ஐ.எம்.எப் என்கிற சர்வதேச நாணய நிதியம் சிறிலங்காவிற்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க முன்வந்துள்ளது. இக்கடனுதவி பகுதி பகுதியாக வழங்கப்பட இருப்பதாகவும், அதன் முதற்பகுதியாக 322 மில்லியன் டொலர் உடனடியாக வழங்கப்படவிருப்பதாகவும் மேற்படி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமையாக எல்லாச் செய்திகளுக்கும் இருக்கிறமாதிரி இச்செய்தி தொடர்பாகவும்; பல ஆய்வுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவரவர் தனக்குத் தெரிந்த கோணத்தில் நின்று கொண்டு ஆய்வு செய்கிறார்கள். ஆளாளுக்கு யானையின் நான்கு கால்கள், வால், துதிக்கை ஆகியவற்றை பிடித்துக் கொண்டு இதுதான் யானை என்கிற மாதிரியாக இந்தவிடயம் பற்றி எழுதுகிறார்கள். ஏனெனில் யானையை (இவ்விடயம் தொடர்பாக) முழுவதுமாக அறிந்தவர்கள் யாரும் எழுதுவதாகத் தெரியவில்லை. அப்படி எழுதினாலும் உண்மையான பின்னணியை அவர்கள் எழுதித் தொலைப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஆகையால் முன்னர் சர்வதேச நாணய நிதியம் நடந்து கொண்ட விதத்திலிருந்து, சில அனுமானங்களின் அடிப்படையில் எனது கருத்துகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இவ்விடயம் தொடர்பாக எனக்கு ஆலோசனைகள் தந்த நண்பர்களுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்.
சிறிலங்கா அரசாங்கம் பாரிய மனிதவுரிமை மீறல்களைப் புரிந்து வருவதை காரணம்காட்டி, அந்நாட்டிற்கு கடனுதவி வழங்குவதற்கான இது உகந்த தருணம் அல்ல எனவும், தாமதப்படுத்துமாறும், சர்வதேச நாணய நிதியத்தை, அமெரிக்க இராஜங்க அமைச்சர் கில்லரி கிளின்ரன், அமெரிக்க செனட் உறுப்பினர்கள், கனேடிய, பிரித்தானிய அரசியல்வாதிகள், மனிதவுரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப்பலரும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். கடன் வழங்கும் தீர்மானத்திற்கு அமெரிக்கா ஆதரவாக வாக்களிப்பதனை தடுத்து நிறுத்துமாறு, அமெரிக்காவினைத் தலைமையகமாகக் கொண்ட இனவழிப்புக்கு எதிரான தமிழர் அமைப்பு அங்குள்ள நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், கடந்த 24ம் திகதி நடைபெற்ற கடனுதவி வழங்குவது தொடர்பான வாக்கெடுப்பில், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இவ்வாக்கெடுப்பில் கடனுதவியை வழங்குவதற்கு உறுப்புரிமையுள்ள மற்ற நாடுகள் ஆதரித்து வாக்களித்ததனைத் தொடர்ந்து சிறிலங்காவிற்கு கடனுதவி வழங்க ஐ.எம்.எப். முன்வந்துள்ளது. இது மகிந்த சிந்தனைக்கு கிடைத்த வெற்றியாக, சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசு உள்ளுரில் இவ்வாறு, தம்பட்டம் அடித்தாலும். அதற்காக அவர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாடவில்லை, சற்று அடக்கி வாசித்துள்ளனர்.
2001ம் ஆண்டு, சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில், ஐ.எம்.எப். சுிறிலங்காவிற்கு, 253 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க முன்வந்தது. அதில் முதலாவது தவணைப் பணத்தை பெற்றுக் கொண்ட சந்திரிகா அரசு, இரண்டாம் தவணைக்கான கடனை பெற்றுக் கொள்ளவில்லை. இக்கடன் உதவியைப் பெறுவது தொடர்பாக, எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பினைக் காட்டியபோது, இக்கடனைப் பெறாவிட்டால் நாடு பொருளாதார ரீதியல் நிலை குலைந்து போய்விடும் என சந்திரிகா தமது அரசின் முடிவை அப்போது நியாயப்படுத்தியிருந்தார்.
