தமது ஆயுதங்களை மௌனிப்பதாக விடுதலைப்புலிகள் அறிவித்ததுடன் ஆயத வழியிலான போராட்டம் நிறைவுக்கு வந்தது. அதன் பின்னர் அவர்கள் எதுவித வன்முறையிலும் ஈடுபட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் சிறிலங்கா அரசாங்கப் படைகளும் அதனுடன் இணைந்து செயற்படுபவர்களும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றன.
இவ்வன்முறைகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் தாயக மக்கள் தவித்து நிற்கும் நிலையில், புலம் பெயர் மண்ணிலும் வன்முறைகளை தூண்டுவதில், இவ்விடயத்தில் நலன் பெறுபவர்கள் முனைந்து வருகிறார்கள். ரொறான்ரோ, லண்டன், பரிஸ் என தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் நகரங்களில், அரசியற் செயற்பாடுகளினை முன்னெடுப்பவர்கள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் போன்றோர் தாக்கப்பட்டு வருகிறார்கள். ஊடகவியலாளர்கள், அரசியல் விமர்சகர்கள் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, அண்மையில் மில்ரன் கீன்ஸ் பகுதியில் திரு. ரூபன் அவர்கள் தாக்கப்பட்டார். கடந்த ஞாயிறன்று பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. மதிதரன் (பரிதி) அவர்கள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இத்தாக்குதல்களின் இலக்குகளை நோக்குமிடத்து இவை நன்கு திட்டமிட்ட முறையில் சில தமிழர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன என்பது தெரியவருகிறது. அக முரண்பாடுகளின் காரணமாக அல்லது அதிகாரப் போட்டியின் காரணமாக இத்தாக்குதல்கள் நடைபெறுவதாக சிலர் வியாக்கியானம் கொடுக்க முனைந்தாலும், இவை புலம்பெயர் மக்களின் அரசியல் முன்னெடுப்புகளை முறியடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்பதனை உறுதிபடக் கூறமுடியும்.
தாயகத்தில் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்குமா இல்லையா என்பதனை காலம் தீர்மானிக்கும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் எக்காலத்திலும் அமைதி வழியான செயற்பாடுகளே நடைபெறவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்நிலையில் வன்முறைகளில் ஈடுபடுவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுமேயானால், சனநாயக வழிமுறையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பது பற்றி உதட்டளவில் பேசுவதில் எதுவித பயனுமில்லை. தமது அரசியல் எதிரிகள் மீதான தாக்குதல்களை மௌனமாக ஆதரிக்கும் சிலரின் நடவடிக்கைகள் வன்முறையை ஊக்குவிப்பதாகவே அமைகிறது.












