நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உதைபந்தாட்டத்தின் உலகக்கிண்ணத்திற்கான போட்டி எந்த நாட்டில் நடந்தாலும் பிரித்தானிய அரசாங்கம் வயிற்றில் நெருப்பைக்கட்டிக் கொண்டு இருக்குமளவிற்கு அந்த நாட்டின் உதைபந்தாட்ட ரசிகர்கள் நடந்து கொள்வார்கள். போட்டி நடக்கும் நாட்டிற்கு ஆயிரக்கணக்கில் போய் இறங்கி, தங்கள் அணியைத்தவிர வேறு எந்த அணி வென்றாலும் கலாட்டாதான். வேறு ஒரு நாட்டிற்குப்போய் அந்த நாட்டு ரசிகர்களிடம் கலாட்டா பண்ணுவதற்கும் ஒரு “தில்” இருக்கவேண்டும்.
இப்படியான “தில்” இருப்பதாக நினைத்துக்கொண்டுதான் ஒருமுறை எங்கள் பள்ளிக்கூட அணிக்கு ஆதரவாக நாங்கள் கொஞ்சப்பேர் வெளியூர் ஒன்றுக்குப் போனோம்.
உதைபந்தாட்டம் அல்ல. வொலிபோல் என்ற கரப்பந்தாட்டம். கிரிக்கெற் போன்ற வெள்ளக்காரரின் விளையாட்டுக்கள் எங்கள் கிராமப்பகுதிகளுக்குள் நுழையாத காலத்தில் கிராமப் பள்ளிக்கூடங்களில் கரப்பந்தாட்டம் தான் கோலோச்சியது.
இரண்டு பனங்குற்றிகளை நட்டு, குறுக்கே வலையைக்கட்டி பந்தை அதற்கு மேலாக “ மூசி மூசி” அடித்துக் கொண்டிருப்பார்கள். சாதாரணமாக கோயில் வீதிகளில், வாசிகசாலை முன்றல்களில் ஒரு சிறிய இடத்திலேயே விளையாடக்கூடியதாக இருந்ததினால் இது கிராமவாசிகளின் ஆதர்ச விளையாட்டாக இருந்தது.
இந்த அபிமானத்தின் காரணமாக எங்கள் பள்ளிக்கூடத்திலும்; ஒரு ‘திறமான’ கரப்பந்தாட்ட அணி உருவாகியிருந்தது. விளையாடியவர்கள் - நோஞ்சான்கள், நெத்தலிப் பயில்வான்கள் இல்லை. ஆறடி தொடும் உயரம். மண்வெட்டி பிடித்து மரத்துப்போன கைகள். தொங்கி எழுந்து வலைக்கு மேலாக ஓங்கி அடித்தால் பந்தின் வீச்சை தடுக்கமுடியாமல் எதிர் அணியினர் நிலத்தில் விழுவார்கள். எங்களில் விசில் அடிக்கத் தெரிந்தவர்கள் விசில் அடிக்க நாங்கள் சிலர் “ காய் கீய்” என்று தொண்டைத்தண்ணீர் வற்றக் கத்தி அட்டகாசம் செய்வோம்.
ஊள்@ர் பாடசாலைகள் எல்லாவற்றையும்; இப்படியாக மண்கவ்வச் செய்தபின் வெளியூர் பாடசாலை ஒன்றோடு பொருதப் புறப்பட்டது எங்கள் பாடசாலை அணி. எங்கள் தலைமை ஆசிரியர் வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் கூட்டும் அசெம்பிளிக்கூட்டத்தில் பெரிய பிரசங்கமே செய்து முடித்தார். ஐரோப்பாவை தன் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்த மகா அலெக்சாந்தர் இந்தியாவை நோக்கி படையெடுத்ததை ஒப்பிட்டார்.
உணர்ச்சி வசப்பட்ட நாங்கள் நால்வர் எங்கள் அணிக்கு ஆதரவாக அந்த ஊருக்கு போவதென்று தீர்மானித்தோம். பள்ளிக்கூடத்திலிருந்து ஒர் தட்டிவானில் வீரர்களுடன், விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரியரும், வேறு சிலரும் புறப்பட்டார்கள். பள்ளிக்கூட வாசலில் நின்று எல்லோருமாக வழியனுப்பி வைத்தார்கள்.
.இதற்காக அன்று கடைசி வகுப்பும் நடைபெறாது என்று அறிவித்ததினால் எங்களுக்க இரட்டிப்புச் சந்தோசம். நாங்கள் போக வேண்டிய ஊரின் து}ரம் ஏழு மைல்களுக்கு மேலிருக்கும். கொஞ்சம் முன்னதாக வெளிக்கிட்டால் விளையாட்டு தொடங்கும் நேரத்துக்குப் போய்ச் சேர்ந்து விடலாம் என்ற எண்ணந்தான்.
சக மாணவர் கூட்டம் கலைந்து போகவும் எங்கள் பயணம் ஆரம்பமானது. எங்கள் குட்டி ரவுண்பக்கமாகப் போனால் ஒழுங்கான றோட்டில் பயணம் சுகமாக இருக்கும் என்று தெரிந்திருந்தாலும், எங்களின் சித்தப்பா, பெரியப்பா வழியில் குறுக்கிட்டு “எங்கையடா போறீங்கள்” என்று கேட்டுத்தொலைத்து, பயணத்தை நிறுத்தச் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில், எங்கள் ஊரின் பின்பக்கமாக தோட்டவெளிகள், வயல்கள் பக்கமாக இருக்கும் ‘கப்பி’ றோட்டால் பயணமானோம்.