2005ல் ஆட்சிக்கு வந்த மகிந்த இராஜபக்சவோ, ஐ.எம்.எப் இன் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு அதன் கடனுதவியை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என வீராப்பு பேசிக்கொண்டிருந்தார். அப்போது வேண்டாம் என்றவர்; இப்போது ஏன் ஆலாய்ப் பறந்தார்? முதலில் தயக்கம் காட்டியவர்கள், ஏன் கேட்டதற்கும் அதிகமாகக் கொடுத்தார்கள்? என்ற கேள்விகள் யாருக்கும் எழலாம். இரண்டு கேள்விகளுக்கும், வேறு வழியில்லை என்பதே பதிலாக அமையும். ஆனால் இரண்டு தரப்பினது நிலமையும் வெவ்வேறு கோணத்தில் அணுகப்படவேண்டும்.
பொருளாதார நெருக்கடிகளால் அவதிப்படும் நாடுகள் ஐ.எம்.எப். கடனைப் பெறுவது என்பது, இறுதிக்கட்டமாய் செய்யப்படுகிற ஒரு நடவடிக்கை. இது உள்ளுரில் அறாவட்டிக்கு கடன் கொடுப்பவனிடம் கடன் பெறுவதற்கு ஒப்பானது. மற்றய எல்லோரும் கை விரித்துவிட்டார்கள் என்பதுதான் அர்த்தம். இதனை விளங்கிக் கொள்ள வங்கிகளில்;; கடன் பெறுவதற்கும், கந்து வட்டிக்காரனிடம் கடன்பெறுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உண்ரந்து கொண்டால் போதுமானது. வங்கியில் நீங்கள் கடன் பெற்றால், அவர்கள் உங்களது மற்றய நடவடிக்கைகளில் தலையிட மாட்டார்கள். நீ எங்களுக்கு கடனாளி, உன்னுடைய மனைவி ஏன் இத்தனை நகை போட்டிருக்கிறாள் என்று வங்கி அதிகாரி உங்களைப் பார்த்து கேட்கமாட்டார். உள்ளுரில் அறாவட்டிக்கு கடன் பெற்றால், கடன தந்தவர்; வேண்டுமானால் இப்படிக் கேட்கக்கூடும். சரவதேச நாணய நிதியமோ தாங்கள் கடன் வழங்குகிற நாடுகளின் உள்விவகாரங்களில் புகுந்து விளையாடும். கட்டுப்பாடுகளைப் போடும். அநாவசியச் செலவைக் குறைக்கச் சொல்லும். மானியங்களை நிறுத்தச் சொல்லும். உள்ளுர் நாணயத்தின் பெறுமதியைக் குறைக்கச் சொல்லும், மீறினால் அடுத்த தவணை பணத்தை இழுத்தடிக்கும் அல்லது வழங்காது விடும். இந்த தலையிடிக்கு முகம் கொடுக்க முடியாமல் இருப்பதால்தான், நாடுகள் ஐஎம்எப் கடனுதவியை பெறத் தயக்கம் காட்டுகின்றன.
இவையெல்லாம் சரி, சிறிலங்கா பொருளாதார நெருக்கடியால் அல்லாடுகிறது என்றால், ஐஎம்எப் ஏன் கேட்டதற்கு அதிகமாகக் கொடுக்கிறது என்ற கேள்வி எழக்கூடும். நாட்டு வழக்கில் சொன்னால், சோலியன் குடுமி சும்மா ஆடாது. இரண்டாவது உலக மகாயுத்தத்திற்கு பின்னர், ஐஎம்எப் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே, சர்வதேச பொருளாதாரத்தின் உறுதித்தன்மையைப் பேணுவதுதான். நாடுகளின் தவறான நிர்வாகத்தால், அந்நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும்போது, அது சர்வதேசப் பொருண்மியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்விதம் சர்வதேசப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதனைத் தடுப்பதற்காகவே நாடுகளுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.
