மட்டக்களப்பு மாந்திரீகத்தைப் பற்றி எழுதும்போது பலவிடயங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. அதுபற்றிய மேலும் சில சுவராசியமான செய்திகளை விட்டு விட்டு இத்தொடரை வேறு ரிசைக்குக் கொண்டு செல்ல மனம் இடம் தரவில்லை. அதனால் தொடர்கிறேன். இவை அனைத்தும் நான் நேரில் கண்டு கேட்டு அறிந்துகொண்ட விடயங்கள்.
குறளி, குறளிவித்தை என்றெல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். குறளி என்றொரு பிசாசு இருப்பதாகவும் அதனுடன் நட்புக்கொள்வதன்மூலம் பலவித்தைகளை நாம் அறிந்து கொள்ளலாமென்றும். அக்காலத்தில் பலர் கூறக் கேடடிருக்கிறேன். குறளியை வாலாயமாக்கிக் கொள்பவர்கள் அதனைவைத்து தங்களுக்கு விரோதமானவர்களை ஆட்டுவித்துப் பழிவாங்கலாமென்றும் கூறுவார்கள். இத்தகைய விடயமொன்று எனக்கு மிகச்சிறிய வயதாயிருந்தபோது என் கண்முன்னாலேயே எங்கள் ஊரில் நடந்தது. ஆனால் உண்மையில் அது குறளியை வைத்துச் செய்யப்பட்ட பழிவாங்கல்தானா, வேறேதாவது மருந்து மாயங்களால் நடாத்தப்பட்ட விளையாட்டா அல்லது மறைந்த பிரபல பகுத்தறிவுவாதி ஆபிரகாம் கோவூரின் விஞ்ஞான விளக்கங்களுக்கு உட்பட்ட விடயங்களா என்பதை அந்தச் சிறு வயதில் என்னால் ஊகிக்க முடியவில்லை. சமீபத்தில் ஊருக்கு ரெலிபோனெடுத்து அதுதொடர்பாக அறிந்திருந்தவர்களுடன் கதைத்தபோது அவர்களுக்கும் அது குறளிதானா இல்லையா என்பதில் தெளிவில்லாமலிருக்கிறது.
நடந்தது இதுதான். அந்த வீட்டில் இருந்த இரு திருமணமாகாத இளம் பெண்களுக்;குக் குறளி பிடித்துவிட்டது. யாரோ கோபக்காரர்கள் செய்வினை சு10னியம் வைத்துக் குறளியை ஏவிவிட்டார்கள். இரவில் திடீரென்று வீட்டின்மேல் கற்கள் வந்து விழும். பூஜை அறையிலிருந்த திருநீறு சிந்தப்பட்டுக் கிடக்கும். வெளியேயிருந்த பூமரத்தின் தளைகள் கன்னிகள், பூக்களெல்லாம் பிய்த்தெறியப்பட்டிருக்கும். காகிதத்தில் எழுதப்பட்ட சில குறிப்புகளும் வந்து விழும், அந்தப் பிள்ளைகளின் ஆடைகள் குறளியால் இரவில் பிராண்டப்பட்டுக் கிழிந்து போய்விடும். காலையில் இதனை அவதானித்த பெற்றோர் என்ன ஏதென்று அறியாமல் திகைத்துப் போவார்கள். நாளாக நாளாகப் பிள்ளைகளின் நடவடிக்கைகள் அசாதாரணமாக மாறத் தொடங்கிவிட்டன. திடீரென்று பிரமை பிடித்ததுபோல் உட்கார்ந்து விடுவது, கைகால்களெல்லாம் விறைத்துப்போனமாதிரி விழுந்துவிடுவது, சும்மா இருந்தமாதிரிக் கூச்சலிடுவது, தங்களுக்கு முன்னே ஓர் பயங்கர உருவம் வந்து மிரட்டுகிறது என்று பயந்து அலறுவது என்று குறளியினால் அந்தப் பெண்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகத் தொடங்கி விட்டனர். குறிப்பாக கிட்டத்தட்டப் பதினாறு வயது மதிக்கத்தக்க இளம் பிள்ளையையே அந்தக் குறளி பெரிதும் தாக்கியது.
இளம்பெண்களுக்கு அவர்கள் பருவமடையும் காலத்தில் சுரக்கும் பாலியில் ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மையினால் ஏற்படும் ஒருவகை மனவிகாரத்தினால் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படலாமென்றும் அதனைப் பொதுவாக ஹிஸ்டீரியா நோய் என்று கூறுவார்களென்றும் பிற்காலத்தில் அறிந்துகொண்டேன்.
அந்தப் பெண்களின் பெற்றார்களுக்கோ இவ்விடயம் தெரிந்திருக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர்களின்; விசித்திரமான நடவடிக்கைகளுக்கப்பால் வெளியிலிருந்து வீட்டுக் கூரையின்மேல் கற்கள் மண் போன்றன விழுந்ததும், நான் முன்பு சொன்னவைகளும்தான். உண்மையில் அந்தப் பெண்கள் வெளியே செல்லும் போதோ அல்லது வீட்டில் தனியே இருக்கும் போதோ யாரும் சரியாக அவர்களின்; நடத்தைகளை அவதானித்தார்களா என்று தெரியவில்லை. சரிவர எதையும் அவதானிக்காமல் பிரச்சனையின் மூலகாரணம் என்ன என்ற தெளிவில்லாமல் யாரோ தங்கள் வீட்டின்மேல் குறிப்பாக அந்தப் பெண்களின்மேல் குறளியை ஏவிவிட்டார்கள் என்ற முடிவுக்கு பெற்றோர் வந்துவிட்டார்கள். முடிவு! அந்த வீட்டில் ஒரே குறளிக் கூத்தாகிவிட்டது.
