சிறிலங்கா அரசபடைகள் தமிழின அழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள இன்றய நிலையில் ஈழத்தமிழர்கள் இந்தியாவின் தார்மீக ஆதரவை எதிர்பார்த்து நிற்கிறார்கள். பதிலுக்கு இந்தியா என்ன செய்கிறது என்பதுதான் தெளிவற்ற விடயமாகவுள்ளது. இருப்பினும் எம்மவர் மத்தியில் இந்தியாவிடமான எதிர்பார்ப்பு குறைந்தபாடில்லை. தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் ஈழத்தமிழருக்கு சற்று ஆதரவான முறையில் பேசிவிட்டாலேபோதும், தமிழ் ஊடகங்கள் அவற்றை மிகைப்படுத்திக்கூற, இனியென்ன இந்தியா நல்ல சமிக்ஜையை காட்டிவிட்டது என்று நாங்கள் நிம்மதியாக உறக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறோம்.
இந்திய அரசின் ஆட்சி மையத்தில் உள்ளவர்களும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் இலங்கை தீவு விடயத்தில் என்ன நடைமுறையை கையாளுகிறார்கள் என்று உற்று நோக்கினால் அவை தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு மாறானதாகவே அமைகின்றது. இந்திய அரச இயந்திரத்தின் இலங்கைத்தீவு தொடர்பான அணுகுமுறையை அறிந்து கொள்வது அத்தனை சுலபமான விடயமில்லை. இருப்பினும் அதன் உளவுப்பிரிவு எவ்விதம் நடந்து கொள்கிறது என்பதிலிருந்து விளங்கிக் கொள்ள முடியம். உளவுப்பிரிவின் நடவடிக்கைகள் மிகவும் இரகசியமானது என்பதால் நம்பகமான சிலதகவல்களின் அடிப்படையிலேயே இந்தக்கட்டுரை வரையப்படுகிறது.
இந்திய உளவு நிறுவனமான றோ ஸ்தாபனம் ஈழப்போராட்டத்துக்கு செய்த பாதகங்களளை விபரிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. எனினும் தமிழீழ விடுதலை இயக்கங்கங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் சகோதரப் படுகொலைகளுக்கு இட்டுச்சென்ற பாதகத்தை மட்டும் நினைவில் நிறுத்தினால் தமிழ் மக்களின் ஒருமித்த சக்தியை றோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது புலப்படும்.
றோவின் கழுகுப் பார்வை இப்போது புலம் பெயர் தமிழர்களில் விழுந்துள்ளதன் அறிகுறிகள் தென்படுகின்றன. இப்படிக் கூறும்போது இதற்கு முன்பு புலம் பெயர் தமிழர்கள் விடயத்தில் அவர்கள் அக்கறையின்றி இருந்தார்கள் என்று அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. இங்குள்ள தமிழர்கள் சிலரை உபயோகித்து அது எதனையோ நிறைவேற்ற எத்தனிக்கிறது என்பதுதான் இப்பொழுதுள்ள நிலவரம்.
ஈழத்தமிழரின் உரிமைகள் விடயத்தில் நெகிழ்ச்சி தன்மை காட்டாத, விலைபோகத தலைமைத்துவத்தை நாங்கள் கொண்டுள்ளோம் என்பது எங்களுக்கு எவ்வளவு ஆறதலைத்தருகிறதோ அதே அளவுக்கு இந்தியத் தலைமையை பொறுத்தவரை உறுத்தலான விடயமாக இருக்கிறது. ஏற்கனவே விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தை அழிக்கமுயன்று தோற்றுப்போயுள்ள நிலையில், இந்திய அரச இயந்திரம், இப்போது வேறு மாற்று வழிகளை தேடிவருகிறது. இதனடிப்படையில்
விடுதலைப்புலிகளுக்கு இணையான அரசியல் தலைமைத்துவத்தை புலம்பெயர் தேசத்தில் குறிப்பாக பிரித்தானியாவில் ஏற்படுத்தும் வகையில் காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
முன்னரும் பலதடவைகள் இதுபோன்ற முயற்சிகள் இலங்கைதீவை மையப்படுத்தி செய்யப்பட்டு அவை தோல்வியில் முடிவடைந்தது தெரிந்ததே. வரதராசப்பெருமாள், அமிர்தலிங்கம் என ஆரம்பித்து கருணா வரை இந்த தெரிவுகள் இருந்த போதும் இவர்கள் வெற்று வேட்டுக்கள் ஆகினார்கள் என்பதுதான் உண்மை.
