விடுதலைப் புலிகள் சிறிலங்காப் படைகளுக்கு எதிராக பாரிய தாக்குதலை நடத்தப் போகின்றார்கள் என்கின்ற பரபரப்பான எதிர்பார்ப்பு பல மட்டங்களில் நிலவி வருகின்றது.
"மன்னாரில் விடுதலைப் புலிகள் படையணிகளை குவிக்கின்றார்கள்", "மணலாறு மீது தாக்குதல் நடத்தப் போகிறார்கள்" போன்ற செய்திகளையும் ஆய்வுகளையும் கொழும்பில் இருந்து வரும் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளை தமிழ் ஊடகங்களும் மறுபிரசுரம் செய்ய, அதைப் படித்த தமிழ் மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துப் போய் கிடக்கிறது.
கடந்த சில மாதங்களாக விடுதலைப் புலிகள் பெரும் எடுப்பில் அவசர ஆட்சேர்ப்பு நடத்தி வருகிறார்கள். வீட்டுக்கு ஒருவர் என்ற கணக்கில் இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளின் படையணிகள் கடும் பயிற்சிகளை எடுத்து வருகிறார்கள். வன்னி முழுவதும் ஒரு பரபரப்பான நிலை காணப்படுகிறது. இவைகள் எல்லாம் "பெரிதாக" எதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதைக் கட்டியம் கூறுகிறது.
ஆனால் விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலை நடத்துவார்களாக இருந்தால், அது எங்கே எப்பொழுது நடைபெறும் என்பதே கேள்விக்குறியான விடயமாக இருக்கிறது.
பொதுவாகவே விடுதலைப் புலிகள் ஜுலை மாதத்தில் பெரும் தாக்குதல்களை நடத்துவது வழமை. புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதன் பின்பு ஜுலை மாத தாக்குதல்கள் நடைபெறவில்லை. ஆனால் தற்பொழுது மகிந்தவின் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஈமச் சடங்கு நடத்தி முடித்துவிட்டதால்;, ஜுலை மாதம் முடிவதற்குள் விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில், விடுதலைப் புலிகள் ஓகஸ்ட் மாதத்தில் பெரும் தாக்குதலை நடத்தக் கூடும் என்று சிலர் சொல்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதமே சிறிலங்காப் படைகள் நடத்தின. அப்பொழுது மாவிலாறு, சம்பூர் ஆகிய பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.
அத்துடன் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் விடுதலைப் புலிகள் யாழ் குடா மீது ஒரு தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். அப்பொழுது விடுதலைப் புலிகளின் படையணிகள் யாழ் நகருக்கு மிக அண்மையில் இருந்த மண்டைதீவில் தரையிறங்கியிருந்தன. அத்துடன் முகமாலை முன்னரங்குகளை தகர்த்தபடி ஒரு கிலோமீற்றர் தூரம் முன்னேறியிருந்தன.
விடுதலைப் புலிகளின் இந்த நடவடிக்கை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையாக இருந்தது. யாழ் குடாவை கைப்பற்றும் நோக்கில் விடுதலைப் புலிகள் அந்த நடவடிக்கையை நடத்தியிருக்கவில்லை. அதை ஒரு ஒத்திகை நடவடிக்கை என்றும், சிறிலங்காப் படைகளின் பலத்தினை பரிசோதித்துப் பார்க்கும் ஒரு நடவடிக்கை என்றும் சில ஆய்வாளர்கள் கருத்துக் கூறுவார்கள்.
இந்த நடவடிக்கையின் போது சிறிலங்காப் படைகள் தமது முழுப் பலத்தையும் பிரயோகித்து சண்டை செய்தன. கிளாலி, முகமாலை போன்ற பகுதிகளில் விடுதலைப் புலிகளின் படையணிகள் இழப்புக்களை சந்தித்தன. இரண்டு வாரங்கள் சண்டை செய்த பின்னர் விடுதலைப் புலிகள் தமது மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையை நிறுத்திக் கொண்டனர்.
இவ்வாறு கடந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் பெரும் மோதல்கள் நடந்த மாதமாக அமைந்தது. அந்த வகையில் சிறிலங்காப் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இந்த ஓகஸ்ட் மாதத்தில் விடுதலைப் புலிகள் தமது தாக்குதலை ஆரம்பிப்பார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.
விடுதலைப் புலிகள் எங்கே தமது தாக்குதல்களை நடத்துவார்கள் என்பது குறித்தும் பலவாறான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
பெரும்பாலானவர்கள் யாழ் குடா, மணலாறு, மன்னார் ஆகிய மூன்று இடங்களை சுட்டிக் காட்டுகிறார்கள். இந்த மூன்று இடங்களை நோக்கியும் விடுதலைப் புலிகளின் படையணிகள் குவிக்கப்பட்டுவருவதையும் இதற்கு ஆதாரமாக குறிப்பிடுகிறார்கள்.
மன்னார் பகுதி கடந்த சில மாதங்களாகவே சண்டை நடைபெறும் களமாக திகழ்ந்து வருகிறது. மன்னாரில் விடுதலைப் புலிகளின் படையணிகள் குவிக்கப்பட்டுள்ளன. கனரக ஆயுதங்களும் அப் பகுதி நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன. பால்ராஜ் போன்ற முக்கிய தளபதிகள் மன்னாரில் நிலைகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இவைகளை வைத்து விடுதலைப் புலிகள் மன்னார் மீது பெரும் தாக்குதலுக்கு திட்டமிடுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. மன்னார் கைப்பற்றப்பட்டு விடுதலைப் புலிகளின் படையணிகள் புத்தளம் வரை முன்னேறுவார்களாயின், சிறிலங்காவின் தலைநகரமே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.
ஆனால் யாழ் குடாவை மீட்கும் நோக்கிலேய விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் அமையும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். பூநகரிப் பகுதியிலும், முகமாலை முன்னரங்கப் பகுதிகளிலும் விடுதலைப் புலிகள் தமது நிலைகளை பலப்படுத்தி வருகிறார்கள்.
யாழ் குடாவில் இருந்து வன்னி மீதான சிறிலங்காப் படைகளின் தாக்குதல்களை தடுக்கும் பொருட்டு பூநகரியில் கடந்த சில மாதங்களாகவே ஆயிரக் கணக்கான புலி வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். தற்பொழுது மேலதிக படையணிகளும் அங்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
சிறிலங்காப் படைகளின் முழுப் பலமும் யாழ் குடாவில் குவிக்கப்பட்டுள்ளது. நாற்பதாயிரம் படையினரோடு, அனைத்து விதமான கனரக ஆயுதங்களோடும் யாழ் குடாவில் சிறிலங்காப் படைகள் நிலைகொண்டுள்ளன. யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்கு சதுப்பு நிலங்களாலும், அகண்ட வெளியாலும், கடலாலும் முன்னேற வேண்டிய கடடினமான நிலையும் காணப்படுகிறது.
யாழ் குடாவைக் கைப்பற்றுவதை விட மன்னார், மணலாறு போன்ற பகுதிகளைக் கைப்பற்றுவது என்பது விடுதலைப் புலிகளுக்கு இலகுவானதாக இருக்கும். ஆனால் யாழ் குடாவை விடுதலைப் புலிகள் கைப்பற்றுவார்களானால், விடுதலைப் புலிகள் அசுர பலம் பெறுவார்கள்.
மன்னார், மணலாற்றுப் பகுதிகளை விட பெருந்தொகையான ஆயுதங்களும் ஆளணி வளமும் யாழ் குடாவில் கொட்டிக் கிடக்கின்றன.
மன்னார், மணலாறு போன்ற பகுதிகளை கைப்பற்றினாலும் தக்க வைப்பதற்கு கடுமையாக போராட வேண்டி வரும். சிறிலங்காப் படைகள் தமது முழுப் பலத்தையும் பாவித்து இழந்த பகுதிகளை மீட்க முயலும். ஆனால் புவியியல் ரீதியில் பார்க்கும் போது யாழ் குடாவை கைப்பற்றுவது கடினமானதாக இருந்தாலும், தக்க வைப்பது இலகுவானது.
இவற்றை எல்லாம் விட மணலாறே விடுதலைப் புலிகளின் குறியாக இருக்கின்றது என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மணலாற்றை விடுதலைப் புலிகள் கைப்பற்றுவார்களாக இருந்தால், திருகோணமலையை விடுதலைப் புலிகள் அடைவது சுலபமாகிவிடும். திருகோணமலை விடுதலைப் புலிகளின் கைகளில் வீழுகின்ற பொழுது யாழ் குடாவிற்கான வினியோகம் தடைபட்டு யாழ் குடாவில் உள்ள சிறிலங்காப் படையினரும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குவார்கள்.
அந்த வகையில் மணலாற்றைக் கைப்பற்றி திருகோணமலையை கைப்பற்றுவதன் மூலம், யாழ் குடாவையும் மீட்க முடியும் என்பதால் மணலாற்றையே விடுதலைப் புலிகள் கைப்பற்றுவார்கள் என்று இந்த ஆய்வாளர்கள் வாதிடுகிறார்கள்.
மணலாறில் விடுதலைப் புலிகளின் படையணிகள் குவிக்கப்பட்டு வருவதோடு, திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் விடுதலைப் புலிகளின் சில விசேட படையணிகள் தரையிறங்கி உள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாழ் குடாவோ, மன்னாரோ, மணலாறோ விடுதலைப் புலிகளின் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று சொல்பவாகளோடு, ஒரே நேரத்தில் இந்த மூன்று இலக்கையும் விடுதலைப் புலிகள் தாக்குவார்கள் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
இவ்வாறு விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து பலவாறான ஊகங்களும் கருத்துக்களும் கூறப்படுகின்றன.
ஆனால் இங்கே ஒன்றைச் சொல்லியாக வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு ஜுலை மாதம் என்பதற்காகவோ, ஒகஸ்ட் மாதம் என்பதற்காகவோ உடனடியாக, அவசரமாக ஒரு தாக்குதலை நடத்த வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. ஏற்பாடுகளும் பூர்த்தியாகி சரியான தருணம் வருகின்ற போது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவார்கள். அது நாளையும் நடக்கலாம். மாதங்கள் கழித்தும் நடக்கலாம்.
அத்துடன் இந்த மூன்று முனைகளிலும் சிறிலங்காப் படைகளும் தமது படையணிகளையும், கனரக ஆயுதங்களையும் குவித்து வருகின்றன. வன்னி மீது மும்முனைத் தாக்குதலை சிறிலங்காப் படைகள் தொடுக்கும் என்று சிங்கள சார்பு ஊடகங்கள் எழுதுகின்றன.
விடுதலைப் புலிகள் சிறிலங்காப் படைகள் வன்னி மீதான சண்டையை தொடங்கும் வரை பொறுத்திருந்து, தமது சண்டையை ஆரம்பிக்கவும் கூடும். எதுவாயிருப்பினும் விடுதலைப் புலிகளின் படையணிகள் தமிழ் மண்ணை மீட்கும் நாள் விரைவில் வரவேண்டும் என்பதே உலகெங்கும் வாழும் தமிழர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Recent comments
2 weeks 6 days ago
7 weeks 5 days ago
8 weeks 1 day ago
10 weeks 5 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
22 weeks 5 days ago
22 weeks 5 days ago
23 weeks 22 min ago