ஆப்பிழுத்த நிலையில் அரசாங்கம் ..

by:
வி. சபேசன்

கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் மிகுதியாக இருந்த பகுதியாகிய குடும்பிமலையையும் (தொப்பிக்கல) சிறிலங்காப் படையினர் கைப்பற்றி விட்டனர்


ஏறக்குறைய மூன்று மாதங்கள் செய்த சண்டைகளி;ன் மூலம் குடும்பிமலையின் மையப்பகுதியை சிறிலங்காப் படையினர் கடந்த 11.07.07 அன்று அடைந்தனர்.


சிறிலங்காப் படைகள் முன்னேற்றிய போது விடுதலைப் புலிகளின் தரப்பில் இருந்து எவ்வித எதிர்ப்பும் வரவில்லை. விடுதலைப் புலிகள் தேவையற்ற இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு வேறு பகுதிகளை நோக்கி நகர்ந்து விட்டனர்.


குடும்பிமலையில் நிலைகொண்டிருந்ததாக கருதப்பட்ட பல நூற்றுக் கணக்கான போராளிகளும் தளபதிகளும் சிறிலங்காப் படைகளின் முற்றுகையை உடைத்துக் கொண்டு, பெரும்பாலான ஆயுத தளபாடங்களோடு வேறு பகுதிக்கு நகர்ந்து சென்ற விட்டார்கள்.


  விடுதலைப் புலிகளின் படையணிகள் தற்பொழுது குடும்பிமலையின் மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ளதாக ஒரு கருத்தும், அவர்கள் அனைவரும் வன்னிக்குச் சென்று விட்டார்கள் என்று ஒரு கருத்தும் கூறப்படுகிறது.


மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் குடும்பிமலைப் பகுதி உட்பட ஏறக்குறைய 60 கிலோமீற்றர் வரை நீளமான பெரும் காட்டுப் பகுதி உள்ளது. தற்பொழுது சிறிலங்காப் படையினர் நிலைகொண்டுள்ள குடும்பிமலைப் பகுதியில் இருந்து சில நூறு மீற்றர்கள் தூரத்தில் விடுதலைப் புலிகள் நின்றாலும், அதை அறிய முடியாத அளவிற்கு அடர்ந்த காடுகளையும், சிறு குன்றுகளையும், நீரோடைகளையும் கொண்ட பகுதியாக அப் பகுதி திகழ்கிறது.


  வடக்கில் தொடங்கவிருக்கும் பாரிய படை நடவடிக்கையின் பொருட்டு ஜெயம், ரமேஸ் போன்ற முக்கிய தளபதிகள் வன்னி சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. அதே வேளை கிழக்கில் சில நூறு விடுதலைப் புலிகள் சிறு சிறு படையணிகளாக தொடர்ந்தும் இயங்கி வருகின்றார்கள்.


விடுதலைப் புலிகளின் படையணிகள் பாரிய இழப்புக்கள் எதையும் சந்திக்காத நிலையில் சிறிலங்காப் படைகள் குடும்பிமலையை அடைந்துள்ள நிகழ்வு கிழக்கு நிலவரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியது அல்ல.


  விடுதலைப் புலிகள் கிழக்கின் எப்பகுதியையும் போர் செய்து கைப்பற்றவில்லை. கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அடிக்கடி சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. அதே பகுதிகள் பெரும் தாக்குதல் நடவடிக்கைகளை செய்யாமலேயே மீண்டும் விடுதலைப் புலிகளின் கைகளில் வந்திருக்கின்றன.


  புலிகள் கிழக்கில் இரத்தம் சிந்தாது கைப்பற்றிய பகுதிகளை சிறிலங்காப் படைகள் ஒரு வருடம் யுத்தம் செய்து பெரும் இழப்புக்களையும் கொடுத்து கைப்பற்றியிருக்கிறது. ஆனால் இம்முறையும் இதே பகுதிகளை விடுதலைப் புலிகள் மீண்டும் கிழக்கில் யுத்தம் செய்யாமலேயே கைப்பற்றும் சாத்தியங்கள் நிறைய உண்டு.