ஊரிலும் வெளியூர்களிருமிருந்த மந்திரவாதிகளும், குறிபார்ப்பவர்களும், ஏன்? அந்தக் காலத்து அரசியல் வாதிகளும்: குறிப்பாக தமிழரசுக்கடசியின் பல முக்கிய புhராளுமன்ற உறுப்பினர்களும் கூட வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். வந்த பலரும் இது குறளியின் வேலைதான் என்று நிச்சயப்படுத்திவிட்டுப்; போனார்கள். எனது தந்தையார் ஒரு தடவைபோய்ப் பார்த்துவிட்டு வந்து அம்மாவிடம் ரகசியமாக ~அந்தப் பிள்ளைக்குப் பயித்தியம் போல கிடக்குது| என்று சொன்னார். பிள்ளையின் குழறலையும் கூச்சலையும் பார்த்துவிட்டு பிள்ளைக்குப் பிடித்திருப்பது குறளியல்ல குழறிப்பேயென்று ஜோக் வேறுவிட்டார். ஆனால் அம்மா அதைக் காதில்போட்டுக்கொள்ளவில்லை. அவவுக்கு அது குறளிதானென்ற அலாதி நம்பிக்கை. அப்பாவுக்கோ ஹிஸ்டீரியாவைப் பற்றியெல்லாம் எதுவும் விபரமாகத் தெரியாது. ஆனால் அந்தப் பதினாறு வயதுப் பெண்ணுக்;குப் பிடித்திருந்தது குறளியல்ல பைத்தியம்தான் என்பதை ஊகித்துவிட்டார். ஆனால் அதை வெளியே கூறினால் யாரும் தப்பாக எடுத்துக் கொள்வார்களென்று வீட்டில் அம்மாவிடம் தவிர வேறுயாரிடமும் கூறவில்லை.
அந்த வீட்டிலோ ஒரே அல்லோல கல்லோலம். கடைசியில் பிரபல வைத்தியரும் மாந்திரீகருமான பரமக்குட்டிப் (பெயரைச் சற்று மாற்றியிருக்கிறேன்) பரிசாரியை அழைத்தார்கள். அவரோ இதுதான் காசுகறக்கத் தனக்குச் சரியான சந்தர்ப்பமென்று தீர்மானித்து அஞ்சனம் பார்க்கத் தொடங்கினார்.
அஞ்சனமென்பது பலவித மூலிகைகளையும் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கப்படும் ஒரு மை. அந்த மையில் முதலையின் கண்களையும் சேர்ப்பார்களாம். முதலை நீரடியில் நீந்தி;த்திரிவதால் இருளில் நீரை ஊடுருவி நிலத்தைப்பார்ப்பதற்காக அதன் வயிற்றுப்புறத் தாடையில் மேலதிகமாக இரண்டு கண்கள் இருக்குமாம். அந்தக்கண்களையே அஞ்சன மை அரைக்க எடுப்பார்களாம். அஞ்சனமையை அரைக்கும்போது அரைக்கும் அம்மிக்கடியில் ஒரு நாணயத்தை வைத்து அரைப்பார்களாம். மை சரியான பதத்தில் அரைபட்டு விட்டதென்றால் அம்மிக்கடியில் வைத்த நாணயம் தெளிவாகத் தெரியுமாம். என்று கூறிக்கொண்டார்கள். நானும் அவற்றையெல்லாம் பெரியவர்கள் பேசும்போது அவர்களின் வாயைப் பார்த்துக் கேட்டுக்கொண்டேன்.
அஞ்சன மையின் ஒரு துளியை வெற்றிலையொன்றில் விட்டு அதனைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். கண்களை இமைக்கக்கூடாது. இமைத்தால் காட்சி மறைந்துவிடும். பொதுவாக எழுத வாசிக்கத்தெரிந்த பனிரெண்டு தொடக்கம் பதினாறு வயதுக்குட்பட்ட ஒரு பிள்ளையைக் கொண்டே அஞ்சனம் பார்ப்பார்கள். அஞ்சனத்தில் முதலில் வருவது பிள்ளையாரின் திருவுருவம். அதன்பின்னர் தெய்வங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து அபயகஸ்தம் செய்து போவார்கள். தெய்வங்களின் ஆசீர்வாதம் முடிந்ததும் இறுதியில் அனுமார் வருவார் அவரே கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பார். அஞ்சனமையில் தோன்றி பக்தர்களின் கேள்விகளுக்குப் பதில்கூறி அவர்களின் சந்தேகங்களைப் போக்குவதால் அனுமாருக்கு ஆஞ்சநேயர் என்ற மற்றொரு பெயருமுண்டு.
மேற்கு நாடுகளிலும் குறிப்பாக பாரம்பரிய (ஓதொடொகஸ்) கிறிஸ்தவர்களிடம் ~பிளாஞ்செட் றீடிங்| என்கின்ற, வழுக்குப் பலகையில் கைவிரலை வைத்து ஆவியுலகுடன் தொடர்பு கொண்டு விடயங்களை அறியும் ஒரு வகைக் குறிபார்த்தல் முறை காணப்படுகின்றது. இதுவும் ஒருவகை அஞ்சனம் பார்க்கும் முறையே
தொடருவம்.
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago