- 6 யூலை 2006 வெள்ளிக்கிழமை -

வணக்கம்!
ஒரு பேப்பர் நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் எம்மை திட்டித்தீர்த்து கொண்டிருக்கும் ஒரு சிலரை நினைக்கிறோம். அவர்களுக்கு நன்றி சொல்லுகிறோம். நீங்கள் இல்லாட்டா நாங்கள் சோர்ந்து போயிருப்போம். பேப்பரும் ஏனோ தானோ எண்டு வந்திருக்கும். ஐம்பத்திரண்டு பக்கங்கள் கொண்டதாக, ஐந்து நாடுகளிலை வெளிவருவதும் நடந்திருக்காது. ஆகையால் தொடர்ந்து திட்டுங்கோ.

நெல்லுக்கிறைச்ச நீர் புல்லுக்கும் ஆங்கே பொசியிறமாதிரி சிலரின் கொலஸ்ரோலை கட்டுபடுத்தவும் (பொரியல் எண்ணையை உறிஞ்சி),  மாவரிக்கவும், வாசிப்பது தவிர்ந்த மற்றய விசயங்களுக்கும் ஒரு பேப்பர் உதவிறதிலையும் எங்களுக்கு மகிழ்ச்சி. இலகு தமிழிலைதான் எழுதிறம் அதுவும் விளங்காததுகளை விடுவம். ஆனா உங்கட பயன்பாடு முடிந்த உடனே பேப்பரை Recycling Bin க்குள்ள போடுங்கோ காலநிலை மாற்றத்தை கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வாறதிலையாவது நீங்கள் உதவினதாய் இருக்கும்.

நாலுவருசமானாலும் இந்த பேப்பர் விநியோகம் எண்ட விவகாரம்தான் வழிக்கு வாறதாய் தெரியேல்லை. “ஒரு பேப்பரை ஒரு இடமும் காணேல்ல இப்ப அடிக்கிறதை நிப்பாட்டிப் போட்டியளோ” எண்டு சிலர் கேட்கினம். சில கடைக்காரர் என்னெண்டால் “தம்பி கொஞ்சமாய் வையுங்கோ, மிஞ்சினால் காசுகுடுத்துத்தான் எறிவிக்க வேணும்” எண்டினம். எங்களுக்கு ஒண்டுமாய் விளங்குதிலலை. ஓண்டு செய்யுங்கோ எங்கை எப்ப எப்ப கிடைக்கேல்லை எண்டதை தெரியப்படுத்துங்கோ. எங்களாலை முடிஞ்சளவுக்கு விநியோகத்தை சரிப்படுத்திறம்.

முன்னர் சொன்னதுதான், திரும்பவும் சொல்லிறம் உங்களது ஆக்கங்களை நீண்டதாக அதிக பக்கங்கள் கொண்டதாக அனுப்பினால் அவை சுருக்கப்படாமல் பிரசுரிக்கும் வாய்ப்புகள் இருக்காது. அவை சுருக்கப்பட முடியாதுபோயின் பிரசுரித்துக்கு எடுத்து கொள்ளப்படா. ஆகவே உங்கள் ஆக்கங்களை முடிந்தவரை சுருக்கமாக எழுதி (ரைப் பண்ணி) அனுப்புங்கள்.

நீங்கள் நடாத்தும் நிகழ்சிகளை நடக்கவிருக்கும் நிகழ்வுகள் பகுதியில் பிரசுரிக்க விரும்பினால், அவைபற்றிய விபரங்களை நான்கைந்து வரிகளில் எழுதி எங்களுக்கு அனுப்பி வையுங்கள். குறுஞ்செய்தி (SMS) ஆகவும் அனுப்பலாம்.

நாங்கள் ஒரு பேப்பர் மூலமாய் அத்திலாந்திக் சமுத்திரத்தின் இரண்டு அந்தங்களிலையும் இருக்கிற தமிழர்களுக்கிடையில் ஊடகப்ப்பாலம் அமைத்திருக்கிறம் எண்டால் எங்கட ஒரு பேப்பர்காரர் ஒருவர் உறவுப்பாலம் அமைத்திருக்கிறார். அடுத்த கிழமை கரங்கோர்க்கும் அந்த மணமக்களுக்கு உங்கட சார்பிலையும் ஒரு பேப்பர் குடும்பத்தின் சார்பிலையும் வாழ்த்துக் கூறி விடைபெற்றுக் கொள்கிறோம்.

மீண்டும் சந்திப்போம்