விடுதலைப்புலிகளுக்கு பதிலான அல்லது இணையான அரசியல் தலைமைத்துவத்தை ஏற்படுத்தவது சாத்தியமில்லை என்பதும், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் விடுதலைப்புலிகளையே தங்களது ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டுள்ளாரகள் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ள நிலையில், ஆகக்குறைந்தது இந்த ஏகபிரதிநிதிகள் விடயத்தை உடைத்துவிட்டாலே போதும் என்ற நிலையில் தான் அதன் தற்போதைய முயற்சிகள் இருக்கின்றன. தனித்து விடுதலைப்புலிகளை மாத்திரம் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்வது மேற்கு நாடுகளிற்கும் ஏற்புடையதல்ல என்பதால் றோவின் முயற்சிகளுக்கு அவர்களது ஆதரவும் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஈழப் புரட்சியமைப்பு என்ற ஈரோஸ் இயக்கத்தின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் சிலரை வைத்து இந்த புதிய தலைமைத்துவ உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுவருகிறது. புலிஎதிர்பாளர்கள் என்று முத்திரை குத்தியபடி புலிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்பதற்காக தமது மூக்கறுக்கக்கூட தயாராயிருப்பவர்;கள் புலத்தில் இரண்டு மூன்று டசினுக்கு மேல் இருக்கையில் தமிழ்தேசியவாதிகள் என அடையாளங் காணப்பட்ட ஈரோஸ் தோழர்கள்மீது றோ ஏன் கவனம் செலுத்தவேண்டும்?
புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் மக்கள் மத்தியில் புலி எதிர்ப்பாளர்களுக்கு இருக்கும் “மதிப்பும் மரியாதையும்” றோவுக்கு தெரியாமலிருக்க நியாயமில்லை. இதற்காக பெரிதாக கருத்துக்கணிப்பு எதுவும் நடாத்தத் தேவையில்லை. சம்பந்தப்பட்டவர்களுடன் சில நிமிடம் பேசினாலே அவர்களுக்கு பிடித்துள்ள மனோவியாதியை அறிந்து கொள்ளமுடியும்.
ஆனால் ஈரோஸ் தோழர்கள் விடயத்தில் நிலமை சற்று வித்தியாசமானது. ஈரோஸ் தீவிரமாக செயற்பட்ட காலத்தில் எமது மக்கள் அதனை விடுதலைப்புலிகளிற்கு அடுத்தநிலையில் வைத்து நேசித்தார்கள். இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் அது பாம்புக்கு வாலைiயும் மீனுக்கு தலையையும் காட்டும் விலாங்கு மீனாகத் தோற்றமளித்து மக்களின் வெறுப்பை சம்பாதித்திருந்தது. இருப்பினும், திரு. பாலகுமாரன தலைமையில் ஈரோஸ் போராளிகள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து செய்பட ஆரம்பித்ததிலிருந்து தமிழ்தேசிய ஆதரவாளர்கள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு தொடர்ந்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் ஈரோஸ் இயக்க நிறுவுனர் காலஞ்சென்ற திரு. இரத்தினசபாபதியின் நினைவாக மாநாடு ஒன்று இவ்வமைப்பின் முன்னாள் தோழர்கள் சிலரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 24ம் திகதி லண்டன் பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் உரையாற்ற பல்வேறு நாடுகளிலிருந்து பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தவிருப்பது ராஜபக்ச அரசில் அமைச்சராகவிருக்கும் பசீர் சேகு தாவுத். இவர் 1989 ஆண்டு பொதுத்தேர்தலில் ஈரோசின் நியமன உறுப்பினராக நாடாளுமன்றுக்கு நியமிக்கப்பட்டவர். சிலமாதங்களிலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்கும், பின்னர் முஸ்லிம் கொங்கிரசுக்கும் தாவிக்கொண்டவர்.
ஈரோஸ் இயக்கத்துக்கு சார்பானவர்களான பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் சின்னத்தம்பி, லண்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் கணேசன் ஆகியோருடன் ஈரோஸ் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களாக லண்டனிலிருந்து செயற்பட்ட ரவி சுந்தரலிங்கம் (குடும்பி ரவி), குகேந்திரன் (ஹொங்கொங் குகன்) ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றுகிறார்கள்.