சிறிலங்கா தமிழ்மக்கள் மீது நடாத்தப்படும் இனவழிப்பு யுத்தத்திற்காக பெருமளவு நிதியை சர்வதேசச் சந்தையில் கடனாகப் பெற்றுச் செலவு செய்து வருகின்றது, இதர பணய விரயத்தினாலும் அதன் பொருளாதாரம் நிலை குலைந்துளளது அது முற்றுமுழுதான வங்குரோத்து நிலையை எட்டினால், அதனால் பாதிக்கப்படுபவர்களில்;, சிறிலங்காவிற்கு கடனளித்த ர்ளுடீஊ போன்ற வெளிநாட்டு வங்கிகளும், அங்கு முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கும். இவ்விதம் சர்வதேச அளவில் இயங்கும் வெளிநாட்டு வங்கிகள் பாதிக்கப்படுமாயின் அது ஒன்றுடன் ஒன்று தங்கியுள்ள சர்வதேசப் பொருளாதாரச் சந்தையிலும் பாதிப்பினை ஏற்படுத்தும். இந்நிலையை தவிர்க்க, சிறிலங்கா வங்குரோத்து நிலைக்குச் செல்லாமல் காக்கப்படவேண்டியது அவசியமாகும். சிறிலங்காவிற்கு முதற்தொகுதியாக வழங்கப்படும் 322 மில்லியன் டொலர் கடனில், வெளிநாட்டு வங்கிகளினால் வழங்கப்பட்ட கடனை மீளளிப்புச் செய்வதற்கு முன்னுரிமையளிக்குமாறு ஐ.எம்.எப் வேண்டிக் கொண்டுள்ளது என்பதனை இங்கு கவனத்தில் எடுக்க வேண்டும்.
இனி, இவ்விடயத்தில் உள்ள அரசியலுக்கு வருவோம். மேற்கு நாடுகள் எங்களுக்கு அறிவுரை செய்யத் தேவையில்லை கிழக்கு (ஆசிய) நாடுகளே எங்களுக்கு உண்மையான நண்பர்கள் என்றும் உள்ளுரில் முடிவாக்கப்படும் தீர்வுத்திட்டதையே தாங்கள் நிறைவேற்றப்போகிறோம் என்றெல்லாம் வாய்ச் சவாடாலடித்த மன்னர் மகிந்த ராஜபக்சவும் பரிவாரமும், ஐ.எம்.எப். நிபந்தனைகளுக்கு உடன்பட்டுச் செயற்பட முன்வந்ததன் மூலம் மேற்குலகின் பொறிவலைக்குள் விழுந்து வி;ட்டதாகச் சில அரசியல், பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இன்னும் சிலரோ, சிறிலங்கா முழவதுமாக சீனமயப்படுத்தப்படுவதனை தடுப்பதற்கே இக்கடனுதவி வழங்குவதை மேற்கு நாடுகள் எதிர்க்கவில்லை எனக் கருத்துத் தெரிவிக்கிறார்கள். பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வலுப்பெறுவதை அச்சத்துடன் அவதானித்து நிற்கும் இந்தியா, சிறிலங்கா சீனாவில் தங்கியிருப்பதைக் கட்டுப்படுத்த, அமெரிக்காவை வேண்டிக்கொண்டதன் பேரில் இக்கடனுதவி வழங்கப்படுவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
ஐ.எம்.எப். கடனுதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், சிறிலங்காவில், மேற்கு நாடுகளின் ஆதிக்கம் மறைமுகமாகவேனும் தலை தூக்கும் என்பதில் ஐயமில்லை, ஆனால் அவை தமது நலனைப் பேணிக்கொண்டு சிறிலங்கா அரசுடன் சமரசத்துக்கு செல்லுமா என்ற அச்சம் தமிழ் மக்களிடையே நிலவுகிறது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் அழிவிற்கு காரணமான யுத்தத்திற்கு இவை மறைமுகமான ஆதரவு வழங்கின என்பதிலிருந்து இவ்விதம் அச்சப்படுவதில் நியாயமிருக்கிறது.
மாறாக மேற்குலகின்; உள்நுழைவு, மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை, வதைபுரிமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவித்தல், சர்வாதிகர நிலையை அடைந்திருக்கும் சிறிலங்கா ஆட்சிமையத்தை ஐனநாயகப்படுத்துதல் போன்ற விடயங்களில், காத்திரமான பங்களிப்பை வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் தமிழ் மக்களிடையே உள்ளது.
Recent comments
15 hours 50 min ago
2 days 14 hours ago
4 days 15 hours ago
5 days 7 hours ago
6 days 8 hours ago
1 week 13 hours ago
1 week 1 day ago
1 week 2 days ago
1 week 2 days ago
1 week 3 days ago