சிறிலங்காப் படைகள் கிழக்கைக் கைப்பற்றியதானது சில விடுதலைப் புலிகளுக்கு சில பின்னடைவுகளையும் கொடுத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது போன்று கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிறிலங்காப் படைகளிடம் அகப்பட்டுவிட்டார்கள்.


  இது ஆளணிகளை பெறுகின்ற விடயத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனித அவலமும் குறிப்பிடத்தக்கது.


  இவைகள் சிறிலங்கா அரசை பொறுத்தவரை ஒரு வெற்றியாகும்.


  ஆனால் மக்கள் வாழாத காட்டுப்பகுதியான குடும்பிமலையை கைப்பற்றி அங்கு சிறப்புப் பயிற்சி பெற்ற படையினரை நிறுத்துவது என்பது சிறிலங்கா படைகளுக்கு சாதகங்களை விட பாதகங்களையே ஏற்படுத்தும். சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் "குடும்பிமலையைப் பிடித்து மரம் வெட்டி விற்கலாமே தவிர, வேறு எந்த நலனும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.


ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குடும்பிமலையை சிறிலங்காப் படையினர் சென்றடைந்த நிகழ்வை பெரும் வெற்றியாக சித்தரித்து, அதற்கு 19.07.07 அன்று சிங்கள தேசம் முழுவதும் வெற்றி விழாக்களை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார். இதன் மூலம் விடுதலைப் புலிகளின் மிக முக்கிய ஒரு பலமான தளத்தை கைப்பற்றி விட்டதாக ஒரு மாயை உருவாக்க முடியும் என்றும் மகிந்த நம்புகின்றார்.


ஆனால் மக்கள் எவரும் வாழாத காட்டுப் பகுதியான குடும்பிமலைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் தொடர்ந்தும் நிற்காது, வெற்றிவிழா முடிந்த ஓரிரு மாதங்களின் பின்னர் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விடுவார்கள் என்றே நம்பப்படுகின்றது. அப்படி வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் வடக்கில் தென்படுகின்றன.


  கிழக்கை சிறிலங்காப் படைகள் கைப்பற்றி தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்பப்பட்ட ஒட்டுக்குழுக்களும் தங்களுக்குள் மோதுகின்ற நிகழ்வும் கிழக்கில் தொடர்ந்து நடைபெறுகின்றது.


  கடந்த சில வாரங்களாக கிழக்கில் கருணா அணி, பிள்ளையான் அணி, ஈபிடிபி, புளொட் போன்ற ஒட்டுக்குழுக்களுக்கு இடையில் பல முனை மோதல்கள் நடந்து வந்தன. தற்பொழுது நிலைமை சிறிது அமைதியாக காணப்பாடுவது போல் தென்பட்டாலும், மீண்டும் எந்நேரமும் மோதல்கள் வெடிக்கலாம் என்ற நிலையே காணப்படுகின்றது.


சில வாரங்களுக்கு முன்னர் கருணா குழுவிற்குள் பிளவு ஏற்பட்டு கருணா அணியும் பிள்ளையான் அணியும் மோதிக் கொண்டன. இந்த மோதல்கள் சற்று தணிந்த நிலையில் கருணா அணியோடு மற்றைய ஒட்டுக்குழுக்களாகிய ஈபிடிபி, புளொட், பத்மநாபா குழு ஆகிய ஒட்டுக்குழுக்கள் மோதலில் ஈடுபட்டன.


கருணா அணிக்கும் பிள்ளையான் அணிக்கும் இடையிலான பிரச்சனை தீhக்கப்பட்டுவிட்டதாக கருணா அணி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் பிள்ளையான் அணி தொடர்ந்தும் கருணாவுக்கு எதிராக தனித்தே இயங்கி வருகின்றது. அத்துடன் தாமே உண்மையான "ரிஎம்விபி" என்றும் சொல்லி வருகிறது.


கிழக்கில் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்தையும் தன்னுடைய ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வந்துள்ளதோடு குடும்பிமலையையும் கைப்பற்றிவிட்ட சிறிலங்கா அரசு கிழக்கில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு முயன்று வருகின்றது.


  அப்படி உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறுமாயின் கருணா அணியின் கொலைப் பயமுறுத்தல்கள் காரணமாக விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற "தமிழ் தேசியக் கூட்டமைப்பு" போட்டியிட முடியாத நிலை உள்ளது. இந்த நிலையை சாதகமாக்கிக் கொண்டு கள்ள வாக்குகள் மூலம் உள்ளுராட்சித் தேர்தலில் வென்றுவிடலாம் என்று கருணா அணி நம்புகின்றது.


அதே வேளை இந்தத் தேர்தலில் ஈபிடிபி போன்ற ஒட்டுக்குழுக்களும் போட்டியிட தயாராகி வருகின்றன. சில மாதங்களாக கிழக்கில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே செயற்பட்டு வந்த ஈபிடிபி தற்பொழுது வேகமாக செயற்படத் தொடங்கி உள்ளது. தமிழ் மக்களுக்கு செய்து வரும் துரோகத்திற்கு கூலியாக சிறிலங்கா அரசிடம் பெற்றுள்ள அமைச்சுப் பதவி ஈபிடிபிக்கு சாதகமாக உள்ளது.


சில நாட்களுக்கு முன்னர் ஈபிடிபி வாகரைப் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கியது. அத்துடன் கிழக்குச் செயற்பாடுகள் குறித்து ஈபிடிபியின் தலைவர் தன்னுடைய சகாக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.


இந்த நேரத்தில் புளொட் இயக்கமும் கிழக்கில் செயற்பாடுகளை அதிகரிப்பதற்கு மேலும் சிலரை கிழக்கிற்கு அனுப்பியது. அத்துடன் பத்மநாபா குழுவும் கிழக்கிற்கு சென்றது.


இதனால் கடும் எரிச்சலடைந்து கருணா அணி தன்னுடைய "சகோதர ஒட்டுக்குழுக்களுக்கு" எதிராக தாக்குதல்களை நடத்தியது. சில இடங்களில் ஈபிடிபிக்கும் கருணா அணியினருக்கும் இடையில் சிறு சிறு மோதல்கள் நடந்தன.


இந்த மோதல்கள் செங்கலடியில் பெரிதாக வெடித்தது. கடந்த 04.07.07 அன்று செங்கலடியில் ஈபிடிபியின் முகாமை கருணா அணியினர் சுற்றி வளைத்து தாக்குதல் தொடுத்தனர். ஈபிடிபியினரும் திருப்பித் தாக்கினர். இந்தச் சண்டையில் கருணா அணியினர் இருவர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். கடைசியில் கருணா அணியினர் தாம் வந்த வாகனத்தையும் விட்டு விட்டு ஓடினர்.


இதையடுத்து "உதயசூரியன் படையணி" என்ற பெயரில் கருணா அணியினர் ஈபிடிபிக்கு எதிராக துண்டுப் பிரசுரம் வினியோகித்தனர். கிழக்கில் ஈபிடிபியினர் செயற்படக்கூடாது என்றும், அப்படிச் செயற்படுபவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் அந்த துண்டுப்பிரசுரத்தில் மிரட்டப்பட்டிருந்தது.


இதே வேளை கொக்கட்டிச் சோலையில் வைத்து சில புளொட் உறுப்பினர்கள் கருணா அணியினரால் தாக்கப்பட்டனர். பத்மநாபா குழுவினர் மீதான தாக்குதல்களும் இடம்பெற்றன.


இப்படி கருணா அணியினர் மற்றைய ஒட்டுக்குழுக்களின் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈபிடிபி, புளொட், பத்மநாபா குழு ஆகிய ஒட்டுக்குழுக்கள் சிறிலங்காவின் கிழக்கு மாகாண படைத்தளபதியை சந்தித்து முறையிட்டன.


அத்துடன் இந்த ஒட்டுக் குழுக்கள் வேறொரு வழியையும் கையாண்டன. ஈபிடிபி, புளொட், பத்மநாபா குழு ஆகியன கையாண்ட அந்த வழி கருணாவை அச்சத்திற்குள் உள்ளாக்கியது. கருணாவிற்கு எதிராக இயங்கி வரும் பிள்ளையானுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்துவதுதான் அந்த வழி. பிள்ளையானும் கருணாவிற்கு எதிரான ஒட்டுக்குழுக்களுடன் நட்புறவை பேணுவதற்கு முன்வந்தார்.