இங்கு முக்கிய பேச்சாளராக அழைக்கப்பட்டிருப்பவர் சர்ச்சைக்குரிய றோ சந்திரன். ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் தமிழ்நாட்டில் நிலைகொண்டிருந்து காலத்தில் றோவின் முக்கிய அதிகாரியாக இருந்த இவர் தற்போது ஓய்வுபெற்று South Asia Analysis Group (www.saag.org) என்ற இந்திய பாதுகாப்புக் கொள்கை வகுப்பாளருக்கான ஆய்வு மையத்தின் இயக்குனராகப் பணிபுரிகிறார். ஈரோஸ் இயக்கத்தின் இராணுவப்புரிவுக்கு பொறுப்பாக இருந்த நேசதுரை திருநேசனுடன் (சங்கர் ராஜி) நெருங்கிய தொடர்பை வைத்திருந்தவர் சந்திரன.;
சந்திரன் இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருப்பது ஈரோஸ் இயக்கத்தின் முன்னாள் தோழர்கள மத்தியில் பெரும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. இதுவிடயமான ‘ஹொங்கொங்’ குகனுடன் அவர்கள் தொடர்பு கொண்டபோது. சந்திரன் றோவிலிருந்து ஓய்வுபெற்று விட்டார் அவருக்கும் றோவுக்கு இப்போது எந்த தொடர்புமில்லை என அவர் கூறியதாக் ஈரோஸ் தோழர் ஒருவர் இக்கட்டுரையாளரிடம் தெரிவித்தார். ஒரு நாட்டின் தேசிய உளவு அமைப்பிலிருந்து ஓய்வு பெற்றவர் அதனுடன் தொடர்புகளை பேணாமல் வீட்டிலிருந்து பஜகோவிந்தம் பாடிக்கொண்டு இருப்பார் என குகன் எங்களை சுத்துகிறார் என அந்தத் தோழர் விசனப்பட்டார்.
ஜே.வி.பி இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பவரும், சிறிது காலம் SPUR என்ற சிங்கள இனவாத அமைப்புடன் இணைந்து செயற்பட்டவருமான லயனல் போபகேயும் இம்மாநாட்டில் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் இளையதம்பி என அழைக்கப்பட்ட தோழர் இரட்ணாவுக்கு சைவ முறைப்படி அந்தியேஸ்டியை விம்பிள்டன் பிள்ளையார் கோவிலில் விசேட பூசையுடன் நடாத்தி முடித்துவிட்ட நிலையில், இந்த மாநாட்டின் மூலம் முன்னாள் சிவப்புச் சட்டைக்காரர்கள் என்னத்தை சாதிக்கப் போகிறார்கள்? வழமைபோல் உலகமயமாதலுக்கு எதிரான ஒப்பாரியையா வைத்துவிட்டு தங்கள் தொழிலுக்கு போய்விடுவார்களா? அல்லது மாநாட்டினை காரணங்காட்டி றோவின் துணையுடன் இன்னொரு முறை தலைமை ஆசையுடன் அலையப் போகிறார்களா?
“The Academy of Science and Arts for the Tamils of Ceylon” என்ற இதுவரை அறியப்படாத அமைப்பே இந்த மாநாட்டை ஏற்பாடு செய்யவிருப்பதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் தென்மேற்கு லண்டனில் தன்னார்வ நிறுவனம் ஓன்றை நடாத்திவரும் “நடுநிலைமையாளர்” ஒருவரே இந்த மாநாட்டினை ஒழுங்கு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. அண்மைகாலமாக இதுபோன்ற இடைத்தரகு வேலைகளில் முனைப்புட் ஈடுபட்டு வரும் இந்தப் பெரியவர் கருணாவை லண்டனுக்கு அழைத்து சந்திப்பு ஓன்றை நடாத்த எடுத்த முயற்சிகள் பற்றிய செய்திகளும் இப்போது கசியத் தொடங்கியுள்ளன.
Recent comments
9 weeks 2 days ago
9 weeks 2 days ago
9 weeks 3 days ago
10 weeks 22 hours ago
10 weeks 22 hours ago
10 weeks 5 days ago
11 weeks 1 day ago
11 weeks 5 days ago
12 weeks 5 days ago
12 weeks 5 days ago