற்பத்திப் பொருட்கள் குறைவாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன.
இஸ்லாமிய மக்கள் வாழும் காத்தான்குடி, ஏறாவூர் பிரதேசங்களில் பனையோலைப் பாய், பெட்டிகள் போன்றவற்றை அவ்வூர்ப் பெண்கள் செய்கின்றனர். பனையோலைக் கைத்தொழிலை ஒரு வியாபாரமாக வெற்றிகரமாகச் செய்வதில் தமிழ்ப் பெண்களிலும் இஸ்லாமியப் பெண்களே முன்னணியிலுள்ளனர். அவ்வாறே கல்முனையை அடுத்துள்ள மருதமுனை, சாய்ந்த மருதூர் போன்ற ஊர்களில் பன்பாய், பன்கூடைகள் பின்னும் தொழிலிலும் இஸ்லாமியர்கள் மிகுந்த திறமை சாலிகளாகவுள்ளனர்.
தமிழர்கள் மத்தியில் இத்தகைய கைத்தொழில்களின்மேல் ஏன் பெரிய அளவில் ஆர்வம் ஏற்படவில்லை என்று தெரியவில்லை. இஸ்லாமிய மக்களைப்போல் மிகவும் நெரிசலான கிராமங்களில் வாழாமல் போதிய நில வசதிகளுடன் தமிழர்கள் வாழ்வதாலும் வானம் பார்க்கும் சோம்பேறித்தனமான விவசாயத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாலுமே இத்தகைய சிறுகைத்தொழில்களின் மேலான ஆர்வம் மட்டக்களப்புத் தமிழர்களுக்கு இல்லாமற் போய்விட்டது. போதாததற்கு நாட்டுப் பிரச்சனை வேறு அவர்களின் உற்பத்திப் பொருட்களை வெளியிடங்களுக்குக் கொண்டு சென்று சந்தைப்படுத்த முடியாமல் ஆக்கிவிட்டதால் மட்டக்களப்புத் தமிழரின் பொருளாதாரம் மழையை நம்பி வானம்பார்க்கும் விவசாயத்திலேயே முடங்கிவிட்டது.
மட்டக்களப்பு மக்களின் உணவுப் பழக்கத்தைப் பற்றிச் சொல்ல வெளிக்கிட்ட இடத்தில் கொஞ்சம் தடம் மாறிப் போய்விட்டது. திரும்பவும் விட்ட இடத்திற்கு வருகிறேன்.
கலியாணமென்றாலும், சாமத்தியச் சடங்கென்றாலும் மட்டக்களப்பில் விருந்து அசைவமாகத்தான் இருக்கும். வடபகுதி மக்களைப்போல் சுத்த சைவமான விருந்து படைக்கும் பழக்கம் அங்கே இல்லை. கோயிலில் கலியாணம் நடந்தாலும் முடிந்ததும் வீட்டுக்கு வந்து ஆடு கோழி அடித்த விருந்துதான் உண்டு மகிழ்வார்கள்.
எனது தாயார் விரதம், வெள்ளிக்pழமைகளில் மரக்கறியென்று ஆசாரமான பழக்கங்களையுடையவராயிருந்தார். ஆனால் தந்தையாருக்கோ அசைவமில்லாமல், பொதுவாக மீனில்லாமல் சோறு இறங்காது. ~நானுங்கொஞ்சம் ஆசாரமான ஆள். வெள்ளிகிழமைகளில் கட்டாயம் ஒரு மரக்கறியை உணவோடு சேர்த்துக்கொள்ளுவேன்.|
தொடருவம்.
Recent comments
2 weeks 6 days ago
7 weeks 5 days ago
8 weeks 1 day ago
10 weeks 5 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
22 weeks 5 days ago
22 weeks 5 days ago
22 weeks 6 days ago