சுவிஸில் நடைபெற்ற புளொட் இயக்கத்தின் ஒரு கூட்டத்தில் இந்தக் கூட்டணி தன்னை வெளிப்படுத்தியது. அக் கூட்டத்தில் புளொட் இயக்கத்தின் சித்தார்த்தன், பத்மநாபா குழுவின் சிறிதரன், கடிதப் புகழ் ஆனந்தசங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் பிள்ளையான் அனுப்பிய செய்தியும் வாசிக்கப்பட்டது.


பிள்ளையான் தன்னுடைய செய்தியில் கருணா அணி சகோதர ஒட்டுக்குழுக்கள் மீது கொலைத் தாக்குதல்களை நடத்துவதை கண்டித்திருந்தார். புளொட் இயக்கத் தலைவர் உமாமகேஸ்வரனும் சகோதரப் படுகொலையில் கொல்லப்பட்டவர் என்பதையும் பிள்ளையான் சுட்டிக்காட்டினார். புளொட் இயக்கத்தினர் தங்களுக்குள் மாறி மாறி நடத்திவந்த சகோதரப் படுகொலையில் உமாமகேஸ்வரன் கொல்லப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.


இப்படி "சகோதர ஒட்டுக்குழுக்களை" கொலை செய்துவரும் கருணாவிற்கு எதிராக மற்றைய ஒட்டுக் குழுக்கள் ஒரு கூட்டணி அமைத்ததைக் கண்டு கருணா அச்சமுற்றார். இந்த நேரத்தில் ஈபிடிபியையும் கருணா அணியையும் மோதலை நிறுத்திக் கொள்ளும்படி அவர்களது எசமானர்களாகிய சிறிலங்கா படைத் தரப்பும் உத்தரவு போட்டது.


கடைசியில் வேண்டா வெறுப்பாக கருணா தரப்பும் ஈபிடிபி தரப்பும் ஒரு பகமைத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டன. ஆனால் இரு தரப்புமே மறு தரப்பை தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறன என்பதுதான் உண்மை. உள்ளுராட்சி சபை தேர்தல்கள் நடக்கும் பொழுது அனைத்து ஒட்டுக் குழுக்களும் மாறி மாறி தங்களுக்குள்ளும் அத்துடன் மக்களையும் கடித்துக் குதறப் போகின்றன என்று கிழக்கில் உள்ள மக்கள் அச்சம் தெரிவிக்கின்றார்கள்.


தமிழீழம் கேட்டவர்கள் இன்றைக்கு உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றுவதற்காக நடந்து கொள்ளுகின்ற முறை இப்படி இருக்கின்றது. இவர்கள் தங்களையும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் சொல்லித் திரிவதைப் போன்று நகைப்பிற்கிடமான விடயம் வேறு இல்லை.


கிழக்கு நிலவரம் இவ்வாறு இருக்க வடக்கில் முக்கிய போர் முனைகளில் தொடர்ந்து சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. முகமாலைப் பகுதியில் சிறிலங்காப் படைகளும் விடுதலைப் புலிகளும் மாறி மாறி எறிகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.


  வவுனியா மன்னார் எல்லைப் பகுதி தொடர்ச்சியான சண்டைகள் நடைபெறும் பகுதியாகவே சில மாதங்களாக காட்சி அளிக்கின்றது. சில வாரங்களிற்கு முன்னர் விளாத்திக் குளத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் சிறிலங்காப் படையினருக்கு கடும் இழப்பு ஏற்பட்டது. இத் தாக்குதலின் பின்னர் சற்று அமைதியாகக் காணப்பட்ட அப் பகுதி மீண்டும் 14.07.07 அன்று சண்டைக் களமாக மாறியது.


மன்னாரில் வவுனியா - மன்னார் சாலையில் பிரமணாளங்குளத்திலிருந்து தம்பனை நோக்கியும், இரணை இலுப்பைக்குளத்திலிருந்து முள்ளிக்குளம் நோக்கியும் இரு முனைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் பெருமெடுப்பில் முன்னகர்வுகளை மேற்கொண்டனர்.


