தமிழ் குடிசார் சமூகத்தினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு விடுத்துள்ள பகிரங்க விண்ணப்பமும், அதற்கான எதிர்வினைகளும், தாயக, புலம்பெயர் அரசியல் நிலவரத்தை தெளிவாக வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தாராண்மைவாத சனநாயக அமைப்பில் குடிசார் சமூகத்தின் வகிபாகம் என்பதன் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டால், தாயகத்தில் வாழும் பல்வேறு துறையினைச் சேர்ந்த எழுபத்தைந்து பேரின் ஒப்பத்துடன் வெளியாகியிருக்கும் இவ்வறிக்ககையின் காத்திரத்தன்மை புரியும்.
குரல் மறுக்கப்பட்டவர்களாக, அடிபணிவு அரசியலுக்கு தயாராக இருப்பவர்கள் எனப் பொதுவாக விபரிக்கப்பட்ட மக்கள் சமூகத்திலிருந்து, இத்தகைய ஆணித்தரமான கருத்துகள் வெளிவருவது துணிகரமான செயற்பாடு எனபதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை. தாயக மக்களுக்கு தொல்லை கொடுப்பவர்களாக, தொலை தூர தேசியவாதத்தை தூண்டுகிறவர்களாக புலம்பெயர் அலைந்துழல்வு தமிழ்ச்சமூகம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டினை முற்றாக மறுதலிப்பதாக இவ்வறிக்கை வெளிவந்திருக்கிறது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் விடயத்தில் எதுவித விட்டுக் கொடுப்புகளுக்கும் தாயக மக்கள் தயாராக இல்லை என்பதனை அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் தமிழத் தேசியக் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்ததன் மூலம் அவர்கள் மௌனமாக நிருபித்திருந்தார்கள். இப்போது அதனையே இவ்விண்ணப்பம் மூலம் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
அரசியல் தீர்வு விடயத்தில் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனவற்றை முன்வைத்தே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு போட்டியிட்டது, ஆனால் அதனை மீள உறுதிசெய்யுமாறு வேண்டும் இவ்விண்ணபத்திற்கான தமது பதிலை வழங்குவதில் காட்டுகிற தயக்கம் அவர்கள் மீதான ஐயத்தை மேலும் அதிகரிக்கிறது.
புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தமிழரமைப்புகளும் இவ்விண்ணப்பம் தொடர்பாக கருத்து வெளியிடுவதனை தவிர்த்து வருகின்றன. நாளுக்கு ஒரு அறிக்கையை வெளியிடும் நாடுகடந்த அரசாங்கத்தினர் முக்கியத்துவம் வாய்ந்த இவ்விண்ணப்பத்தை கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அபிமானிகளோ அறிக்கையில் என்;ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதனைக் காட்டிலும் அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் மீது சேறுவாரிப் பூசுவதிலேயே கவனத்தைச் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தயாகத்தில் உள்ள குடிசார் சமூகத்தினருடன் தொடர்புகளைப் பேண முடியாதவர்கள் புலம்பெயர் நாடுகளிலிருந்து எதனைச் சாதிக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதது.












