17 ஒகஸ்ட் 2007, வெள்ளிக்கிழமை

வணக்கம்!

ஐரோப்பாவில் பருவம் தவறி பெய்யும் கோடை மழையினையிட்டு அலுத்துக் கொண்டிருந்தாலும் அடிக்கடி கோயில் திருவிழாக்களில் உங்களை சந்திக்க முடிவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஒரு பேப்பர் பற்றிய உங்கட புறணியள், பாராட்டுகளை நெற்றிக்கு நேரே நீங்கள் சொல்லிறதும் நல்லதாய்ததான் இருக்குது. இப்படித்தான் அண்டைக்கும் ஒரு தேர்திருவிழாவிலை ஒரு பேப்பரைப்பற்றி காரசாரமாய் விமர்சிக்கத் தொடங்கீட்டு ஆதாரத்துக்கு பழைய ஒரு பேப்பரை கொண்டு வாறன் எண்டு போனவர் திரும்பிவரேல்லை இன்னும் ஒண்டு இரண்டு திருவிழா இருக்குது முடிஞ்சால் அவர் அங்கை வந்து எங்களை சந்திக்கலாம்.

பேப்பரிலை எழுத்துப்பிழையள் அதிகரிச்சுக் கொண்டே போகிறது .. அதுவும் அச்சுக்கு பொறுப்பாயிருந்த ஒரு பேப்பர்காரி கண்டம் கடந்து போனதிலை கட்டுக்கடங்காமல் போயிடுச்சுது. ஜேர்மனியிலையிருந்து அண்ணை ஒருதர் இந்த விசயத்தலை உதவிறது எண்டிருக்கிறார் பார்ப்பம். ஆரும் தமிழ் வாத்திமாரை பிடிச்சு புறுவ் ரீடிங் செய்யுங்கோ எண்டு சிலர் ஒசி அட்வைஸ் தந்திருக்கினம். வாத்திமாரை பிடிக்கிறது எண்டது அவ்வளவு இலேசான விசயமாய் தெரியேல்லை. ஊரிலை இருந்து எங்களுக்கு தமிழ் படிப்பிச்ச சுப்பிரமணிய வாத்தியாரைத்தான் வேக் பெர்மிற்றிலை எடுக்கோணும். அவருக்கு இஞ்சத்தை சீவியம் சரிப்பட்டு வருமோ தெரியாது. எதுக்கும் உங்களுக்கு தெரிஞ்சு ஆரும் தமிழ்மணிகள் இருந்தால் சொல்லுங்கோ.

மின்னஞ்சலிலை உங்கடை ஆக்கங்களை அனுப்பிறதெண்டால் எந்த எழுத்துருவை பாவிக்கிறது எண்டு அடிக்கடி எங்களை வினவிறதாலை சொல்லிறம்.. நீங்கள் எந்த எழுத்துருவையும் பாவிக்கலாம் ஆனால் word அல்லது அதற்கு இணையான format  இல் வெறுமனே பதிஞ்சு அனுப்புங்கோ. நீங்களே வடிவமைப்பு செய்யாதேங்கோ அந்த வேலையை நாங்கள் செய்யிறம். அதுபோல் உங்களது தொடர்பு விபரங்களை அவசியம் அறியத்தாருங்கள். தொடர்பு விபரங்கள் இல்லாமல் வருகிற ஆக்கங்கள் பதிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்பதை பணிவாய் தெரிவித்துக் கொள்கிறம்.

நீங்கள் கஸ்ரப்பட்டு உழைக்கிற காசை எப்பிடி சேமிக்கிறது எங்கை வைப்பிலிடுகிறது போன்ற விசயங்களை இதுகளை தெரிஞ்சு வச்சிருக்கிற ஆக்களை கொண்டு எழுதி ஒரு இணைப்பாக அடுத்த பேப்பரிலை சேர்க்கிறம். உங்களுக்கு உபயோகமாயிருந்தால் தொடர்ந்து இந்த இணைப்பு வரும். எதுக்கும் உங்கட அபிப்பிராயங்களை தெரியப்படுத்துங்கோ.

விட்டால் எல்லாரும் வெள்ளக்காரன் பிள்ளை மாதிரி இங்கிலிசிலை வெளுத்து வாங்கிறியள். ஆனால் இங்கிலிசிலை கட்டுரை எழுதுங்கோ மற்றாக்களும் வாசிப்பினம் எண்டால் ஒருதரையும் காணக் கிடைக்குதில்லை. ஆங்கிலத்திலும் மற்றய ஐரோப்பிய மொழிகளிலையும் உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.

அடுத்த பேப்பருக்கிடையில் மூண்டு கிழமை இடைவெளி வருகிறது. அதுக்கிடையிலை எங்கேனும் வழி தெருவிலை, கோயில் திருவிழாவிலை, சப்வேயிலை/மெற்றோவிலை/ரியுப்பிலை/ஊபானிலை சந்திப்பம். அல்லது அடுத்த பேப்பரிலை சந்திக்கும்வரை விடைபெற்றுக் கொள்கிறோம்.