ஆட்டிலெறிப் பீரங்கிகள், பல்குழல் எறிகணை செலுத்திகள், மோட்டார்களால் கடும் தாக்குதல் நடத்தியபடி சிறிலங்காப் படையினர் முன்னேறினர். முன்னேறுகின்ற படையினருக்கு ஆதராவாக சிறிலங்கா வான்படையினரும் வான் தாக்குதல் நடத்தினர்.


இம் முன்நகர்வுகளை எதிர்த்து விடுதலைப் புலிகள் இரு முனைகளிலும் தீவிர தாக்குதல் நடத்தினர்.. மாலை 5 மணிவரை சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சமர் நடந்தது. கடைசியில் சிறிலங்காப் படையினர் அவர்களது பழைய நிலைகளுக்கு விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர்.


விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலில் 16 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 45 பேர் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தரப்பில் 3 போராளிகள் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். கொல்லப்பட்ட 4 படையினரின் சடலங்கள் கையளிக்கப்படக்கூடிய அளவில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்´தன. படையினரின் பல சடலங்கள் களமுனையில் சிதறிக் கிடக்கக் காணப்பட்டன.


இம் முறியடிப்புத் தாக்குதலில் இராணுவத்தினரின் பவள் கவச வாகனம் ஒன்று விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் தகர்ந்து போனது.


  இந்தச் சண்டை நடந்த அடுத்தடுத்த நாட்களிலும் சிறிலங்காப் படைகள் பாலமோட்டைப் பகுதியில் சிறிய நகர்வுகளை மேற்கொண்டனர். அவைகளும் முறியடிக்கப்பட்டன. இச் சண்டைகளில் சிறிலங்கா படையினரின் இரண்டு உடல்கள் கைப்பற்றப்பட்டன.


கிழக்கை முழுவதுமாக கைப்பற்றி விட்டதாக சொல்லுகின்ற சிறிலங்கா அரசு, வடக்கிலும் சில கிலோமீற்றர் தூரத்தை குறிப்பாக மடுப் பகுதியை கைப்பற்ற முனைகின்றது. ஆனால் கிழக்கின் களநிலவரத்தைப் போல் வடக்கில் இல்லை என்பது நடக்கின்ற சம்பவங்களில் தெளிவாகின்றது.


  ஏறக்குறைய நான்கு மாதங்களாக சிறிலங்காப் படைகள் வவுனியா மன்னார் எல்லைப் பகுதியில் முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கிழக்கில் நான்கு மாத சண்டைகளில் மாவிலாறு, மூதூர் கிழக்கு, சம்பூர் போன்ற பகுதிகளை சிறிலங்காப் படைகளால் கைப்பற்று முடிந்தது. வடக்கில் இன்று வரை ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.


  அதுவும் பல மேற்குலக இராணுவ வல்லுனர்களால் ஆய்வு செய்யப்பட்டு, வன்னியில் விடுதலைப் புலிகளின் பலவீனமான பகுதி எது என்று கண்டறியப்பட்டு, தேர்வு செய்யப்பட்டதுதான் இந்த வவுனியா மன்னார் எல்லைப் பகுதி. அப் பகுதியில் சிறிலங்காப் படைகள் தொடர்ச்சியாக அடி வாங்கி வருவதானது சிறிலங்காவிற்கும் அதனுடைய சார்புச் சக்திகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  இதே வேளை வன்னியில் நடக்கின்ற பெரும் எடுப்பிலான ஏற்பாடுகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன. விடுதலைப் புலிகள் எவ்வித தாக்குதல்களையும் நடத்திவிடக் கூடாது என்பதற்காகவே இழப்புக்களுக்கு மத்தியிலும் சிறிலங்காப் படைகள் வவுனியா மன்னார் எல்லைப் பகுதியில் தொடர்ச்சியான முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.


  ஆனால் இவைகளையும் மீறி வெகு விரைவில் மிகப் பெரிய அதிர்ச்சிகள் சிறிலங்கா அரசுக்கு காத்திருக்கிறது