சென்ற முறை மட்டக்களப்பு மாந்திரீகத்தைப் பற்றி எழுதினேன் அது பற்றிய விபரங்களைத் தொடர்கிறேன். எங்கள் ஊரில் கந்தசாமியென்று ஒரு பூசாரி இருந்தார். அவர் கடும் மந்திரவாதியென்று எல்லோருக்கும் தெரியும். உடலெங்கும் மூன்று கோடிட்ட திரிபுண்டரம் எனப்படும் திருநீற்றுப் பூச்சோடு வேட்டியும், மேலாடையில்லாமல் ஒரு துண்டும் போட்டுக்கொண்டு திரிவார். மிகவும் சாந்தமானவர். எப்போதும் சிரித்த முகத்தோடுதான் இருப்பார். அவர் ஓரு சேட்டையோ அல்லது பெனியனையோ போட்டு நான் பார்த்ததில்லை. பளிச்சென்ற வெள்ளை உடம்பு. கோயில் ஐயர்மார் போலத்தான் இருப்பார். மரக்கறிதான் சாப்பிடுவாராம் என்று சொல்வார்கள்
எங்கள் வீட்டிற்கும் பலதடவைகள் வந்திருக்கிறார். கோயில் விடயங்கள் பற்றி அம்மாவுடன் கதைப்பார். அப்பாவுக்கும் ஊர்க் கோயிலுக்கும் சம்பந்தமில்லை - அது எங்கள் தாய்வழிக் குடிக்கோயில். கோயிலுக்கான செலவுகளைமட்டும் குடும்பத்தலைவர்களின் உழைப்பிலிருந்து அவர்களின் மனைவிமார் மூலமாகப் பெற்றுக்கொள்வார்கள்.
கந்தசாமி மாமாவைக் கண்டால் அவரைச்சுற்றிக் குழந்தைகள் கூடுவார்கள். மந்திரம் செய்து காட்டுங்கள் என்று கேட்பார்கள். அவர் சிரித்துக்கொண்டு போய்விடுவார். ஒரு நாள் மட்டும் திடீரென்று கீழேகுனிந்து மண்ணையள்ளி இந்தா பூசு என்று தந்தார். அது திருநீறாக இருந்தது. இதில் எந்த அளவு மந்திரம் எந்த அளவு தந்திரம் என்று எனக்குத் தெரியவில்லை. அந்தச் சிறுவயதில் பெரிய பிரமிப்பாக இருந்தது. அப்பாவிடம் இதுபற்றிச் சொன்னபோது அவர் சிரித்துக்கொண்டு போய்விட்டார். அவருக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. ஆனால் அம்மாவோ அவர் செய்தது மந்திரவேலைதான் என்று சொன்னா. அதன்பிறகு அவரைப்பிடித்து அவர்செய்யும் மாஜிக் வேலைகளை நானும் பழகிவிடலாமென்று அவரைக் காணும் போதேல்லாம் எனக்கும் மந்திரம் சொல்லித்தாருங்கள் என்று கேட்பேன். ஆனால் அவரோ நீ சின்னப்பிள்ளை உனக்கு எதற்கு இதெல்லாம் என்று தட்டிக்கழித்துக்கொண்டே வந்தார்.
ஒரு தடவை மறுக்க முடியாமல், மந்திரத்தை; படித்தால் மட்டும்போதாது அதனை சொற்பிழையில்லாமல் உச்சரித்து உருப்போடவேண்டும், பிழையாக உச்சரித்தால் பலிக்காது சிலவேளை சொல்பவருக்கே ஆபத்தாக முடியும், உன்னால் அப்படியெல்லாம் முடியுமா என்று என்னை எச்சரித்தார். நானும் என்னால் முடியும் என்று அடம்பிடித்துச் சில மந்திரங்களை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
காட்டில் போகும்போது கரடி கடிக்கவந்தால், யானை குறுக்கிட்டால் அல்லது வேறு மிருகங்களை எப்படி உறுக்கி அதட்டுவது, நம்மிடம் வழிப்பறி செய்யவருபவரை எப்படி மந்திரத்தால் செயலிழக்க வைப்பது என்றெல்லாம் பலவற்றைச் சொல்லித்தந்த ஞாபகம். ஒன்றையும் வாழ்க்கையில் பாவித்துப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் ஒரேயொரு மந்திரத்தை மட்டும் ஒருதடவை பாவிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.
