மலையாளமொழியில் தண்ணீருக்கு “வெள்ளம்” என்று சொல்வார்கள் என்று கேள்விப்பட்டபின் எனக்கு ஒரு கேள்வி தோன்றி அதற்கு விடைதெரியாமல் மலையாளம் “ பறையக்”கூடியவர்களைத் தேடிக்கொண்டு திரிகிறேன்.
வெள்ளமாகத் தண்ணீர் வந்தால் அதை மலையாளத்தில் எப்பிடிச் சொல்வது?
எங்கள் ஊரில் வெள்ளம் வந்த காலத்தை நினைத்துப்பார்க்கிறேன். நூறே நூறு பேர் வந்த விழாக்களையே ஜனவெள்ளம் வந்தது, எள்ளுப்போட்டால் எள்ளு விழாத கூட்டம் (எள்ளுப்போட்டால் வேறென்ன கொள்ளா விழும்) என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இது எங்கள் ஊரில் உண்மையாகவே வெள்ளம் வந்தது.
ஆறு பெருக்கெடுத்து ஊருக்குள் வெள்ளம் வந்து மாடு, கன்றுகள், அறுவடைசெய்து வைத்த நெல்முட்டைகள் எல்லாவற்றையும் கொண்டுபோய் விட்டது என்று அந்தக்கதையெல்லாம் இல்லை. ஆறு என்பது எங்கள் பக்கத்தில் இல்லவே இல்லை. அப்படி இருந்தாலும் ஆறுமுகம் அண்ணையின் பெயரில்தான் இருந்தது. அவர் மேற்சொன்னவற்றை “அபேஸ்” பண்ணிக் கொண்டு போவதுண்டு. அதைத்தான் “ஆறு” கொண்டுபோய் விட்டது என்று எங்கள் பக்கத்தில் சொல்லிக் கொள்வார்கள்.
ஒரு நாள் அதிகாலையிலேயே மழை பெய்யத்தொடங்கிவிட்டது. அம்மா சுடும் தோசையின் மணம் மழைக்காற்றில் பட்டு சுற்றிச்சுழன்று வந்து எனக்கும் தம்பிமாருக்கும் வயிற்றுக்கனலை எரியவைத்தது. குசினிக்கும் நாங்கள் குந்தியிருக்கும் மாலுக்கும் (மாலுக்கும் இங்கெல்லாம் இருக்கின்ற மோலுக்கும் சம்பந்தமேயில்லை) இடையில் நீண்டதொரு முத்தம். ஓடிக்கடந்து, குனிந்து குசினிக்குள் நுழைவதற்குள் உள்ள ஒரேயொரு காற்சட்டையும் நனைந்து விடும். நானும், தம்பிமாரும் பசி கொண்ட வேட்டை நாய்களைப்போல ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
அம்மம்மா செத்தையில் செருகிவைத்த உமிக்கரியை பாவித்து பல்விளக்கி, பனையோலை வேய்ந்த கூரையில் பட்டு வழுகிவரும் மழைத்தண்ணீரில் எட்டி முகத்தைக் கழுவியபின் மழை ஓயுமென்று காத்திருந்தோம். மழைக்கு அந்த எண்ணமே இருக்கவில்லை என்று தெரிந்தபின், கூரையில் சுருட்டி செருகி வைத்திருந்த தாத்தாவின் மான்தோலை பிடித்துக்கொண்டு குசினிக்குள் பாய்ந்தோம். “மச்ச, மாமிசம்; சமைக்கிற குசினிக்குள்ள பூசைக்குப் பாவிக்கிற மான்தோலைக் கொண்டு போறாங்கள்” என்று அம்மம்மா கத்தினா. “மான்தோல் மரத்திலேயே எடுத்தது.. அம்மம்மா” என்று நானும் பதிலுக்கு கத்தினேன்.
தோசைகளை ‘துவம்சம்ஷ செய்து கொண்டிருக்கும்போதுதான் அம்மா சொன்னா… “ இண்டைக்கு பள்ளிக்கு போகவேண்டாம்.. சரியா.. மழை பெய்யுது ”
எங்கள் பள்ளிக்குப் போகும் வழியில் உள்ள குளம் நிரம்பி வழியும் காட்சி மனதில் வந்து போனது. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் பிறகு எப்போதோ..
