அலசுவாரம் - 72
உலக வரலாற்றில் இத்தகையவோர் பின்னடைவு வேறு எந்தத் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்திலும் ஏற்படவில்லை. ஏற்படவும் கூடாது. பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகள் அடக்கியொடுக்கப்பட்டர்கள் ஆனாலும் அவர்களுக்கென ஆளும் அரசொன்றிருக்கிறது. அதற்கும் மேலாய் இந்திய நடுவண் அரசின் பிரதம மந்திரியாகவே சீக்கியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் எத்தனையோ பிரமிக்கத்தக்க தியாக வேள்விகளைச் செய்து தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்பிய நமக்கோ ஒரு பிடி மண்தானும் நமதென்று சொல்லிக்கொள்ளக் கிடைக்கவில்லை. எல்லாமே பொய்யாய்க் கனவாய் புனைகதையாய்ப் போய்விட்டது.
இப்போது நாம் மீண்டும் ஆனாவிலிருந்து தொடங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். இத்தனைக்கும் கேட்கப் பார்க்க நாதியற்றவோர் அனாதை இனக்குழுமமாக நாம் தெற்காசியப் பிராந்தியத்தில் வாழவில்லை. சுருங்கிப் போய்விட்ட பூமிப்பந்தில் ஓர் வல்லரசின் மிக முக்கிய தேசிய சக்தியாக பத்தொன்பது கடல்மைல் தூரத்தில் எமது தொப்பூழ்க்கொடி உறவுகள் எமக்காகத் தங்கள் அனுதாபக்குரலை எழுப்பியவண்ணமே இருக்கின்றார்கள். ஆனாலும் நாம் அடக்கி ஒடுக்கப்பட்டுப் போனோம்.
நாம் நடத்திய தூரநோக்கற்ற முட்டாள்தனமான அரசியல்தான் இதற்குக் காரணமோவென்று எண்ணத் தோன்றுகின்றது. வரலாற்றில் சில தவறுகள் விடப்பட்டு விட்டதுவென்னவோ உண்மைதான். ஆனாலும் அதற்கான தண்டனை இந்த அளவுக்குக் கிடைக்க வேண்டுமா? ஏற்க முடியவில்லை.
ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. இனி மீண்டும் நாம் சாம்பரிலிருந்து புத்துயிர்க்கும் பீனிக்ஸ் பறவைகளாய்; எம்மைச் சுதாரித்துக்கொண்டு ஒரு சரித்திரத்தின் அடுத்த அத்தியாயத்தை எழுதத் தொடங்கவேண்டும். நிதானமும் தூரப்பார்வையும் கொண்டவோர் தலைமை எமக்கு இன்று வேண்டும். தேசியத் தலைவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பக்கூடிய அந்தத் தலைமையை வரவேற்போம்.
அண்ணனிட்ட ஆணையை நிரப்புவதற்காக ஆயிரமாயிரமாய் அணிதிரண்டு நின்ற எமது வீரமறவர்கள் ஆசியப் பிராந்தியத்தின் ஆதிக்கப் போட்டியில் பலிக்கடாக்களாக்கப்பட்டுப் போனார்கள். உலகவரலாற்றில்: நெஞ்சுறுதியும், வீரமும், தன்மானமும், கொள்கைப்பற்றும், பண்பாடும், நேர்மையும், அன்பும் பாசமும் கொண்டு தன் இனத்தின் மீட்சிக்காகவும், அடக்கியொடுக்கப்படும் தேசிய இனங்களின் மொத்த விடுதலைக்கான முன்னோடியாகவும் போராடிய தேசியத் தலைவனை அவனது அருமை பெருமைகளைப் புரிந்துகொள்ளாமல் தமிழினம் இன்று இழந்து நிற்கின்றது. உலகில் தோன்றிய விரல்விட்டு எண்ணக்கூடிய, மக்கள் தலைவர்களில் தம்பி பிரபாகரன் முதலாவதாக வைத்து எண்ணப்படவேண்டியவன்.
ஸ்பாட்டக்கஸ் போன்ற முற்கால சரித்திர நாயகர்கள் தொடங்கி சேகுவேரா போன்ற பிற்கால விடுதலை வீரர்கள் வரை யாருக்கும் சளைக்காத தீரத்துடன் போராடியவன் எமது தேசியத்தலைவன். அவர்களின் வீரவரலாற்றையொத்தது அவனது வரலாறு. ஆங்கிலத்தில் இத்தகைய காவிய நாயகர்களை “லீஜென்ட்” என்று கூறுவார்கள்.
இறைவன்: உளன் என்போருக்கு உள்ளான் இலன் என்போருக்கு இல்லான். நல்லவன் என்போர்க்கு நல்லான் தீயன் என்போர்க்குத் தீயன். அவ்வாறுதான் தேசியத்தலைவரும் இன்று கணிக்கப்படுகிறார். இனி அடுத்தது என்ன? தேசியத் தலைவருக்கு நமது இறுதி மரியாதையைச் செலுத்திவிட்டு அடுத்த நடவடிக்கையைப் பார்ப்பதுவா?
ஏன் அதற்கு என்ன அவசியம் வந்தது?
உள்ளானாய் இல்லானாய் உளம் நிறைய வீற்றிருக்கும்
நல்லோனுக் கேன்நாம் நடுகல் இடவேண்டும்?
அன்னை தமிழாள் அருந்தவத்தால் ஈன்றவனை
என்னத்துக்காக இறந்தவனாய் ஆக்குவது?
என்றும் எமது இதயத்திலுள்ளவனை
கொன்றொழித்து ஏன் நாம் குழியில் இடவேண்டும்?
Recent comments
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
14 weeks 1 day ago
14 weeks 2 days ago
1 year 5 days ago
1 year 6 days ago
1 year 6 weeks ago