தார் போட்ட அடையாளமே இல்லாமல் காற்றும், மழையும் அரித்துக்கொண்டு போய்விட, பெரிய கற்கள் ஆங்காங்கே துருத்திக்கொண்டு நிற்கும் அந்த றோட்டில், சைக்கிள் ஒடுவது மகா சிரமமாக இருந்தது. ஒவ்வொருமுறை கல்லின் மேலாகத் தொங்கி விழும்போதும், அந்த றோட்டுப் போட்ட முகம் தெரியாத ஒப்பந்தகாரரின் மரண ஊர்வலம் எப்N;பா நடந்தாலும் இந்த றோட்டாலேயே நடக்கவேண்டுமென சபித்துக்கொண்டு தொடர்ந்தோம்.
இவ்வளவு சிரமத்தின் மத்தியில் நாங்கள் போக வேண்டிய இடத்திற்குப் போய்ச்சேர்ந்த பொழுது, கரப்பந்தாட்டத்தின் மூன்றாவது செற் நடந்து கொண்டிருந்தது. வழக்கம் போலவே எதிர்; அணியின் வீரர்கள் அடிக்கடி நிலத்தில் குப்புற விழுவதைக் கண்டவுடனேயே எங்கள் உற்சாகம் கரைபுரண்டோடியது. எங்கள் பாடசாலையின் பெயரைச்சொல்லி கோசமிட்டோம்.
சடுதியாக மைதானமே அமைதியானது. எல்லோரும் எங்களைப் பார்த்தார்கள். பார்வை சுமூகமானதாக இருக்கவில்லை. எங்கள் பாடசாலை அணி வீரர்களே “யார் இவர்கள்” என்று ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். நாங்கள் அத்தோடு நிறுத்தியிருக்கலாம். ஆரவாரத்தைத் தொடர்ந்தோம்.
வென்றவர்களுக்கு தோற்றவர்கள் கைலாகு கொடுக்கும் விம்பிள்டன் ரென்னிஸ் நாகரீகம் எல்லாம் பரவாத கிராமம் அது என்று எங்களுக்கு வெகு சீக்கிரத்திலேயே தெரிந்து விட்டது. மரவள்ளிக்கட்டைகளும், குறுணிக்கற்களும் விளையாட்டு இடத்தில்; சரமாரியாக வந்து விழுந்தன.
“அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தும்” பாணியில் எங்கள் வீரர்கள் கல்வீச்சின் மத்தியிலும் விளையாடி மூன்றாவது செற்றையும் வென்று போட்டியில் வெற்றி பெற்றார்கள். இதன்பிறகு நடந்ததுதான் சுவாரஸ்யமானது. முன்னேற்பாடாக தட்டிவான் டிரைவர்; மைதானத்துக்கு அருகிலேயே வாகனத்தை நிறுத்த எங்கள் அணி வீரர்கள் உடுப்புகள் கூட மாற்றாமல் அவசரம் அவசரமாக ஏறி புறப்பட்டுச் சென்றார்கள். போகும்போது எங்கள் பக்கமாக பரிதாபப் பார்வை வீசி விட்டுச் சென்றார்கள். ரோம சாம்ராச்சியத்தின் விளையாட்டு அரங்கிலே பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்க, சிங்கங்களுடன் விடப்பட்ட கைதிகளைப்போல வெலவெலத்து நாங்கள் நின்று கொண்டிருந்தோம்.
கடைசிக்கல்லை புழுதிபறக்க விரையும் தட்டிவான் பக்கமாக எறிந்து விட்டு திரும்பிய ஒரு உள்ளுர் பெருமகன் எங்களைக் கண்டு விட்டார். “இங்கை நிற்கிறாங்கள்” என்று தன் சகபாடிகளை அழைக்கவும்;, நாங்கள் எங்கள் சைக்கிள்களில் பாய்ந்து ஏறினோம். உழக்கிய வேகத்தில் ‘கடகட’வென்று ஒரு சத்தம் கேட்டது. என்னுடைய சைக்கிள் செயின் கழன்று விட்டது. சற்று தடுமாறுவதற்கிடையில் முதுகில் யாரோ மொத்தினார்கள். சைக்கிளையும் உருட்டிக்கொண்டு ஓடித்தான் பார்த்தேன். காலடிகள் அண்மித்துக் கேட்கவும், அதை அப்படியே போட்டு விட்டு முன்னால் சென்று கொண்டிருந்த நண்பனின் சைக்கிள் பாரில் தொற்றிக் கொண்டேன்.
நாங்கள் போய்ச் சேர்வதற்கு முன்னால், இந்தக்கதை எங்கள் வீடுகளுக்கு “செல்லிடப்போன்” இல்லாத அந்தக்காலத்திலேயே போய்ச் சேர்ந்து விட்டது. சொல்லாமல் போனது, சைக்கிள் தொலைத்தது எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து அங்கே வாங்கத்தவறியதை அப்பாவிடம் வாங்கினேன். என் நண்பர்கள் வீடுகள் பக்கமாகவும் ஓலங்கள் கேட்டன.
Recent comments
2 weeks 14 hours ago
2 weeks 2 days ago
5 weeks 20 hours ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
17 weeks 3 hours ago
17 weeks 3 hours ago
17 weeks 1 day ago
17 weeks 5 days ago