வழியில் நண்பர்கள் மூவர்; சேர்ந்து விட்டார்கள். எல்லோரும் என்னைப்போலத்தான் சொல்லி வந்திருக்கிறார்கள். ஒழுங்கைகளில் முழங்கால் வரை வெள்ளம் ஓடியது. பள்ளிக்கூடத்திற்கு கிட்ட உள்ள குளம் நுங்கும் நுரையுமாக நிரம்பி வழிந்தது. வரும்போது பார்த்துக்கொள்வோம் என்ற முடிவுடன் பள்ளிக்கூடம் சென்றோம்.
அங்கே நின்ற சில ஆசிரியர்கள் எங்களை வினோதமாகப் பார்த்தார்கள். சாதாரணநாட்களிலேயே அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடும் கூட்டம் இன்று அக்கறையாக வந்திருக்கிறார்களே என்ற ஆச்சர்யம் தான் அது.
எங்களை விரட்டாத குறையாக வீட்டுக்கு போகச்சொல்லிவிட்டார்கள். மீண்டும் அதே வெள்ள ஒழுங்கைகள். இடுப்பு வரை இப்போது வெள்ளம் ஓடியது. காற்றின் உக்கிரத்தில் பனைகள் வளைந்து வளைந்து நிமிர்ந்தன. எல்லோரும் தான் தெப்பமாக நனைந்து விட்டோம்.
குளத்தடிக்கு வந்தால் குளம் எது, கரை எது என்று தெரியவில்லை. கரைக்கான அடையாளங்களாக நின்ற ப+வரசு மரங்களை பார்த்து கொண்டே சென்று குளப்பக்கமாக சாய்ந்து நின்ற அம்மரங்களின் கிளைகளில் ஏறி உட்கார்ந்து கொண்டோம். ஆளுக்கொரு மரம். அங்கிருந்து தண்ணீரில் குதித்து பார்ப்பதாகத் தீர்மானம்.
குதிப்பதற்கு சற்றுமுதல் தான் ஒரு ஞாபகம் வந்தது. என்னுடைய சொத்து பூராவும் என் காற்சட்டை பொக்கெற்றுக்குள்தான் இருந்தது. சொத்தென்றால் வேறோன்றுமில்லை. பள்ளிக்கூடத்தில் நான் அடித்து வென்ற மார்பிள் உருண்டைகள். கோயில் திருவிழா முடிந்து அடுத்தநாள் ஐஸ்கிறீம் விற்கும் வாகனம் நின்ற இடத்தில் மணலுக்குள் கிடந்த ஐந்து சதக்குத்தி, உடையார் வீட்டுக்காணிக்குள் கம்பி வேலிக்கு கீழாக தவழ்ந்து போய் எடுத்து ஒரே ஒரு கடி கடித்த பிஞ்சு மாங்காய், என் சொத்துக்களை நான் வீட்டில் வைத்துவிட்டு வரவில்லை. காரணம் என் தம்பிமார் அவற்றை எனக்குத் தெரியாமலே பாகப்பிரினை செய்த கொள்வார்கள்.
முந்தியும் ஒருதடவை இப்படித்தான் நீட்டுப்பின்னல் ஈஸ்வரி எனக்கு இரவலாகத்; தந்த றோஸ்கலர் அழிறப்பரை திருடியதோடு, அதை சொக்கலேற் என்று நினைத்து சத்தகக் கத்தியால் இரண்டாக வெட்டி சமமாக விழுங்கி விட்டார்கள். கேட்டதிற்கு எங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள பனங்காணியில் கொண்டல் மரத்தின் கீழ் திடீரென்று எழுந்தருளிய சூலத்தைக்காட்டி, “வைரவராணை” என்று சத்தியம் செய்தும் விட்டார்கள். யாருடையதோ வீட்டு கேற்றில் கிடந்த சூலம் மாதிரி கம்பியை அவர்கள்தான் கழற்றிக்கொண்டு வந்து நட்டிருக்கிறார்கள் என்று பிறகுதான் தெரிய வந்தது. அதுதான் அவர்கள் செய்த சத்தியம் பலிக்காமல் போயிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
(இப்போதும் ஈஸ்வரி என் சேர்ட் பொக்கெற்றில் எனக்கு தெரியாமல் காசு எடுத்து விட்டு, கண்டுபிடித்துக் கேட்டால், “அந்த அழிறப்பர் காசுக்கு கழியுங்கோ” என்ற சொல்கிறாள். யார் என்று தெரிகிறதல்லவா? )
எங்கே விட்டேன். பூவரசு மரத்தில், காற்சட்டையில் இருக்கும் சொத்துக்களை நினைத்துக் கொண்டு இருந்தேன். அவை தண்ணீரில் குதிக்கும் போது விழுந்து விட்டால்…
ஒரே ஒரு வழி. சேர்ட், காற்சட்டையைக் கழற்றி பக்குவமாக மரப்பொந்துக்குள் செருகிவிட்டு குதிப்பதுதான். நான் அப்படியே செய்தேன். இடுப்பில் கட்டியிருந்த கறுப்பு அரைஞாண் கயிறைத் தவிர வேறொன்றுமில்லை. நாங்கள் படித்த பாடத்தில் ஒரு கதை உண்டு. தொப்பி விற்பவனின் தொப்பிகளை குரங்குகள் அபகரித்துப்போக, தொப்பிவியாபாரி தன் தொப்பியைக் கழற்றி எறிய குரங்குகளும் அவ்வாறே செய்தனவாம். ஆந்த மாதிரியே நான் காற்சட்டையை கழற்றி அம்மணமாக நிற்க, என் நண்பர்களும் அவ்வாறே செய்தார்கள். குரங்குப் புத்தி.
“தொப், தொப்” என்று வெள்ளத் தண்ணீருக்குள் குதித்தோம். விழுந்த வீச்சுக்கு ப+வரச மரங்களின் கிளைகள் தாழ்ந்து நிமிர்ந்தன. கூடவே “தொப், தொப்” என்று வேறு சத்தங்களும் கேட்டன. எங்கள் சேட், காற்சட்டைகள் புத்தகக்கட்டுக்கள் சுற்றிய பாரத்துடன் வெள்ளத்தில் வீழ்ந்து, எங்கள் கண்களுக்கு முன்னாலேயே தாழ்ந்தும், மிதந்தும் வேகமாக கடந்து சென்றன.
நினைக்க, முடிக்க எல்லாம் நடந்து முடிந்தன. எங்களின் சந்தோசம் எல்லாம் அந்த வெள்ளத்தில் வற்றிப் போய் விட்டது. வீட்டுக்குப் போய் புத்தகங்களுக்கும், காற்சட்டை, சேர்ட்டுக்களுக்கும் என்ன நடந்தது என்று சொல்லுவோம் என்ற கவலை.
இதற்கு மேலாக எப்படி இந்தக்கோலத்தில் வீடுகளுக்குப் போகப்போகிறோம் என்ற யோசனை வரவும் திகைத்துப் போய்விட்டோம். எங்களில் ஒரு புத்திசாலி சொன்ன யோசனைதான் சரியாகப்பட்டது.
“நாங்கள் வரும்போதுதான் பார்த்தோமே.. எல்லா ஒழுங்கைகளிலும் எங்கள் இடுப்புகளுக்கு மேல் வெள்ளம் பாய்ந்தது. நாங்கள் அப்படியே வெள்ள ஒழுங்கைகளுக்கால் நடந்து போனால். ஒருவருக்கும் தெரியப் போவதில்லை. வீடுகளுக்கு கிட்டப் போனவுடன் பாய்ந்து உள்ளே ஓடி விடுவோம்..”
“ஆகா.. அருமையான யோசனை” என்று சொல்லிக்கொண்டே. வெள்ளத்துக்குள் எங்கள் பிறந்த மேனிக்கோலங்களை மறைத்துக் கொண்டே நடந்து போனோம். ஆரம்பத்தில் எல்லாம் சுமூகமாகவே நடந்தது.
ஆனால் போகப்போக வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக இடுப்புக்கு கீழே வந்தது. இன்னும் போக முழங்காலளவு. எங்கள் வீடுகளுக்கு அருகில் போக வெள்ளம் கணுக்காலை தொட்டுத் தடவியது.
யாரோ அலவாங்குகள், கடப்பாரைகளுடன் நின்று றோட்டை வெட்டி வெள்ளத்தை வழிந்தோடச் செய்து கொண்டு நின்றார்கள்.
தூரத்தில் சில இரட்டைப்பின்னல்கள் வருவது தெரிந்தன. அதற்கு பிறகு யார் நின்று பார்த்தது. ஓடினோம். அதல்லவோ ஓட்டம்.
Recent comments
2 weeks 14 hours ago
2 weeks 2 days ago
5 weeks 19 hours ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
17 weeks 2 hours ago
17 weeks 3 hours ago
17 weeks 1 day ago
17 weeks 5 days ago