எதிர்நீச்சல்

இம்மாதம் 3ம் திகதிவரை நடைபெற்று வந்த 48வது லண்டன் திரைப்படவிழாவில் காண்பிக்கப்பட்ட ஒரு சிஙகளத் திரைப்படம் “உடுகன் யாமய” (Against the Tide) அல்லது “எதிர்நீச்சல்” எனத் தமிழில் அர்த்தம் கொள்ளலாம்.

1989 ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ஜே.வி.பியின் வன்முறை நடவடிக்கை களுக்கும், அவற்றுக்கு எதிராக சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்துக்கும் இடையில் சிக்கி, சாகடிக்கப்பட்ட அல்லது காணமற்போன அறுபது ஆயிரம் சிங்கள இளைஞர்களையும், அதனால் ஏற்பட்ட மனித அவலங்களையும் மையப்படுத்தி இந்தக்கதை சொல்லப்படுகிறது.

ஓரு சிறிய கிராமம். அக்கிராமத்திற்கும், அருகில் உள்ள ஒரு சிறு தீவுக்குமிடையிலான போக்குவரத்துக்காக ஓடம் ஓட்டி வயிற்றை கழுவும் நடுத்தர வயதுடைய சிறிபால (சுமிந்த சிரிசேன). சிறிபாலாவின் மனைவி (சாந்தனி செனவிரத்ன) தும்புத்தொழிற்சாலையில் கூலித் தொழிலாளி. எப்பொழுதுமே துருதுருப்பாக இருக்கும் அவனது ஒன்பது வயது மகன் சிறிமல் (மௌலி பெர்னான்டோ) தந்தையே உலகமென இருக்கிறான்.

தீவில் இனந்தெரியாத இளைஞர்களின் நடமாட்டம் அதிகரிக்கிறது. ஆயுதங்களை உரப்பைகளில் காவிவரும் இளைஞர்கள் தஙகளை தீவுக்கு ஏற்றிச்செல்லுமாறு சிறிபாலவை வற்புறுத்துகிறார்கள். வேறு வழியின்றி அவனும் இசைந்து போகிறான்.

இராணுவம் இளைஞர்களைத் தேடி கிராமத்துக்கு வர எல்லாமே நிலை குலைந்து போகிறது. ஓடக்காரன்; சிறிபாலவிலும் இராணுவத்திற்கு சந்தேகம் ஏற்படுகிறது. கிராமத்திலும் தீவிலும் வெடிச்சத்தங்கள் கேட்கின்றன. ஆங்காங்கே ஆற்றிலும் மரஞ்செடிகளுக்கு இடையிலும் சடலங்களை மக்கள் காண்கிறார்கள.; கிராம சேவகர் தலையாட்டியாக இராணுவத்துடன் செயல்படுகிறார். ஊர்ப் பாடசாலை அரச வேண்டுகோளின்படி மூடப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு அடிக்கடி பிறப்பிக்கப்படுகின்றது. இவற்றுகிடையில், தொழிலுக்குபோன சிறிபால காணமல் போய்விடுகிறான்.

சிறிபாலவின் மனைவியும் மகனும் பெரும் அல்லலுக்கு உள்ளாகின்றனர். அவனை பொலிஸ் நிலையம், இராணுவமுகாம் என்று மட்டுமில்லாமல் ஆறு குளங்களில் அகப்பட்ட சடலங்களிலும் தாயும் மகனுமாக தேடுகிறார்கள். தும்புத்தொழிற்சாலை கங்காணி தனித்துபோய்விட்ட சிறிபாலவின் மனைவி மீது சபலம் கொள்கிறான். அவள் இணங்காததால் அவளது வேலையும் பறிபோகிறது. சிறுவனின் உலகம் இருண்டு போய்விடுறது. பிறிதொரு நாளில் இரப்பர் மரத்தடியில், புதைகுழி ஒன்றிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் சிறிபாலவினது என அடையாளங் காணப்படுகிறது.

இந்த அவல வாழ்வொன்றும் எங்களுக்கு அன்னியப்பட்ட விடயமல்ல. ஆனால் அந்தச் சம்பவங்களையும், அதனால் சாதாரண மனிதருக்கு ஏற்படும் நெருக்கடிகளையும், மன அழுத்தங்களையும் அரசியல் நெடியின்றி, யதார்த்தம் மளுங்கடிக்கப்படாமல், ஒரு சிறு குடும்பத்தின் கதையாக உலகுக்கு சொல்கிறார் இயக்குனர் சுதத் தேவப்பிரிய.

சிறிபாலவாக வரும் சுமிந்த சிரிசேன ஓரிரு காட்சிகளில் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தவறிவிடுகிறார். அசம்பாவிதங்களுக்கு (Tragedy) முகங்கொடுக்கும் காட்சிகளில் சிறிபாலவின் மனைவியும் மகனும் பிரதான பாத்திரங்களாக வருகின்றனர். மனைவியாக வரும் சாந்தனி செனவிரத்னவும், மகனாக வரும் மௌலியும் தங்களுக்கு வழங்கபட்ட பாரிய பொறுப்பை அற்புதமாக செய்துமுடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் மகிந்தபாலவின் கமராவில் கிராமத்தின் அழகு மிளிர்கிறது. இருப்பினும் ஒளிப்பதிவில் ஒரு குறை, காலை, மாலை, மதியம் எனப் பொழுதை காட்சிகளில் இருந்து தெரிய முடியாதுள்ளது.

சரத் பெர்ணான்டோவின் கிராமத்துக்கேற்ற இதமான இசையும் தேதுன்ன (வானவில்) என ஆரம்பிக்கும் பாடலும் அருமை.

திரையரங்கை விட்டுவரும்போது நல்ல திரைப்படம் ஒன்றை பார்த்த திருப்தி ஏற்படுகிறது. கூடவே இத்தகைய திரைப்படங்களாவது இலங்கைத் தீவில் முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்போரின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தாதா என்ற ஏக்கமும் ஏற்படுகின்றது.