வெள்ளி, 20 யூலை 2007

வணக்கம்!

இது ஒரு பேப்பரின் 75வது இதழ்.

சும்மா எழுபத்தைஞ்சாவது இதழ், நாலாவது வருசம் எண்டு விலாசம் காட்டாமல் ஒழுங்காய் பேப்பரை அடியுங்கோடா/அடியுங்கோடி என்று நீங்கள் சொல்லிறது கேட்கிறது. இருந்தாலும் உள்ளே ஒண்டுமே இல்லாத வெங்காயங்களான எங்களைப் பொறுத்தவரை இதெல்லாம் மலையேறுற விசயம் என்பதால் எங்கட மகிழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். அவ்வளவுதான்.

இருந்தாலும் ஆண்டு விழா வைர விழா அது இது எண்டு உங்களுக்கு அலுப்புத்தரமாட்டம். விழா வைச்சு எங்களுக்கு உதவி செய்யிற ஆக்களுக்கு எல்லாம் பட்டுச்சீலை போர்த்திறது எண்டால் காஞ்சிபுரத்திலை இருக்கிற அத்தனை தறிகளும் ஓவர் ரைம் செய்ய வேண்டிவரும் என்பதால் அந்த எண்ணத்தை கை விட்டுட்டம்.

ஊருக்கை ஒரு பேப்பரைப்பற்றி கண்டமாதிரி எல்லாம் கதையடிபடுகிறது. அவை சில நேரம் எங்களை வந்து எட்டுகிறது. இவற்றை எங்களுக்கு சுருக்கமாய் எழுதி அனுப்பினால் அவற்றை நாங்கள் மறுக்காமல் பிரசுரிப்பம். திருத்த வேண்டிய விசயம் எண்டால் திருந்தப்பார்க்கிறம். அதை விட்டுட்டு உங்களுக்கை கதைக்கிறது எல்லாம் எங்களுக்கு தெரியவர நியாயமில்லை.

ஒரு பேப்பரிலை வருகிற விளம்பரங்கள் உள்ளே வரும் விசயங்களுக்கு நேர்எதிரானதாய் இருப்பதாக பலரும் முறைப்பட்டுள்ளார்கள். உண்மைதான் ஆசிரியர் குழு விளம்பர விடயங்களில் தலையிடுவதில்லை என்பதால் இது போன்ற தவறுகள் நடக்கின்றன. இந்த விசயத்தில் கூடிய கவனம் எடுக்கிறோம். மற்றப்படி விளம்பரக் காசுக்காய் எங்களை மாத்திக் கொள்ளிற ஆக்கள் இல்லை நாங்கள்.

ஐரோப்பாவிலும், கனடாவிலும் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் நகரங்களில் மாத்திரம் அங்குள்ள தமிழ் நிறுவனங்கள் மூலமாக ஒரு பேப்பரை விநியோகிக்க முடிகிறது. ஏனைய இடங்களில் வாழ்பவர்கள் சந்தாரராக சேர்ந்தால் தபால் மூலம் உங்கட பிரதிகளை பெற்றுக் கொள்ளலாம்


ஜேர்மனி கேவலார் கோயில் திருநாளுக்கு வாங்கோவன் பம்பலாயிருக்கும் எண்டு எங்கட கூட்;டாளிமார் கேட்டிருக்கினம். வந்து உங்களை எல்லாம் சந்திக்க விருப்பம்தான.; பார்ப்பம். (அங்கையும் ஒசியிலை சாப்பாடு தருவினம்தானே?)

ஒரு டிரக்டரி எண்டு ஒரு புது சேவையையும் எங்கட குழு தொடங்கியிருக்கு. அதுவும் ஓசிதான். இனி இடியப்பம் ஒடர் பண்ணிறதெண்டால் இவ்வளவுநாளும் இந்த நம்பருகளை எழுதி வைச்சிருந்த கொப்பியை கடாசிப்போட்டு, டப்பிள்யு டப்பிள்யு ஒருடிரக்டரி டொட் கொம் எண்டு தட்டுங்கோ. எல்லாம் விபரமாய் கிடக்கும்.


சமர் களை கட்ட தொடங்கியிருக்கு.. இன்னும் கொஞ்சக்காலத்துக்குத்தானே அதுக்கிள்ள கடற்;கரை காம்பிங் பாபிகியூ கிறில் எண்டு வெயிலை அனுபவியுங்கோ. மறுக்காமல் உங்கட அனுபவங்களை எங்களோடை பகிர்ந்து கொள்ளுங்கோ.

மீண்டும் சந்திப்போம்.