மந்திரவாதி கந்தசாமி மாமாவின் வீட்டில் ஒரு வடிவான சிவலைப் பெட்டை. அதற்கு என்னைக்கண்டால் ஒரு சாதிச் செருமலும் கனைப்பும். நான் அவர் வீட்டுக்குப் போகும்போதெல்லாம். கடைக்கண்ணால் அதைப்பார்க்கத் தவறுவதில்லை. ஆளெங்கே நிற்கிறது, வீட்டிலா அல்லது வெளியே எங்காவது போய்விட்டதா என்று நோட்டம் விட்டபடிதான் போவது வழக்கம். அன்றும் அப்படித்தான் போனேன். ஏந்த மூலையில் ஒளிந்து கொண்டு நின்றதோ தெரியாது. நான் பதுங்கியதைக் கண்டுவிட்டது. அதற்கு அது பிடிக்கவில்லை. ஓடி வந்தது. மாமா ஏற்கனவே வசிய மந்திரம் சொல்லித் தந்திருந்தார். ஆனால் அந்த நேரத்தில் அது வாய்க்கு வரவில்லை. எனக்குக் கையோ ஓடவில்லை. கால் மட்டும்தான் ஓடியது தெரியும். குதிகால் பிடரியிலடிபடப்; பறந்தேன். போதுமடா சாமி மந்திரம் படித்ததென்று. பெட்டை கலைத்து வந்து பிடித்து விட்டது.
பிடித்தது சாறனைத்தான். நல்லகாலம் உள்ளே லங்கோட் போட்டிருந்தேன். ஊரில் சஸ்பெண்டரை லங்கோட் என்று தான் சொல்வது வழக்கம். பெட்டை இழுத்த இழுவையில் சாறன் இடுப்பிலிருந்து கழன்று விட்டது. அதற்குள்….(அவ்வேளையில்) கந்தசாமிமாமா எங்களைத் துரத்திக்கொண்டு வந்துவிட்டார். போடி அங்கால என்று பெட்டைக்கு ஒரு உதைவிட்டார். அவருடைய கட்டளையை ஏற்றாலும் என்னைப் பார்த்து ஆவேசத்தோடு நின்றது. எனக்கு மாமா வந்துவிட்டார் என்றதும் தைரியம் வந்தது. மந்திரமும் ஞாபகத்துக்கு வந்தது.
ஓம்! அலறிய வாயா! முறுகிய பல்லா!
ஆதி நரசிங்கத்தின் மீதாணை
அலகு திறவாதே சீ! தூ!
என்று ஓதி உறுக்கினேன். ஆனால் நான் சொன்ன மந்திரம் ஆண் நாய்க்குத்தான் வேலை செய்யுமாம். என்னைக் கலைத்துக் கடித்ததோ பெட்டை. அதோடு நான் கந்தசாமி மாமா வீட்டுப்பக்கம் தலை வைத்துப் படுக்கவேயில்லை. ஏதோ அவரிடம் படித்த ஒரு சில மந்திரங்களுடன் காலத்தையோட்டினேன். பிறகு கொழும்புக்கு ஒரு தடவை வந்தபோது ~மகேந்திரநாத் மாயாஜால வித்தைகள்| என்றவொரு புத்தகத்தை அனியாயக் காசு கொடுத்து வாங்கி அதிலுள்ள ஜாலவித்தைகளைச் செய்யும் முறைகளைப் படித்தபோது அது வெறும் பேய்க்காட்டல் என்று விளங்கியது. மந்திர தந்திரங்களைப் பழகவேண்டுமென்ற ஆசை அதன்பிறகு போயே போய்விட்டது.
எனது தந்தையார் இந்த மந்திரங்களில் அடியோடு நம்பிக்கையில்லாதவர். ஒரு தடவை அவருடைய துணிவை நான் கண்டேன்.
அப்போது நாங்கள் ஒரு வீடுகட்ட அத்திவாரம் போட்டு சுவர்களையும் எழுப்பியிருந்தோம். ஆனால் சிலருக்கு ஏனோ அது தொடர்பாக எங்கள்மீது கோபம். ஒரு நாள் நான் என்தந்தையாருடன் நாங்கள் கட்டிக்கொண்டிருந்த வீட்டுப்பக்கம் போனபோது கட்டடத்தினுள் யாரோ செய்வினை சூனியம் செய்து வைத்திருந்தார்கள். ஒரு இளநீர்க் காயைச் சீவி திருநீறு பூசி, ஒருசீப்பு வாழைப்பழத்தையும் சில வெற்றிலைகளையும் பாக்கையும் ஓர் வாழையிலையில் வைத்திருந்தார்கள். எனது தந்தையார் அவற்றைப் பார்த்துவிட்டுச் சிரித்தார். வாழைப் பழங்களை எடுத்து நன்றாக ஏதாவது நச்சு ஊசி குத்தியிருக்கிறதா என்று பார்த்துவிட்டு அவற்றைத் தானும் தின்று எனக்கும் தந்தார். இளநீர்க்காயை, கொண்டுவந்த கத்தியால் வெட்டி நீரை ஊற்றிவிட்டு தேங்காயைத் தோண்டி எடுத்துத் தின்றோம். ~நான்தான் தலைமைப் பிசாசடா எனக்கு யாரடா சூனியம் வைக்கிறவன்| என்று அப்பா சற்றுச் சத்தம்போட்டு அயலவர் கேட்கச் சொன்னதாக ஞாபகம். எங்களை அந்தச் செய்வினை எதுவும் செய்யவில்லை. அப்பா எண்பத்தாறு வயது வரை வாழ்ந்து மறைந்தார். நான் இன்னும் சாகவில்லை.
தொடருவம்
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago