எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழவிடுதலைப்போராட்டம் முகிழ்த்துக் கொண்ட நேரத்தில், அரசபயங்கரவாதத்தின் கொடுரங்களால் மக்கள் அல்லல்பட ஆரம்பித்தபோது உள்நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் பற்றிய செய்திகளை சிறிலங்கா அரசு திரித்து வெளியிட்டு வந்தது. அதே சமயம் தங்களை பாதிக்கும் செய்திகளை தணிக்கை செய்து இருட்டடிப்பு செய்து வந்தது. அதுவரை காலமும் செய்திகளை அறிய தமிழர்கள் நாடிவந்த கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கி வந்த செய்தித்தாள்களும், சிறிலங்கா அரச கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை வானொலியும் போதுமானதாக இருக்கவில்லை.
இலங்கை வானொலி;யும் அதற்கு செய்திகளை பொதி செய்து வழங்கி வந்த அரச நிறுவனமான “லங்கா புவத்” செய்திச்சேவையும் புனைவுகள் கலந்த பொய் செய்திகளை ஒலிபரப்பி வந்ததனால் அதன் நம்பகத்தன்மை முற்றாக இழக்கப்பட்டிருந்தது. அக்காலகட்டத்தில் பல்வேறுவழிகளில் செய்திகளை வெளியிட்டு வந்த ஈழப்போராட்ட இயக்கங்களும், தென்னிந்தியாவின் சென்னை வானொலி நிலையமும்கூட மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையே வெளியிட்டு வந்தன. இந்த இடத்தில் லண்டனிலிருந்து சிற்றலை வரிசையில் ஒலிபரப்பினை நடாத்திய பிபிசி தமிழோசை ஒரளவு நம்பகத்தன்மையுடன் செய்திகளைத் தந்தது எனலாம். பிலிப்பைன்சிலிருந்து ஒலிபரப்பாகும் கத்தோலிக்க மதபீடத்தின் வெரித்தாஸ் வானொலியையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். எனினும் அது பிபிசி அளவுக்கு உள்நாட்டில் செய்தியாளர்களைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே அக்கால கட்டத்தில் இரவில் 30 நிமிட நேரம் ஒலிக்கும் பிபிசி தமிழ் செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் செவிமடுக்காமல் நித்திரைக்கு போனவர்கள் தாயகத்தில் அரிதாகவே இருந்தார்கள்;. தொண்ணூறுகளில் பொருளாதாரத்தடை மிக இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டபோது மின்சாரமின்மை, பற்றரிகள் கிடைக்காமை என்பனவற்றுக்கும் மத்தியிலும் பிபிசி செய்திகளை கேட்பதற்காக பல்வேறுவழிகளில் மக்கள் வானொலிகளை இயக்கி வந்ததும் தமிழோசையின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டியது.
தாயகத்தில் உள்ளவர்களைப்பொறுத்தவரை பிபிசி தமிழோசையினை கேட்பது தொடர்ந்து வந்தாலும்¸ அதன் நடுநிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை முன்னரைப்போல இல்லை என்ற கருத்தே நிலவி வருகிறது. அண்மைக் காலத்தில் இவ்வானொலியில் ஏற்பட்டுவந்த மாற்றம், புலத்தில் மற்றய தமிழ்ச் செய்தி ஊடகங்களின் வருகை என்பன அதன் முக்கியத்துவத்தைக் நன்றாகக் குறைத்துவிட்டது. ஐ.பி.சி. வானொலியின் சிற்றலைவரிசை ஒலிபரப்பு தாயக மக்களை சென்றடைவதனால் தாயகத்திலும் தமிழோசை மீதான
எதிர்பார்ப்பு முன்னையளவிற்கு இல்லை.
ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் கருத்துருவாகத்தை ஏற்படுத்துவதில் தமிழோசை பங்காற்ற முடியும் என்பதில் இலங்கை, இந்திய மற்றும் பிரித்தானிய வெளியுறுவு கொள்கை வகுப்பாளர்கள் கொண்ட நம்பிக்கை அதன் செயற்பாட்டில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. மிகவும் பலமாகச் செயற்பட்டுவரும் மற்றய தமிழ் ஊடகங்கள் விடுதலைப்புலிகளுக்கும் தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துருவாக்கத்தைப் பலமாக ஏற்படுத்தி வருகிறது என்பதனை தெரிந்து கொண்டமையினால் அதற்கு எதிராக தங்கள் சார்பான ஊடகங்களை உருவாக்கவேண்டிய தேவை இவர்களுக்கு ஏற்பட்டது. தாயகத்திலும் புலத்திலும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு சில ஊடகங்கள் உருவாக்கபட்டபோதிலும் அவை விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஊடகங்களாக அடையாளங் காணப்பட்டமையினால் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட அவை மக்களால் நிராகரிக்கப்ட்டன.
இவ்விடயத்தில் ஏற்கனவே ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்த பிபிசி தமிழோசை மீது கவனம் செலுத்தப்பட்டது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு இலங்கை நலனையும், இந்திய வெளிவிவகார கொள்கை வகுப்பாளர்களுக்கு அனுசரணை வழங்கி வரும் றோ அமைப்பு இந்திய நலனையும் தமிழ்மக்கள் மத்தியில் பேணுவதற்கு தமிழோசையை உபயோகிக்க முன்வந்தன.
இன்று தமிழோசை வானொலியானது முன்னிலை ஊடகமென்ற நிலையிலிருந்து விலகி விடுதலைப்புலிகளுக்கு எதிரான குழுக்களிதும் தனிநபர்களினதும் குரலை ஒலிக்கும் மாற்று ஊடகமாக மாற்றமடைந்துள்ளது. தாயகத்திலும் புலத்திலும் புலி எதிர்பாளர்களுக்கு தளம் அமைத்துக் கொடுப்பதில் இந்த வானொலி காட்டிவரும் அதீத அக்கறை, அதன் நடுநிலைத்தன்மையை கேள்விக்குறியாக்கி விட்டது. ஏறத்தாள இரண்டு லட்சம் தமிழர்கள் வாழும் பிரித்தானியாவில் புலி எதிர்ப்பாளர்கள் செய்யும் பிரச்சாரங்களுக்கு தமிழோசை வழங்கி வரும் முக்கியத்துவம் மற்றய முன்னணி நிகழ்வுகளுக்கு வழங்கப்படுவதில்லை. உதாரணத்துக்கு கடந்தவருடம் லண்டனில் புலி எதிர்பாளர்களின் வருடாந்த சந்தி;ப்பு நிகழ்;ச்சியான “இலக்கியச் சந்திப்பு”, ஈபிஆர்எல்எப் இயக்கத்தில் முக்கியமானவாராக இருந்த கேதீஸ்வரன் நினைவாக நடாதப்பட்ட சிறு கூட்டம் என்பனவற்றுக்கு தமிழோசை வழங்கிய முக்கியத்துவத்தை குறிப்பிடலாம். அதே சமயம் லண்டனில் தமிழர்கள் பெருமளவில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை இந்த வானொலி முற்றாக இருட்டடிப்புச் செய்தது.
தமிழோசையின் தற்போதைய போக்கிற்கு அதில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் மீது தமிழ் தேசிய ஆதரவாளர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். இவ்விதம் குற்றம்சாட்டுவோர் இப்போது பணிபுரிபவர்களினை முன்பு பணிபுரிந்தவர்களுடன் ஒப்பிட்டு இவர்களது தனிப்பட்ட கருத்துக்களே தமிழோசையையை ஆக்கிரமித்து நிற்பதாகக் கூறுகிறார்கள். முன்பு பணிபுரிந்து பதவி ஓய்வுபெற்ற திரு. சங்கரமூர்த்திக்கும் இப்போதுள்ள திரு. மணிவண்ணனுக்கும், அல்லது முன்னையவரான திரு. ஏ.சி.தாசீசியசுக்கும் தற்போதுள்ள அறிவிப்பாளர்களில் ஒருவரான திரு. சீவகனுக்கும் உள்ள வித்தியாசம் அவர்களுடைய அரசியல் பின்னணி என்பவற்றிலிருந்து விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அவர்கள் சுயாதீனமாக இயங்க பிபிசி இடமளிக்கிறதா என்பதனை கவனத்தில் எடுக்கவேண்டும். இதனடிப்படையில் அண்மையில் தமிழ் ஊடகமொன்று தமிழோசையில் பணியாற்றிய திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசத்தை “ ஒரு காலகட்டத்தில் தமிழ் நாட்டிலிருந்து வந்து பிபிசியில் பணிக்கு சேர்ந்த சில பார்ப்பன ஊடகவியலாளர்களால் உங்களுக்கு சிக்கல்கள் நேர்ந்ததாக இங்கு செய்தி வந்தது அது உண்மையா?” என வினவியது. “இதற்கு பதில் உங்களுக்கே தெரியும் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.” என அவர் பதிலளித்திருக்கிறார்.
புகழ்பெற்ற ஊடகநிறுவனமான பிபிசியின் ஒருபிரிவு வெறுமனே தனிநபர்களின் செல்வாக்கில் அவர்கள் மனம்போனபடி இயங்க அனுமதிக்கப்படுகிறது என்பது ஏற்புடையதாக இல்லை. மாறாக பிரித்தானிய வெளிவிவகார கொள்கை வகுப்பாளர்கள் பிபிசி மூலம் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் எவ்விதமான கருத்துருவாக்கத்தை உருவாக்க முனைகிறார்கள் என்பதையே தமிழோசையின் செயற்பாடு வெளிக்காட்டி நிற்கிறது. இதில் தங்களது நலன்களை கவனிக்கக்கூடியவர்கள் உட்செல்வதில் இந்திய, சிறிலங்கா அரசுகள் பங்குபற்றியிருக்கலாம்.
இதற்கு ஆதாரமாக பிபிசியின் சிங்கள மொழிச் சேவையான “சந்தேசிய” வானொலியை எடுத்துக்கொள்ளலாம். அது தமிழோசையைப்போல் சிறிலங்கா அரசுக்கான ஆதரவுநிலையை கொண்டிருக்கவில்லை. இச்சேவையானது சிங்கள இனவாதிகளின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளது. அங்கு பிபிசிக்கான தேவை வேறுவிதமாக உள்ளது.
இங்கு ஆட்டுவிப்பது யார் எனத்தெரிவதனால் தமிழோசை யாரது குரல் என ஊகித்து கொள்வதில் சிரமம் இருக்காது.
Recent comments
2 weeks 14 hours ago
2 weeks 2 days ago
5 weeks 19 hours ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
17 weeks 2 hours ago
17 weeks 3 hours ago
17 weeks 1 day ago
17 weeks 5 days ago